உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, உலகின் நெ.1 ஆட்கொல்லி நோயாக இருப்பவை இதயநோய்கள் தான். ஆனால், அண்மையில் பிரபல மருத்துவ ஆய்வு இதழான, ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின்படி, புற்று நோய்கள் முதலிடத்தை பிடித்து உள்ளன.
அதிக வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில், நோய் இறப்புகளுக்கான காரணங்களை, இந்த இரு ஆய்வுகளும் மேற்கோள் காட்டுகின்றன.
அந்த புள்ளிவிபரங்களின்படி, தற்போது, இதயம் தொடர்பான நோய்களால் இறந்தோரைவிட, புற்று நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளன.
இருந்தாலும், இந்த ஆய்வுகளில் சில பிசிறுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். முதலாவதாக லான்செட் இதழில் வெளியாகிஉள்ள இரு ஆய்வுகளும், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளை கணக்கில் எடுக்கவில்லை என்பது ஒரு குறை.
தவிர, உலகெங்கும், இதய நோய் சிகிச்சை மேம்பட்டு, இறப்பு விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது இடத்திலிருந்த புற்றுநோய்கள், முதலிடத்திற்கு வருவது போலத் தெரியலாம் எனவும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆக, இதயநோய் மருத்துவம் முன்னேறியுள்ளதாகவும், புற்று நோய் சிகிச்சை முறை இன்னும் மேம்பட வேண்டும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.