எனது முடிவுகள் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறது. பணிவு மற்றும் நன்றி உணர்வால் நிறைந்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பாரத பிரதமராக நரேந்தி மோடி பதவியேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த நாட்டிற்கான சேவையில் இன்று நாம் 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம். பணிவு மற்றும் நன்றி உணர்வால் நான் நிறைந்திருக்கிறேன். எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்பட்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க இன்னும் கடினமாக நாம் உழைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தேசமே பிரதானம்’ என்கிற தாரக மந்திரத்துடன் எல்லாத் துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு மாதம் நீண்ட பிரசாரமாக கொண்டாட பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. இதையொட்டி, ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார்.