FIR (எஃப்.ஐ.ஆர்.) திரைப்படத்தில் அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் அப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் FIR (எஃப்.ஐ.ஆர்.). இயக்குநர் மனு ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் என 3 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். விஷ்ணு விஷாலின் அம்மாவாக மாலா பார்வதி நடித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அச்சமுதாயத்தையே குற்றம் சொல்வது தவறு என்பதாக கதைக்களம் அமைந்திருக்கிறது.
அதாவது, தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்று காட்சிப்படுத்துவதுதான் வழக்கம். ஆனால், உண்மை அதுவல்ல, இஸ்லாமியர்கள் தங்கள் உயிரைையும் கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ஆனால், அவரது முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. படம் வழக்கம் போல் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான் என்பதாகவே அமைந்து விட்டது என்பதுதான் பரிதாபம்.
கதைக்களம் இதுதான்…
சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸான தனது தாயுடன் வசிக்கிறார் இர்ஃபான் (விஷ்ணு விஷால்). இவர், ஒரு கெமிக்கல் இன்ஜினியர். இவர், வேலை தேடி பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக, ஹைதராபாத்தில் கைது செய்யப்படுகிறார். மேலும், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இவர்தான் காரணம் என்றும், அபுபக்கர் எனும் பெயருடன் இவர் செயல்படுவதாகவும் என்.ஐ.ஏ. முடிவு செய்கிறது.
இந்த நிலையில்தான், சென்னையில் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிடுகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு. இந்த திட்டம் சரியாக நடத்தப்படுகிறதா? விஷ்ணு விஷாலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் மீதிக்கதை. இதில், வேடிக்கை என்னவென்றால், இர்ஃபான் பற்றிய முக்கியமான ரகசியத்தை மறைக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ஆனால், அந்த முயற்சி திரையில் பலனளித்திருக்கிறதா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. காரணம், விஷ்ணு விஷால் இஸ்லாமிய தீவிரவாதியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆகவே, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தானா என்று சொல்லி, மலேஷியா, குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.