பிரதமர் மோடி தனது வானொலி உரையில் திருப்பூர் ஜவுளி ஆலையில் உயர் பதவிக்கு சென்ற பெண் பற்றி குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-
நமது மக்கள், சுய சார்புடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். அதற்காக காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களுக்கு ‘ஹிமயத்’ என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டது. இது, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு தொடர்பானது. காஷ்மீரை சேர்ந்தவர்களில் பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம்.
கடந்த 2 ஆண்டுகளில் 18 ஆயிரம் பேருக்கு 77 தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 5 ஆயிரம் பேர் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். மற்றவர்கள் சுயதொழில் செய்து வருகிறார்கள். இப்படி ஏராளமானோரின் வாழ்க்கையை ‘ஹிமயத்’ திட்டம் மாற்றி அமைத்துள்ளது.
அவர்களில், பர்வீன் பாத்திமா என்ற பெண், தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஓராண்டுக்கு முன்புவரை, கார்கிலில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
தற்போது, அவரது வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. சுயசார்புடன், தனது குடும்பத்துக்கு வளமான வாழ்க்கையையும் உருவாக்கி உள்ளார். அவரைப் போலவே, லே, லடாக் பிராந்தியங்களை சேர்ந்த பல பெண்கள், ‘ஹிமயத்’ திட்டத்தால் பலனடைந்து, அதே ஆலையில் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.