ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஏ.சி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈவேரா. இவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து, அத்தொகுதியில் வெகுவிரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் போட்டியிட வேண்டும் என பலர் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணரான ஆஸ்பயர் சுவாமிநாதன், ஈரோட்டில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலையே கூட வேட்பாளராகக் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக அண்மையில் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது. தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறிப்பாக தற்போது இந்த இடைத்தேர்தலில் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த இக்கட்டான தருணத்தில் தேசிய ஜனநாயக க் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக தேசிய கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் அதனை புதிய நீதிகட்சி வரவேற்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.