தமிழர்கள் போற்றிக் கொண்டாடிய செஸ்
“சதுரங்கம்” என்பது சமஸ்கிருத வார்த்தை. “சதுர” என்றால் நான்கு, “அங்கம்” என்றால் பகுதி. நான்கு படைகளான காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, தேர் படை என்பதனை குறிப்பதே நான்கு படைகள் ஆகும்.
பாலஸ்தீன மக்களுக்கு, நமது நாட்டின் மூலமாகவே செஸ் அறிமுகப் படுத்தப் பட்டது. பாலஸ்தீனத்தில் இருந்து ஸ்பெயின், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செஸ் விளையாட்டுப் போட்டி பரவியதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செஸ் என்னும் சதுரங்கத்திற்கு தாயகமே, “இந்தியா” என்றால், அது மிகையல்ல.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூரில் அமைந்து இருக்கும் சதுரங்க வல்லபநாதர் கோவிலில், அந்த ஈசனே செஸ் விளையாடி இருப்பதாக, அந்தக் கோவிலின் தல வரலாறு கூறுகின்றது. இந்த சம்பவத்தை பிரதமர் அவர்கள் “சென்னை செஸ் ஒலிம்பியாட்” போட்டியை, ஜூலை 28 ஆம் தேதி அன்று தொடங்கி வைத்த போது, தெரிவித்து இருந்தார். சிவ பெருமான், தமிழகத்தில் செஸ் விளையாடிதை நினைத்து, ஒவ்வொரு தமிழரும், இறை பக்தர்களும் பெருமை கொள்கின்றனர்.
மானுவல் ஆரோன் (Manuel Aaron) :
கிரிக்கெட்டுக்கு, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம், எவ்வாறு புனிதம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறதோ, அது போல செஸ்சுக்கு புனிதமானதாக தமிழகம் கருதப் படுகிறது என, விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1960 ஆம் ஆண்டில் இருந்து, 1980 ஆம் ஆண்டு வரை, உலக அளவில் பிரசித்தி பெற்ற, இந்திய சதுரங்க மாஸ்டராக (International Chess Master) திகழ்ந்தார், மானுவல் ஆரோன். 1959 ஆம் ஆண்டு தொடங்கி, 1981 ஆம் வரையிலான காலத்தில், ஒன்பது முறை இந்தியாவின் “தேசிய செஸ் வீரராக” திகழ்ந்தார். “சர்வதேச மாஸ்டர் பட்டம்” கிடைக்கப் பெற்ற முதல் இந்திய வீரர், இவரே. நமது நாட்டிற்கு, செஸ் நடைமுறைகளை அறிமுகப் படுத்திய பெருமை, இவரையே சாரும்.
பல்வேறு பகுதியில், சில வேறுபாடுகளோடு விளையாடிக் கொண்டு இருந்த செஸ் விளையாட்டை ஒரு வகைப் படுத்தி, நாடு எங்கிலும் செஸ் விளையாட்டைக் கொண்டுப் போய் சேர்ப்பதில், முக்கிய பங்கு வகித்தார், மானுவல் ஆரோன். 1969 – 1973 காலங்களில், தொடர்ந்து ஐந்து முறை செஸ் பட்டங்களை வென்றார். தமிழக சதுரங்க சங்கத்தின் செயலாளர் ஆகவும், சதுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும், இருந்தார்.
போட்டியை பிரபலப்படுத்த, பல பத்திரிகைகளில், செஸ்சைப் பற்றி நிறைய கட்டுரைகள் மற்றும் தொடர்களை எழுதினார். செஸ் விளையாட்டுக்காக, அர்ஜுனா விருது பெற்ற முதல் நபரும், இவரே. அந்த விருதை, 1962 ஆம் ஆண்டு பெற்றார். அவருக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து, வைத்தியநாதன் ரவிக்குமார் என்பவர், இந்தியாவின் இரண்டாவது கிராண்ட் மாஸ்டராக திகழ்ந்தார்.
