ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் 89 அடி நீளமும், 39 அடி உயரமும் கொண்ட மெகா டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
2017-ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டின் பொம்பால் பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அஸ்திவாரத்துக்கு பள்ளம் தோண்டியபோது, டைனோசரின் எச்சங்கள் தென்பட்டிருக்கிறது. உடனே, இதுகுறித்து அந்நாட்டின் லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட இடத்தில் ஆய்வாளர்கள் அகழாய்வு பணியை மேற்கொண்டனர். இதில்தான், தற்போது மெகா டைனோசர் ஒன்றின் மார்பு மற்றும் முதுகுப் பகுதி எலும்புகள் கிடைத்திருக்கிறது. அந்த டைனோசர் 82 அடி நீளம் மற்றும் 39 அடி உயரம் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விளக்கமளித்த லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வுத்துறை முனைவர் எலிசபெத் மலாபியா, “இதுபோல மிகப்பெரிய விலங்கின் மார்பு பாகத்தின் எலும்புகள் அனைத்தும் கிடைப்பது அரிது. ஆனால், இந்த டைனோசரின் உண்மையான உருவம் சிதையாமல் இருக்கும் அரிய எச்சம் கிடைத்திருக்கிறது” என்றார். இந்த விலங்கு சுமார் 150 மில்லியன் ஆண்டுகள், அதாவது 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை கிடைத்திருக்கும் டைனோசர் எச்சங்களில் இதுதான் மிகப்பெரிய எச்சம் என்கிறார்கள். இந்த எச்சங்களை ஆய்வு செய்வதுடன், இங்கு மேலும் புதிய டைனோசர் எச்சங்கள் கிடைக்கிறதா என்பது குறித்தும் அகழ்வாய்வு பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.