ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்திருக்கிறது. இதையடுத்து, படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள், ஹிந்து மதத்தையும், கலாசாரத்தையும், சடங்குகளையும் இழிவுபடுத்தும் வகையிலேயே எடுக்கப்பட்டு வந்தன, வருகின்றன. இந்த சூழலில், தெலுங்கு, கன்னட படங்கள் மட்டும் வித்தியாசமாக ஹிந்து மதத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக இதுபோன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், ஹிந்து மதத்தின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் RRR.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரம்மாண்ட வெற்றிப் படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் இது. இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோக்களான ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனெர்ஜியான பாடலான நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலின் வீடியோவும் துள்ளலான நடனத்துடன் இருந்ததால் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் ஆஸ்கார் 2023 விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக 2 பரிந்துரைகளை பெற்றிருந்தது. இந்த சூழலில்தான், இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது. இவ்விருதை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார். இந்திய திரைப்படம் பெறும் முதல் கோல்டன் குளோப் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிகழாண்டு பாஃப்டா விருது போட்டிக்கான முதற்கட்ட பரிந்துரை பட்டியலில், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது. திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விருது சிறந்த நடிகர், நடிகை, வெளிநாட்டுப் படம் என மொத்தம் 25 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.. இந்த பட்டியலில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும், இறுதிப் போட்டிக்கு 5 படங்கள் தேர்வுசெய்யப்படும் எனவும் கூறப்படுகின்றன.
இதனிடையே, கோல்டன் குளோப் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில், படத்தின் நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரை டேக் செய்து பாரட்டுக்களை தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் “இது ஒரு வரலாற்று வெற்றி. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.