தி.மு.க. மூத்த தலைவர் துரைமுருகன் பேசிக் கொண்டு இருக்கும் போதே திடீர் மின்தடை ஏற்பட்ட சம்பவம் விழா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு பல்வேறு சங்கடங்களை தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது முதன்மையானதாக இருப்பது மின்வெட்டு. இதன் காரணமாக, சிறு குறு தொழில்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மின் தடையால், தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், திடீரென மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது.
இதனிடையே, மின்வெட்டுக்கு காரணம் அணில்கள் தான் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூவை காட்டிலும் தி.மு.க. அமைச்சர் சிறந்த விஞ்ஞானி என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து இருந்தனர். இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் வினோஜி என்பவர் மின்வெட்டையும், அணிலையும் மேற்கோள்காட்டி வித்தியாசமான முறையில் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டு இருந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக மக்கள் தொடர்ந்து அணில் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்று இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க. மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அமைச்சர், தனது பேச்சை மேலும் தொடர முடியாமல் போனதால், கடுப்புடன் சென்று தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.