பயங்கரவாதியை ஏவிவிட்டு கொல்வதாக கவர்னருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பேச்சாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது அக்கட்சியின் தலைமை.
கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது, தமிழக அரசு கொடுத்த உரையில் சர்ச்சைக்குரிய மற்றும் அரசை புகழ்வது போன்ற வார்த்தைகளை கவர்னர் தவிர்த்து விட்டார். ஆகவே, கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய இச்சம்பவத்தை, ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் அக்கட்சியினர். எனவே, தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக போஸ்டர் அச்சடித்து ஒட்டியதோடு, கவர்னரை வசைபாடியும் வருகின்றனர். இதையடுத்து, கவர்னரை யாரும் விமர்சிக்கக் கூடாது, போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது என்று ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனாலும், அக்கட்சியினர் கவர்னரை திட்டித் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவன், “கவர்னரை திட்டக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். அந்த மயிரான்டி நீ கொடுத்த பேப்பரை ஒழுங்கா படிச்சிருந்தான்னா, நா அவன் கால்ல பூப்போட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன். எங்க முப்பாட்டன் டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன்னு சொன்னான்னா, அவனை செருப்பால அடிப்பேன்னு சொல்ற உரிமை எனக்கு இருக்கா இல்லையா? அவரு பேர சொல்ல மாட்டேன்னா, நீ போடா காஷ்மீருக்கு. நாங்களே பயங்கரவாதியை அனுப்பி வைக்கிறோம். அவன் உன்னை சுட்டுக் கொல்லட்டும் லவட…பால்” என்று அச்சல் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.
இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, கவர்னரின் இணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி, கவர்னரை அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த சூழலில்தான், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது தி.மு.க. தலைமை. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், போலீஸ் தரப்பிலிருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.