காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்த கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாக்., பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்த போதும் மீண்டும் டிரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. டிரம்ப்பின் சமரச முயற்சி முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்னை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்று ஆகிவிட முடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாக்., கை விடட்டும், அதன் பிறகு எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.