விவசாய திருத்த மசோதா சிறப்பம்சங்கள்

விவசாய திருத்த மசோதா சிறப்பம்சங்கள்

Share it if you like it

எந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் நடிப்பவர்கள், விவசாயம் செய்யாமல், படத்தில் நடிக்க வேண்டிய அவசியம், அவர்களுக்கு எங்கு பணம் அதிகமாக கிடைக்கின்றதோ அங்கு இருப்பதால் தான். விவசாயத்தை பெரிதும் போற்றிப் புகழும் பலரும்,  விவசாயம் செய்கின்றார்களா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும்.

விவசாயம் சம்பந்தமான செய்திகளை மற்றவர்களுக்கு அதிகமாக பகிர்வதும், விவசாயத்தை போற்றிப் புகழ்வதும், வெறும் வார்த்தையில் மட்டும் இருந்து விட்டால் போதுமா.? செயல் வடிவில் கொண்டு வர வேண்டுமே.! விவசாயிகளின் துயரத்தை களைய, அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை, குறை கூறுபவர்கள்,  விவசாயிகளின் துயரைப் போக்க என்ன செய்தார்கள்.?

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, அன்றைய பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்கள், அதிக லாபம் தரக்கூடிய வேலையை விவசாயிகள் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய வருமானத்தைக் கூட்ட, விவசாயம் சாராத தொழிலை செய்து, தங்களுடைய பொருளாதாரத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

தற்போதைய பிரதமர் மோடி அவர்களோ, விவசாயிகளிடம் நன்றாக விவசாயம் செய்யுங்கள் என்றும், அதிக லாபத்தோடு செய்யுங்கள் என்றும், நீங்கள் விரும்பும் வகையில், நேரடியாக விருப்பப்பட்ட இடத்தில், விருப்பப்பட்ட விலைக்கு விற்கும் வகையில், விவசாயிகளிடம் விவசாயம் செய்யுங்கள் என ஊக்குவித்து சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்

 தொழுதுண்டு பின்செல் பவர் – (திருக்குறள், 1033)

 பிறருக்காகவும் உழுது, தாமும் உண்டு, வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது, அவர் தருவதை உண்டு, அவர் பின்னே செல்பவர் ஆவர்.

விவசாயிகள் சட்டத்தைப் பற்றியும், அந்த சட்டத்தை சுற்றி பின்னப்பட்ட பொய் வலைகளைப் பற்றியும் காண்போம்.

 

நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்கள்:

  1. விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம், 2020 – The Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm services ordinance, 2020
  2. விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020 – The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) ordinance, 2020
  3. அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்த சட்டம், 2020 (Essential Commodities Amendment) ordinance, 2020

ஆகிய இந்த மூன்று சட்டங்கள், ஜூன் 5 2020 அன்று, அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

 

விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம், 2020:

 விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை இந்தியா எங்கும் விற்றுக் கொள்ளலாம், அவர்கள் சார்ந்த (APMC – Agricultural Produce Market Committee) சந்தைகளில் மட்டும் விற்க தேவையில்லை” என விவசாயிகளுக்கு சுதந்திரம் தருகின்றது. இன்று எதிராக பேசும் காங்கிரஸ் கட்சி, 2012ல் APMC சந்தைகளை ஒழிப்போம் என்றது. 2013ல், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் APMC யை தவிர்க்கவும்” என்றது.

2019 ஆம்  ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்  வாக்குறுதியில், பக்கம் எண் – 9ல், வரிசை எண் – 11ல், “APMC யை ஒழிப்போம். தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வருவோம்” என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஒரு விவசாயி, தான் விளைவித்த விளை பொருளுக்கு தானே குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க முடியாத நிலை இருந்தது.

