ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டை சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதிகள் 3 பேரையும் பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டம் சாதூரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்துக்குள் கடந்த வியாழக்கிழமை புகுந்த பயங்கரவாதிகள் 3 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில், புலம் பெயர்ந்தோர் நலனுக்கான சிறப்பு அதிகாரி ராகுல் பட் என்கிற காஷ்மீரி பண்டிட் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இச்சம்பவத்தை கண்டித்து ராகுல் பட் உறவினர்களும், காஷ்மீரி பண்டிட்களும் தங்களுக்கு இன்னும் பாதுகாப்பற்ற நிலைதான் நிலவுவதாகக் கூறி, வியாழக்கிழமை இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். பந்திபோராவின் பிரார் (அராகம்) பகுதியில் பாதுகாப்புப் படையினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதியில் பதுங்கி இருந்து 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளினர். இந்த 2 பயங்கரவாதிகளும் சமீபத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், மேற்படி பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும், மே 11-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரின்போது தப்பிச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து நடந்த தீவிர வேட்டையில், அதே பகுதியின் இன்னொரு பகுதியில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.
சபாஷ்💐💐 இந்த மாதிரியான அதிரடி தேவை நாட்டிற்கு 🙏🌷