மிளகில் பருத்திக் கொட்டை, வெண்டைக்காய் விதை கலப்படமும், ரேஷன் அரிசியை அரைத்து ரவையும், கோலமாவு போல மஞ்சள் தூளும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், அப்பொருட்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்தான் தமிழகத்தில் ஹைலைட்!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே ஒரே சர்ச்சையும், பிரச்னையும்தான். கரும்புகள் தரமானதாக இல்லை, மிளகில் பருத்திக் கொட்டை, வெண்டைக்காய் விதை, பப்பாளி விதை கலப்படம், மஞ்சள் கோலமாவு போல இருக்கிறது, மிளகாய் தூள், மல்லித் தூளில் மரத்தூள் கலப்படம், சீரகம், சோம்பு ஆகியவற்றில் மணல் கலப்படம் என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதேபோல, பொங்கல் வைக்க வழங்கப்பட்ட வெல்லம், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ் போல கொழகொழவென இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பல ரேஷன் கடைகளில் 21 பொருட்களுக்கு பதில் 18, 19, 20 பொருட்கள் மட்டுமே கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும், தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிராம மக்கள், ரேஷன் பொருட்கள் தரமற்று இருப்பதாகக் கூறி கொந்தளித்து விட்டார்கள். மோட்டூர் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையத்திலுள்ள ரேஷன் கடையில் எதற்கும் உதவாத பொங்கல் பரிசுத் தொகுப்பு எங்களுக்கு எதற்கு என்று கூறி, அப்பொருட்களை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தியது தி.மு.க. ஆகவே, தற்போது தி.மு.க. ஆட்சியில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தட்டிக் கேட்பது யாரோ என்று கலகக்குரல் எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.