சென்னையிலிருந்து கேரளாவுக்கு 14.70 கோடி ரூபாய் கடத்தப்பட்ட விவகாரத்தில் பி.எஃப்.ஐ.க்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பிராட்வே சாலை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் அலி மகன் நிசார் அகமது. இவரது தலைமையில் மதுரை அங்காடிமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரபிக் ராஜா மகன் வாசிம் அக்ரம், கேரள மாநிலம் கோழிக்கோடு வல்லக்காடு மலைகிராமத்தைச் சேர்ந்த ஹம்சா மகன் நாசர், வல்லக்காடு பாரோ தொடுகை மில் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது மகன் சர்புதீன் ஆகியோர், கடந்த 29-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை பண்டல் போட்டு கருப்புக் கலர் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி கொண்டு சென்றனர்.
ஆனால், ஒரே வாகனத்தில் கொண்டு சென்றால் மாட்டுக் கொள்வோம் என்று பயந்து, வெவ்வேறு வண்டிகளில் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கோவிந்தம்பாடிக்கு ஒரு லாரியை வரவழைத்திருக்கிறார்கள். அங்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் காரை நிறுத்தி, ரூபாய் நோட்டு பண்டல்களை லாரிக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த சூழலில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார், சிறு சிறு பண்டல்களை சிலர் லாரியின் கேபினில் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்தனர்.
எனவே, மேற்கண்ட நபர்களிடம் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்கள். மேலும், தங்களது பெயர், முகவரியைத் தெரிவிக்க மறுத்த அக்கும்பல், போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடிக்க முயற்சித்திருக்கிறது. எனவே, ரோந்துப் பணி போலீஸார், காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்து கூடுதல் போலீஸாரை வரவழைத்தனர். பின்னர், அக்கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீஸார், மேற்கண்ட 4 பேரையும் கைது செய்ததோடு, ரூபாய் நோட்டு பண்டல்களையும், பணம் கடத்தி வரப்பட்ட கார், லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பண்டலை பிரித்துப் பார்த்த போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி. காரணம், அனைத்தும் 2,000, 500, 200 மற்றும் 100 ரூபாய் பணக்கட்டுகள். இதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தபோது, மொத்தம் 14 கோடியே 70 லட்சத்து 85 ஆயிரத்தி 400 ரூபாய் இருந்தது. இப்பணத்தை எண்ணி முடிக்கவே 7 நேரமானது. பிறகு, மேற்கண்ட 4 பேரிடமும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து 22 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேற்கண்ட பணம் ‘ஹவாலா’ மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணமா அல்லது தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்குச் சொந்தமானதா என்கிற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணண் மற்றும் மத்திய புலனாய்வு துறையினர், அமலாக்கத் துறையினர் ஆகியோரும் 4 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், துபாயில் இருக்கும் ரியாஸ் என்பவர், அப்பணத்தை கேரளாவுக்குக் கடத்திச் செல்லும்படி கூறியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, நிசார் அகமது சென்னையில் புர்கா கடை நடத்தி வருகிறார். இவரது தந்தையும், துபாயில் இருக்கும் ரியாஸும் நண்பர்கள். ஆகவே, மேற்கண்ட பணத்தை நிசார் அகமது மூலம் கேரளாவுக்கு கடத்திச் செல்லும்படி கூறியதாகத் தெரிகிறது. அதன்படி, சென்னையிலிருந்து கார் மூலம் அப்பணம் கேரளாவுக்கு கடத்தப்பட்டிருப்பது தெரிவந்தது.
இது ஒருபுறம் இருக்க, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மத்திய அரசு தடை விதித்தது. மேலும், சமீபத்தில் பி.எஃப்.ஐ. அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 12ி0 கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 14.70 கோடி ரூபாய் பி.எஃப்.ஐ. அமைப்பினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால், தங்களது அமைப்பு பலமாக இருக்கும் கேரளாவுக்கு கடத்திச் சென்று பாதுகாப்பாக வைக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.