தமிழகத்தில் மது குடிப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இளைஞர் ஒருவர் குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு மிகச் சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் சிறந்த முறையில் உள்ளதாக மணிக்கு ஒருமுறை தி.மு.க.வின் ஊடகங்கள் மற்றும் அதன் ஆசிபெற்ற ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான, பொய் செய்திகளை அறிவார்ந்த தமிழக மக்கள் நம்பவில்லை என்பதே நிதர்சனம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பட்டத்து இளவரசர் உதயநிதி உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், விடியல் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால், இன்று வரை பூரண மதுவிலக்கு குறித்து தி.மு.க. அரசு வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றது.
இப்படிப்பட்ட சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பேருந்து நிலையம் அருகே 15 வயது உடைய சிறுவன் போதையில் தகராறு செய்து இருக்கிறான். இதையடுத்து, சாலையில் வருவோர்களை ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி இருக்கிறான். இதனை தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்ட அச்சிறுவனை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் வெளுத்து வாங்கி இருக்கின்றனர். இச்சிறுவன், அதே பகுதியில் 10 – ஆம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கூடுதலாக பார்கள் திறக்கப்பட்டுள்ளன. 31.07.2021 – 2808 பார்கள்… 31.03.2022 – 3240பார்கள்.. இன்றைய தேதிக்கு இன்னும் அதிகமாக இருக்கலாம். இதுவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என தமிழக முதல்வர் கூறி வருகிறார். அதேவேளையில், மதுக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதான், விடியல் ஆட்சியா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கழக கண்மணிகள், தி.மு.க. நிர்வாகிகள் குடித்து விட்டு செய்யும் அட்டூழியங்கள் மற்றும் அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம்.
போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என முதல்வரும், அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அது, தி.மு.க.விற்கு உண்டா என்பதே மில்லியன் டாலரை தாண்டிய கேள்வியாக எழுகிறது.