பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, அண்டை நாடான மடகாஸ்கருக்கு இந்தியா சார்பில் 15,000 சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.
பாரத தேசம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, நிகழாண்டு அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தேசபக்தர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், அண்டை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள் இலவச பரிசாக வழங்கி இருக்கிறது பாரத தேசம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடுதான் மடகாஸ்கர் குடியரசு. இத்தீவு உலகிலேயே 4-வது மிகப்பெரிய தீவாகும். இத்தீவில் இருக்கும் விலங்குகளும் மரம், செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.
குறிப்பாக, பாவோபாப் மரங்களும், மனிதர்கள், கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் ஆகியவை சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த லெமூர் என்னும் இனம் இங்கு காணப்படுகிறது. இங்கு பேசப்படும் மொழி மலகாசி. இது மலாய், இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இத்தீவு தேசத்திற்குத்தான் இந்தியா சார்பில் 15,000 சைக்கிள்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறது. இந்த சைக்கிளில், மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் ஸேயும், மடகாஸ்கருக்கான இந்தியத் தூதர் அபய் குமாரும் பயணம் செய்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகிறது.