ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்களோடு 4ம் இடத்தில் பாரதம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்களோடு 4ம் இடத்தில் பாரதம்

Share it if you like it

ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தகுதி பெற்ற விளையாட்டு அணிகள் பல்வேறு பிரிவுகளில் அணியாக பாரதத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இதில் ஆரம்பம் முதலில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் பதக்க பட்டியலில் 100 பதக்கங்களைக் கடந்து உலக விளையாட்டு பதக்க பட்டியலில் பாரதத்தின் சாதனை தடம் பதித்திருக்கிறார்கள். சுதந்திர பாரதத்தில் விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் குறிப்பிட்ட இலக்கை எட்டியது மிகவும் அபூர்வமாகவே இருக்கும்.1950 களின் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் பெரும் பிரயத்தனம் செய்து இரண்டாம் இடத்தில் இருந்து நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பாரதத்தின் விளையாட்டு பின்னாளில் பெரும் சரிவை சந்தித்தது. சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதே பெரிய விஷயம் என்ற நிலையிருந்தது. ஒரு வெண்கலமும் வெள்ளியும் கிடைத்தாலே அது பெரிய விஷயம் தான் என்ற காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த கால் நூற்றாண்டுகளாக விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க மாறுதல் வளர்ச்சி இருந்து வருகிறது.

சமீப காலமாக கிரிக்கெட் என்ற மாயையில் இருந்து விடுபட்டு அதிக அளவில் தடகளப் போட்டிகள் வீர விளையாட்டுகள் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு பாரதத்தில் ஆதரவும் ஆர்வமும் பெருகி வருகிறது . இதன் காரணமாக சமீப காலங்களில் மாநில தேசிய போட்டிகளிலேயே பெரும் அளவிலான சாதனைகள் அதிகரித்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆசிய அளவிலான தெற்காசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பாரதத்தின் பங்களிப்பும் பதக்கவேட்டையும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு சமீபத்தில் சீனாவின் ஹங்சோவ் நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாரதத்தின் சார்பில் பங்கேற்ற வீரர்கள் ஆரம்பம் முதலே எதிர் தரப்பு போட்டியாளர் களுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறார்கள். வெற்றி பெற்றால் அது பெருமைமிகு வெற்றியாக இருக்கிறது. தோல்வியில் நிற்கும் போதும் அது போராட்டத்தின் தோல்வியாக எதிர் தரப்பிற்கு தோல்வி பயத்தை கொடுத்த வெற்றிகரமான தோல்வியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் வெற்றி தோல்வி என்பதை கடந்து தரமான விளையாட்டு வீரர்கள் என்ற அளவில் பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டது பாராட்டுக்குரியது.

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளும் அதன் பதக்க பட்டியலும் ஒரு தேசத்தின் கௌரவமாகவே பார்க்கப்படும். காரணம் ஆடுகளமும் போர்க்களமும் தேசத்தின் வீர தீர அடையாளமாகவே கருதப்படும். விளையாட்டு என்பது உடல் பலம் கடந்து மனவளம் வளர்க்கும் தவமாகும் .அந்த வகையில் விளையாட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் நேர்த்தியான உடற்கட்டு வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் மனோவளம் கடுமையான உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை போராட்டக் குணம் போர்க்குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஒரு தேசத்தின் இளைய தலைமுறை இது போன்ற அசாத்தியமான குணங்களோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் தலைசிறந்த ஆளுமைகளாக விளங்குவார்கள். இப்படிப்பட்ட வளமான மனிதவளத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெல்ல முடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனால் தான் உடல் பலமும் மன பலமும் பாதுகாக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒவ்வொரு நாடும் தனது சக்திக்கு மீறிய அக்கறையும் ஆர்வமும் செலுத்தும்.

சீனா கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளை ஒரு கௌரவமாக நினைப்பதும் அதற்காக எந்த எல்லைக்கும் போய் பணத்தை வாரி இறைத்து அதை வெற்றிகரமாக நடத்துவதிலும் பிரயத்தனம் காண்பிப்பதற்கு காரணம் இதுவே. இந்த விளையாட்டு பதக்க பட்டியலில் எப்போதும் முன்னிலை வகிக்கும் சீனா கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டில் உழைப்பு உற்பத்தி சார்ந்த துறைகள் உலகில் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை வழங்கும். சர்வதேச அளவில் கடும் போட்டியை கொடுக்கும்.

