கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.
இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி நான்கு முறை சுட்டுவிட்டு தப்பியோடினர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் வில்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
வில்சனை துப்பாக்கியால் சுட்ட இருவரும், அருகிலுள்ள பள்ளிவாசல் வழியாக தப்பிச்செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியானது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இரண்டு பேர் வில்சனை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.இருவருக்கும் தீவிரவாத இயக்கங்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.