கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் மஹாபிஷேகம், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராசாவால் காலதாமதமானதாக பொய் செய்தி வெளியிட்ட Oneindia Tamil ஆன்லைன் சேனலுக்கு, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா, கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 5-ம் தேதி நடந்தது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது. முக்கிய உற்சவமான ஆருத்ரா தரிசனம் 6-ம் தேதி நடந்தது. 7-ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் ஆருத்ரா தரிசனம் உற்சவம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிகளில்தான், ஆருத்ரா தரிசனம் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட காலதாமதமாக நடந்ததாகவும், இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா தாமதமாக வந்ததுதான் காரணம் என்று Oneindia Tamil ஆன்லைன் சேனல் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் பொய் செய்தி என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிதம்பரம் சித்சபேசன் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் மஹாபிஷேகம் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜாவால் காலதாமானது என்று பொய் செய்தி பரப்பிய One India Tamil நிறுவனத்தின் செயல் ஏற்புடையதல்ல. மாறாக வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கண்ணியமிக்க தேசிய கட்சியின் தேசிய பொறுப்பில் இருக்கும் சிறந்த தேசியவாதி ஹெச்.ராஜா மீது அவதூறு பரப்பும் செயல் ஏதோ உள்நோக்கம் கொண்டதுபோல தோன்றுகிறது. இதை தோலுரிக்க வேண்டியது தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் கடமை. தமிழகத்தில் ஒரு தேசிய கட்சியின் அடையாளமாக பார்க்கப்படும் ஒருவரை, குறிப்பாக, ஹெச்.ராஜா போன்ற தேசிய சிந்தனை கொண்ட தலைவர்களை, இதுபோன்ற பொய் செய்திகளின் மூலம் களங்கம் ஏற்படுத்தி, அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைப்பது ஏற்புடையதல்ல.
மேலும், தேசத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், உண்மைச் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பயன்பட வேண்டுமே தவிர, பொய் செய்திகளை பரப்பி ஒட்டுமொத்தமாக ஊடக மாண்பினை, ஊடக தர்மத்தினை அழித்து, மக்கள் நம் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை சீர்குலைப்பதும் ஏற்புடையதல்ல. தவிர, Oneindia Tamil நிறுவனம் இதுபோன்று பொய் செய்தியை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதேபோல பலமுறை ஊடக தர்மத்தை மீறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இனிமேல் இவ்வாறு நடைபெறா வண்ணம் Oneindia Tamil நிர்வாகம் செய்தி வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், One India Tamil நிறுவனம் உடனடியாக அந்த பதிவை நீக்கி, இச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கம் கேட்டுகொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.