திராவிட மாடலுக்கு தமிழில் என்ன சொல். ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிடுக்கிப்பிடியாக கேள்வி எழுப்பினர். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கி வருகிறது தி.மு.க. இதற்காக, ஆங்கிலத்தில் இருக்கும் வணிக, வர்த்தக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று கூறிவருகிறது. ஆனால், தங்களது ஆட்சியை மட்டும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். இது பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட மாடல் என்பதே ஆங்கில வார்த்தைதான். ஆகவே, அதை முதலில் தி.மு.க.வினர் தமிழில் மாற்றட்டும் என்று கூறியிருந்தார். இந்த சூழலில்தான், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகளும், திராவிட மாடலுக்கு தமிழ்ச் சொல் என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதாவது, தமிழகத்திலுள்ள அனைத்து அலுவலகங்கள், வணிக, வர்த்த நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழ் வளர்ச்சிக்கு அனைத்துத் துறையினரும் உண்மையிலேயே கடுமையாகப் பாடுபட வேண்டும். ஆகவே, ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? திராவிட மாடல் என்பதில் ஆங்கிலத்திற்கு பதிலாக முழுவதும் தமிழிலேயே பயன்படுத்தலாமே? ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும். திராவிட மாடலுக்கு தமிழ்ச் சொல்ல என்ன?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
இதுபோன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதில்தான் கிறுகிறுத்துப் போயிருக்கிறது தி.மு.க. தலைமை..