ஓடும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட பெண்மணியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் என்றால். வயது வித்தியாசமின்றி குடிப்பவர்களும் தற்பொழுது அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அண்மையில் சிறுவர்கள் சிலர் மது அருந்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து பாப்பான்குளம் அருகே மதுகுடித்த தந்தையை திருத்த விஷம் குடித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வருவோம் என தற்பொழுதைய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க-வை சேர்ந்த தூத்துக்குடி எம்பி கனிமொழி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி உட்பட பலர் வாக்குறுதி வழங்கி இருந்தனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்து 200 நாட்களை கடந்த பின்பும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருப்பதால் குழந்தைகள், பெண்கள், என பலர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், குடிகார பெண்மணி ஒருவர் ஓடும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு பயணிகளை ஆபாசமாக பேசிய சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டு உள்ளது.