இது போன்ற போட்டி மனப்பான்மையும் போராட்ட குணமும் தேசத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதுபோன்ற இளம் தலைமுறைகள் தான் சமூகப் பொறுப்பு தேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு முழுமையான ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்க முடியும் .அதனால் தான் கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் வீர விளையாட்டுகளுக்கும் கூட பாரதத்தின் வரலாற்றில் வழிநெடுகிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் சுதந்திர பாரதத்தில் தேசத்தின் துரதிருஷ்டம் இந்த விளையாட்டு துறைக்கு போதுமான ஒத்துழைப்பு நிதி ஒதுக்கீடு உள்நாட்டில் முறையான பங்களிப்பு கிடைக்கப்பெறாமல் போனது .இதிலும் அரசியல் புகுந்த காரணம் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டது. அவர்களின் முயற்சி உழைப்பும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் சர்வதேச அளவில் தேசத்தின் கௌரவத்திற்கும் உரிய வகையில் பயன்படுத்த முடியாத நிலை நீடித்தது.

ஆனால் சமீப காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்துபவர்களுக்கு குறிப்பாக தடகளப் போட்டிகள் வீர விளையாட்டுகளை சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு பணிகள் குறிப்பிட்ட சலுகைகள் கிடைப்பது‌ பெரும் நிறுவனங்கள் உள்நாட்டில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தாமாக முன்வந்து வாரி வழங்கும் சலுகைகள் பங்களிப்புகள் எல்லாம் சமீப காலமாக கடைக்கோடி குற்றாலத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் கூட சர்வதேச போட்டிகளில் தடம் பதித்து அவர்களும் வெற்றி வாகை சூடி தேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுக்கும் வெற்றிகரமான புதிய அத்தியாயத்தை தொடங்கியது.

பெரும் இன்னல்கள் இடையூறுகளைக் கடந்து வரும் ஜம்மு காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட இந்த விளையாட்டு துறைகளில் சாதனையாளர்கள் உருவாகினார்கள். அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தடம் பதிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் மன மகிழ்ச்சியான விஷயம். ஆனால் கால காலமாக வீர விளையாட்டுகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் தாயகமாக விளங்கும் தமிழகத்திலிருந்து இன்றளவும் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்பதும் சர்வதேச போட்டிகளுக்கு பங்கெடுப்பது பெரும் சிரமமாகவே இருந்து வருவது வேதனை.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பெரும் பிரயத்தனம் செய்து தங்களின் உடல் தகுதி போட்டி தொகுதிகளை வளர்த்து வரும் மாணவர்களை ஒருங்கிணைத்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைப்பதற்கு கூட மாநில அரசு பொறுப்பான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பும் இல்லை என்பது மாநில அரசின் தோல்வியே. தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள் மாநில அரசு விளையாட்டு மேம்பாட்டு துறையின் அலட்சியத்தால் பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறையின் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தேசிய அளவிலான போட்டி வாய்ப்புகளை இழந்து விட்டார்கள் என்பது வேதனை.

அந்த மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து இருந்தால் அவர்களில் எத்தனை பேர் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற்று போயிருப்பார்கள்? இன்று அவர்கள் மூலம் எத்தனை கூடுதல் பதக்கங்கள் கூடுதல் சாதனைகள் பாரதத்திற்கு கிடைத்திருக்கும் ? அதன் மூலம் பதக்கப் பட்டியலில் இன்னும் கூட பாரதம் முன்னிலை பற்றிருக்கும் .ஆனால் ஆட்சியாளர்களின் மலிவான அரசியல் பிரிவினைவாத எண்ணங்கள் அவர்களின் சுயநலம் காரணமாக ஒரு மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் பலி வாங்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்த விஷயத்தில் இனியனும் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் தங்களின் சுய விருப்பு வெறுப்பு அரசியல் கடந்து மாநிலத்தில் இருக்கும் இளம் தலைமுறை நலன் கருதி விளையாட்டு துறையை கூடுதல் கவனத்தோடும் அக்கறையோடும் வழிநடத்தட்டும்.

மாநில அரசுகளின் அலட்சியம் அக்கறையின்மை கடந்து மத்திய அரசு இன்னும் கூடுதலான கண்காணிப்புகள் அக்கறை எடுத்து தேசம் முழுவதும் இருக்கும் விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழிகாட்டுதல்கள் கொடுத்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் . தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளூர் அரசியல் காரணமாக பிராந்திய கட்சியின் அரசியலுக்கு இனியும் தேசத்தின் விளையாட்டு வீரர்கள் பலியாகாத வண்ணம் மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் .விளையாட்டு என்பது தேசத்தின் தேசிய அடையாளம். அதன் மூலம் கிடைக்கப்பெறும் உடல் பலம் மன பலம் சார்ந்த எதிர்கால சந்ததிகள் தேசத்தின் பொக்கிஷங்கள். இதை பொறுப்போடு உணர்ந்து மத்திய அரசு இனியனும் மாநில அரசர்களை கண்டித்துடன் அறிவுறுத்தி விளையாட்டு துறைகளில் மாணவர்களை உரிய வகையில் வழிநடத்த கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி நடத்த வேண்டும்.


Share it if you like it