தமிழகமே முன்னிலை :
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக உலக அளவில் புகழ்பெற்று திகழ்ந்தார். விஸ்வநாதன் ஆனந்த் வருகை மூலம், தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவிற்கே செஸ் எழுச்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தான், தற்போது பிரக்ஞானந்தா வரை, செஸ் விளையாட்டில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுவரை இந்தியாவில் இருந்து, 74 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி உள்ளனர். அதில், தமிழகத்தில் இருந்து மட்டுமே, 26 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி உள்ளனர். மொத்த இந்தியாவின் 36% கிராண்ட் மாஸ்டர்கள், தமிழகத்தில் இருந்து வந்து உள்ளனர். நமது நாட்டின், முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக, விஜயலட்சுமி தேர்வு பெற்றார். தற்போதைய உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) தோற்கடித்த பெருமை, இளம் வயதினாரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவையே சேரும்.
கிராண்ட் மாஸ்டரையே வீழ்த்திய 7 வயது சிறுமி :
சென்னையில் நடந்து வரும் “செஸ் ஒலிம்பியாட்” போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள், கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அந்தப் போட்டியைக் காண, அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஷர்வானிகா, தனது பெற்றோருடன் சென்றார்.
அப்போது, போஸ்வானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென், அங்கு இருந்த பார்வையாளர்களை நோக்கி, தன்னுடன் செஸ் போட்டி விளையாட யாரேனும் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த சிறுமி, நான் தயார் எனக் கூறி, அவருடன் செஸ் விளையாடி, குறுகிய நேரத்தில் விரைவாக காய் நகர்த்தி, அவரை வெற்றி கண்டது.
அங்கு குழுமியிருந்த பார்வையாளர்கள், அதனைக் கண்டு பரவசம் அடைந்து, சிறுமியைப் பாராட்டினர். டிங்க்வென்னும், சிறுமியைப் பாராட்டியதுடன், நல்ல எதிர்காலம் இருக்கிறது என ஆசிர்வதித்தார்.
பாரம்பரியமான விளையாட்டு :
பழங்காலத்தில் மன்னர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன்னர், செஸ் விளையாடுவார்கள். அதில், யார் எங்கு இருக்க வேண்டும் என, வியூகம் அமைப்பார்கள். அந்த வியூகத்திற்கு ஏற்றார் போலவே, போர் களத்தில் ஒவ்வொருவரும் செயல் படுவார்கள். செஸ் விளையாட்டு விளையாடியதன் மூலமாகவே, பல மன்னர்கள் வெற்றிக் கொடி நாட்டி உள்ளனர்.
நமது நாட்டில் செஸ் என்பது, இந்த நூற்றாண்டிலோ அல்லது கடந்த நூற்றாண்டிலோ தோன்றியது அல்ல. பாரதப் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டது போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, செஸ் விளையாட்டு, நமது நாட்டில் விளையாடப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. தமிழக முதல்வரும், கீழடி அகழ்வாராய்ச்சியில், செஸ் விளையாடியதற்கான அறிகுறி, கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். சங்க இலக்கியங்களில், தற்போது விளையாடப் படும், செஸ் விளையாட்டு “வல்லாட்டம்” என்னும் பெயரில் குறிக்கப் பட்டு உள்ளது.
இவர்களது பேச்சின் மூலமாக, செஸ் என்பது தமிழகத்திற்கு புதிது அல்ல எனவும், தமிழகத்தில் தோன்றிய பாரம்பரியமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்பதும், நமக்கு நன்கு புலப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாகவே, தொடர்ந்து நமது நாட்டில் செஸ் விளையாடப் பட்டு வருகிறது என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதற்கு உதாரணமே, மிக இளம் வயதிலேயே உலக சாம்பியனைத் தோற்கடித்த பிரக்ஞானந்தா மற்றும் உலக செஸ் கிராண்ட் மாஸ்டரையே தோற்கடித்த ஏழு வயது சிறுமி ஷர்வானிகா போன்றவர்கள்.
நமது மண்ணுடனும், மக்களுடனும் இயற்கையாகவே, செஸ் விளையாட்டு பிண்ணிப் பிணைந்து உள்ளது. தொடர்ந்து செஸ் விளையாடுவதன் மூலமாக, நமது எண்ணமும் செயலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என, அதனைத் தொடர்ந்து விளையாடி வருபவர்கள் அனுபவ ரீதியாக சொல்லி வருகின்றனர்.
பாரம்பரியமான நமது விளையாட்டுகளை…
காப்போம்… தொடர்ந்து விளையாடுவோம்…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai