அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வருகிற, 24 முதல், 30 வரை நடக்கவுள்ள, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தின் போது, ஜம்மு – காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான், பயங்கர தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா – பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், பல்வேறு நாடுகளும், இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24 முதல், 30 வரை, ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கான் உட்பட, பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டம் நடைபெறும் நேரத்தில், ஜம்மு – காஷ்மீருக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, தாக்குதல் நடத்த, பாக்., ராணுவம் திட்டமிட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம், தாக்குதல் நடத்தலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், பிரதமர், மோடியுடன் அமெரிக்கா செல்லவிருந்த பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும், அவர், எல்லைப் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.