3 மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் – ஒரு பார்வை

3 மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் – ஒரு பார்வை

Share it if you like it

3 மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் – ஒரு பார்வை


தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. அதேநாளில் மேகாலயலா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன. சில நாட்கள் முன் திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது. இந்த அனைத்து தேர்தல்களின் முடிவுகள் வரும் மார்ச் 2ம் தேதி வெளியாகவுள்ளன.


வடகிழக்கின் 3 மாநில தேர்தல்கள் தேசியளவிலும் ஈரோடு இடைத்தேர்தல் தமிழகத்திலும்அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தான். மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இவை கருதப்பட்டதால் இதில் வெற்றிபெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டின. இதில் யார் வெற்றி பெற்று மகுடம் சூடப்போகின்றனர் என்பதை வரும் மார்ச் 2ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்:


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நேற்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தவிர சுயேச்சைகள் 73 பேர் போட்டியிட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 98-வது தொகுதியாக இடம்பெற்றுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி திருமகன் ஈவெரா திடீரென்று உடல்நலக்குறைவால் காலமானார். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலுக்கு அதிக கவனம் செலுத்த துவங்கின. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈ.வே.ராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டார். இதன்மூலம் மக்களின் அனுதாப வாக்குகளை பெற திமுக திட்டமிட்டது.


அதேசமயம் இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு ஒரு முடிவுக்கட்டி இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். பாஜகவின் தலையீடு மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக அவரது திட்டம் நிறைவேறியது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.


தேர்தலில் வெற்றி பெற திமுக மற்றும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்தந்த கட்சிகளிடம் இந்த டோக்கனை காட்டி பணம் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் புகார்களுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு கட்சிகளின் டோக்கன் விநியோகம் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அங்காங்கு சில புகார்கள் எழுந்தாலும் எந்த ஒரு கலவரமோ அசம்பாவித சம்பவங்களோ நடக்காமல் அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வரும் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


3 மாநில சட்டமன்ற தேர்தல்:


வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதியும் மற்ற 2 மாநிலங்களிலும் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன. மூன்று மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளன.
நாட்டின் பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிக முக்கியம் என்பதால் கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த 3 மாநில தேர்தலில் பாஜக தீவிரம் காட்டியது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர்.


அதேப்போல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இடதுசாரி கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்றுடன் 3 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது. மூன்று மாநிலங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திரிபுராவில் 80 சதவீதமும் மேகாலயாவில் 81.57 சதவீதமும் நாகாலாந்தில் 85.90 சதவீதமும் வாக்குகள் பதிவானது.


திரிபுரா மற்றும் மேகாலயாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நாகாலாந்தில் மட்டும் சில இடங்களில் துப்பாக்கி சூடு, கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தேர்தல் கருத்துக்கணிப்பு:


மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து ஊடகங்கள் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதில் திரிபுராவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையான இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அதேப்போல் நாகாலாந்தில் பாஜக தன் கூட்டணி கட்சியான என்.டி.பி.பியுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியே மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் மற்ற கட்சிகள் குறைந்த அளவிலான இடங்களையே கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் வலுவான கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த 3 மாநிலங்களிலும் படுதோல்வி அடையும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.


மொத்தத்தில் இந்த 3 மாநில தேர்தல்களில் பாஜக மீண்டும் தன் பலத்தை தக்க வைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு படி நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் வரும் 2024 மக்களவை தேர்தலின் முடிவை தீர்மானிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Share it if you like it