ஊட்டியை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு கிலோ கேரட் 100 ரூபாய் என மண்டியிடம் கொடுத்து விடுவார். “மண்டி” என்பது  சந்தை, பொருட்களை மொத்தமாக வாங்க வருபவர்கள் கூடும் இடம். அங்கு வரும் இடைத்தரகர்கள், அதனை 100 ரூபாய்க்கு ஏலம் எடுத்து, மேலும் 150 ரூபாய் என லாபம் வைத்து, 250 ரூபாய்க்கு கடைக்காரரிடம் கொடுப்பார்கள். அந்தக் கடைக்காரர் 100 ரூபாய் லாபம் வைத்து, 350 ரூபாய் என விற்பார். நுகர்வோரும் அந்த விலை கொடுத்து வாங்குவார்கள்.

தற்போது இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஊட்டியை சேர்ந்த ஒரு விவசாயி, தான் கஷ்டப்பட்டு பயிர் செய்து விளைவித்த ஒரு கிலோ கேரட்டை, 150 ரூபாய் என கடைக்காரரிடம் கொடுத்து விடுவார். கடைக்காரர்கள் 200 ரூபாய் என  விற்க வாய்ப்பு உள்ளது.

மேலும் விவசாயி விருப்பப்பட்டால், அதே கேரட்டை, டெல்லியிலோ, உத்தரபிரதேசத்திலோ உள்ள கடைக்காரரோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் என யாரேனும் ஒருவர் கொடுக்க முன் வந்தால், அவருக்கும் விற்கலாம். இதன் மூலமாக விவசாயியின் கையே ஓங்கி இருக்கும்.  இடைத் தரகர்கள் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் பலன் அடைவார்கள்.

விவசாயிக்கும், கடைக்காரரோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ உள்ள ஒப்பந்தத்தின் கால அளவு ஒரு பயிர் காலம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை பிரச்சனை வந்தால் தீர்ப்பாயம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தும். பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை எனில் துணை மாஜிஸ்திரேட் அந்த வழக்கை விசாரிப்பார்.

தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல், ஒப்பந்த விலை மூலம் உறுதியான வருவாய் கிடைக்கும். ஒருவேளை ஒப்பந்த விலையைவிட, சந்தை விலை அதிகரித்து விட்டால், அந்தக் கூடுதல் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.

குறைந்த பட்ச ஆதார விலையை MSP (Minimum Support Price ), கடந்த கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒப்பிடும் போது, தற்போது உள்ள மத்திய அரசாங்கம் அதிக அளவில் உயர்த்தி இருக்கின்றது.

குறைந்த பட்ச ஆதார விலையை (MSP) மத்திய அரசு எடுத்து விடுவார்கள் என்று மக்களிடம் திரிக்கிறார்கள். APMC மற்றும் MSP அப்படியே தான் இருக்கும் என தெளிவாக சொல்லி விட்டார்கள். அதிக குளிர்சாதன கிடங்குகள் வந்தால் எதையும் ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்த வேண்டிய தேவையே இல்லை.

விவசாயிகள் தாங்களே தங்கள் விளைப்பொருளுக்கு விலையை நிர்ணயித்து கூடுதல் லாபமடைய, இந்த சீர்திருத்த மசோதாக்கள் வழிவகை செய்கிறது. விவசாயிகள் விலை வீழ்ச்சி போன்ற பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற படுவதோடு, நலன்களும் பாதுகாக்கப்படும்.

விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச் சட்டம், 2020:

 மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும், விவசாயிகள், விவசாய மண்டலங்களுக்கு வெளியிலும் தங்கள் விளை பொருட்களை தடையின்றி விற்கலாம். மாநில அரசு, சந்தைக்கு வெளியே செய்யப்படும் வர்த்தகத்திற்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. விவசாய மண்டலங்களுக்கு வெளியில் விற்பனை செய்யும் பொருட்களுக்காக, மாநில அரசுகள் வரி வசூலிக்க முடியாது.

விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குகின்றது. விவசாயிகள் விளை பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ள இந்த சட்டம் முழு சுதந்திரத்தை வழங்குகின்றது.

மாநில எல்லைக்கு, உள்ளேயும், வெளியேயும், விவசாயி விற்பதால், எங்கு லாபம் அதிகம் இருக்கின்றதோ, அங்கு அவர் அந்தப் பொருளை விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டலாம்.

