74வது குடியரசு தின விழா
பாரதத்தின் 74வது குடியரசு தின விழா டில்லியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. முதல்கட்டமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தன் பாதுகாவலர்களுடன் டில்லி கடமைப்பாதைக்கு வந்தடைந்தார். அவருடன் இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல் சிசியும் விழாவுக்கு வருகை தந்தார்.
டில்லி கடமைப்பாதைக்கு வந்து சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் முழங்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
கொடி ஏற்றத்திற்கு பிறகு குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. இந்த முறை இந்திய ராணுவம், துணை ராணுவம், டில்லி காவல்துறை, என்சிசி, என்.எஸ்.எஸ் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 16 குழுக்கள், 19 இசை குழுக்கள், ஒன்பது வகை ஆயுதங்கள் ஆகியவை இடம்பெற்றன.
நம் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் மூன்று பரம் வீர் சக்ரா மற்றும் மூன்று அசோக் சக்ரா விருது பெற்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். மேலும் வீரதீர செயல் புரிந்ததற்காக விருது பெற்ற 25 குழந்தைகளும் அணிவகுப்பில் இடம்பெற்றனர். இவர்கள் அணிவகுத்து வந்த போது மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இதை தவிர பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் 17 அலங்கார வாகனங்களும். பல்வேறு அரசு துறைகள், ராணுவ பிரிவுகளை சேர்ந்த 10 வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன. குறிப்பாக தமிழகம், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வாகனங்களும் இடம்பெற்றிருந்தன.
அதன் பிறகு 475 கலைஞர்கள் அடங்கிய குழுவின் அழகான நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின் ‘டேர்டெவில்ஸ்’ என்ற மோட்டார் வாகன சாகச குழு நடத்திய சாகசங்கள் பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது.
பின் இந்திய விமானப்படையை சேர்ந்த 44 நவீன ரக போர் விமானங்கள் நடத்திய சாகசங்களுடன் அணிவகுப்பு நிறைவு பெற்றது.
குடியரசு தின விழாவின் சிறப்பம்சங்கள்
இந்த வருடம் நடந்த குடியரசு தின விழாவில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் முதலாவதாக வழக்கமாக விவிஐபிகளுக்கு ஒதுக்கப்படும் முதல் வரிசை இருக்கைகளில் இந்த முறை புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்த காய்கறி வியாபாரிகள், ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.
அணிவகுப்பில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சியும் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து இரண்டு மூன்று குழுக்கள் தனித்தனியாக பங்கேற்காமல் வந்தே பாரதம் என்ற பெயரில் 475 கலைஞர்கள் ஒரே குழுவாக நாட்டின் அனைத்து வகை நடனங்களையும் கொண்ட கலை நிகழ்ச்சியை நடத்தி காட்டினர்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ராணுவ படைப்பிரிவுகளின் அணிவகுப்பில் பல பெண்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும் முதல்முறையாக எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டக படைப்பிரிவில் பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்திய கடற்படை பிரிவுக்கு பெண் விமானியான திஷா அம்ரித் தலைமை வகித்தார்.
பல மாநிலங்களின் அலங்கார வாகனங்களிலும் பெண்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தமிழகத்தின் வாகனத்தில் பெண்களின் முன்னேற்றம் முக்கிய கருப்பொருளாக அமைந்திருந்தது. பெண் புலவரான ஔவையாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தவிர பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி, முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, நாட்டிய கலைஞரான தஞ்சை பாலசரஸ்வதி, வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு வாகனம் அணிவகுத்து வரும் போது அவ்வையாரின் ஆத்திச்சூடியும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் பாடலும் ஒலித்தன. வாகனத்தின் இருப்பக்கங்களிலும் பெண் கரக்காட்ட கலைஞர்கள் நடனம் ஆடியபடி வந்தனர்.
கடந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் இந்த வருடம் தமிழக வாகனம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு தமிழக அரசின் அழுத்தம் எந்த வகையிலும் காரணமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில மாநிலங்களின் ஊர்திகளுக்கே குடியரசு அணிவகுப்பில் அனுமதி கிடைக்கும். இந்த வருடமும் மொத்தம் 17 மாநிலங்களின் வாகனங்கள் தான் அணிவகுப்பில் இடம்பிடித்திருந்தன. இது வழக்கமான நிகழ்வுதான்.
ஆனால் பொய் பிரச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள திமுக அரசு மத்திய அரசு தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்டி வருகின்றது. தற்போது தமிழக வாகனம் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ள நிலையில் மேற்கொண்டு திமுகவினர் என்ன பேச போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.