காங்கிரஸ் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், இறந்த மகளின் உடலை தோளில் தூக்கியபடியே வீட்டுக்குச் சென்று அடக்கம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஒரு அப்பாவி தந்தை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநில முதல்வராக பூபேஷ் பாகல் இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் சுர்குஜா மாவட்டம் அம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர்தாஸ். இவரது 7 வயதான மகள் சுரேகா, கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, சுரேகாவை தங்களது ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள லக்கன்பூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சமூக சுகாதார மையத்தில், நேற்று காலை சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுரேகா இறந்து விட்டார்.
இதையடுத்து, சுரேகாவின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, ஆம்புலன்ஸ் வாகனத்தின் தேவையை நாடி இருக்கிறார் ஈஸ்வர்தாஸ். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. இதனால், விரக்தியடைந்த ஈஸ்வர்தாஸ், தனது மகள் சுரேகாவின் உடலை தோளில் சுமந்தபடியே, 10 கி.மீ. தூரம் நடந்தே தனது சொந்த ஊருக்குச் கொண்டு சென்று, அடக்கம் செய்திருக்கிறார். ஈஸ்வர்தாஸ் தனது மகளை தோளில் சுமந்து செல்லும் காட்சியை, ஒருவர் வீடியோ எடுத்து, காங்கிரஸ் ஆட்சியின் அவலநிலையை பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தின் அவலநிலைய பறைசாற்றி வருகிறது.