விளை பொருட்கள் கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் நிரந்தர கணக்கு எண் (PAN Number) மட்டும் இருந்தால் போதும். இதன் மூலம் விவசாயிகளுக்கு, தங்கள் விளை பொருட்களுக்கு ஏற்ப, நல்ல விலையில் லாபம் கிடைக்கும்.

அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்த சட்டம், 2020:

தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை, “இயற்கை சீற்றம் கடும் பஞ்சம்” போன்ற பேரிடர் காலங்களில் மட்டும், மத்திய அரசு இந்த பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும். மற்ற நேரங்களில் உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதனை விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

மேலும், தோட்டக்கலை பொருட்களின் விலை ஏற்றம் 100% இருக்கும் போது, வேளாண் விளைப் பொருட்களின் விலையேற்றம் 50% வரும் போது, அவற்றின் இருப்பு அளவினை நெறிப்படுத்த, இந்த சட்டம் வழிவகை செய்து உள்ளது. இதன் மூலம் தேவையில்லாமல் இருப்பு அளவுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுகிறது. விவசாயிகள் மட்டுமின்றி, நுகர்வோரும் இதனால் பயன் பெறுவர்.

பஞ்சாபில் எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றதே, என்ன காரணம்.?:

 பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பொருட்களான நெல், கோதுமைக்கு சந்தை கட்டணம் (Market Fee) 3%, உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக வசூலிக்கப்பட்டு, அந்த மேல் வரி, அரசு கணக்கில் சேர்க்கப் படுகின்றது. இதனுடன் 2.5% இடைத் தரகர்களுக்கான கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் பொருட்கள் வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப் படுகின்றது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய சட்டப்படி, சந்தை வளாகம் (Market Area) தவிர அறிவிக்கை செய்யப்பட்ட, வணிக பகுதிகளில் கட்டணம் வசூலிக்க இயலாது என்பதால், பஞ்சாப் மாநில அரசிற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும், அதனால் போராட்டம் செய்கின்றது. இந்த சட்டம், அகில இந்திய அளவில் பார்த்தால், பெரிதும் வரவேற்கப்படும் சட்டம், பல மாநில விவசாயிகள், இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசும்போது மைக் அமர்த்தப் (ஆஃப்) பட்டதா..?

 மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மைக்கை உடைத்தனர். அதனால் வயர் அறுந்து, செயல் இழக்கப் பட்டது. அதனால் தான் சத்தம் கேட்கவில்லை. மைக் ஆஃப் செய்யப்படவில்லை.  மேலும், காவலாளியை ஆம் ஆத்மி உறுப்பினர் அடிக்க முற்பட்டதும், இணையதளங்களில் நாம் பார்த்து இருப்போம். பாராளுமன்ற மாநிலங்கள் அவையின் மைய மண்டபத்தில், சட்ட புத்தகம் கிழித்து எறியப்பட்டது. இந்த சட்டத்தினால் விவசாயிகள், பாஜக அரசை பெரிதும் ஆதரிப்பார்கள், மீண்டும் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை கண்டு அஞ்சுகின்றது, அமளியில் ஈடுபடுகின்றது.

முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதைப் போல, விவசாயிகளே, விவசாயத்தை விட்டு செல்லுங்கள், வேறு நல்ல வேலைக்கு செல்லுங்கள் எனக் கூறாமல், விவசாயிகளிடம் விவசாயம் செய்யுங்கள், நல்ல லாபத்துடன் விவசாயம் செய்யுங்கள், இடைத்தரகர்கள் இல்லாமல், முழு லாபத்தையும் நீங்களே அனுபவியுங்கள் எனமத்திய பாஜக மோடி அரசு, விவசாயிகள் மேல் அக்கறை கொண்டு, “கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப இந்த சட்டத்தை இயற்றி இருக்கின்றது.

காங்கிரஸ் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியதை, பாஜக அரசு நிறைவேற்றி இருக்கின்றது. காங்கிரஸ் ஆசையை நிறைவேற்றி இருப்பதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள், இதனைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் வரவேற்பார்கள் என நாம் நம்புவோம்..!!!

 

– அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it