காஷ்மீர் தீவிரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீண்டகாலமாகவே ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதிகளின் புகழிடமாக இருந்து வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் அதிகளவில் பதுங்கி இருக்கிறார்கள். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இங்கு நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.19-ம் தேதி) ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்திலுள்ள ஜைன்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், நமது வீரர்கள் 2 பேர் பலியாகினர். தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர், அந்த இடத்தை நமது பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனையிட்டனர். இதில்தான், அமெரிக்காவின் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதாவது, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பாதுகாப்பாகவும், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவும் அமெரிக்க வீரர்கள் அந்நாட்டில் முகாமிட்டிருந்தனர். ஆனால், கடந்தாண்டு அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க வீரர்கள், தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை, ஆப்கானிஸ்தானிலேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
இந்த ஆயுதங்கள், பாகிஸ்தான் வழியாக காஷ்மீரிலுள்ள தீவிரவாதிகள் முகாமுக்கு கடத்தப்பட்டிருக்கிறது. மேற்படி ஆயுதங்களை வைத்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டிருக்கிறார்கள் தீவிரவாதிகள். இதுகுறித்துத்தான், பாதுகாப்பு படையின் கமாண்டரான மேஜர் ஜெனரல் அஜய் சந்த்பூரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.