மேஜர் சோம்நாத் சர்மா | Somnath Sharma

மேஜர் சோம்நாத் சர்மா | Somnath Sharma

Share it if you like it

மேஜர் சோம்நாத் சர்மா
நம் பாரத நாட்டின் உயர்ந்த ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதை முதல் முதலாக பெற்ற பெருமைக்குரியவர் இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் சோம்நாத் சர்மா. பாகிஸ்தானுடனான போரில் துணிச்சலுடன் போராடி வீர மரணம் அடைந்த சோம்நாத் சர்மாவை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சோம்நாத் ஷர்மா 1923 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் காங்க்ராவில் (இன்றைய ஹிமாச்சலப் பிரதேசம்) டோக்ரா பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அமர்நாத் சர்மா ஒரு ராணுவ அதிகாரி. மேலும், அவரது உடன்பிறந்தவர்கள் பலர் ராணுவத்தில் பணியாற்றினர். சோம்நாத்தின் இளம் பருவத்தில் அவருடைய தாத்தா அவருக்கு பகவத் கீதையை சொல்லி கொடுத்தார். அதில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
பின்னர் 22 பிப்ரவரி 1942ம் ஆண்டு ராயல் மிலிட்டரி கல்லூரியில் பட்டம் பெற்ற சோம்நாத் சர்மா, அப்போதைய பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 9 வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின்னர் அது இந்திய ராணுவத்தின் 4வது பட்டாலியன், குமாவோன் ரெஜிமென்ட் ஆக ஆனது.
1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் படைப்பிரிவினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தின் துருப்புக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 31ம் தேதி சோம்நாத் ஷர்மாவின் தலைமையில் குமாவோன் படைப்பிரிவின் 4 வது பட்டாலியனின் டி கம்பெனி ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் ஹாக்கி மைதானத்தில் முன்பு ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவரது இடது கை பிளாஸ்டரால் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் போர் சமயத்தில் தன் படைப்பிரிவுடன் தான் இருக்க வேண்டும் என்று அவர் மேலதிகாரிகளை வலியுறுத்தியதால் அவர் காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
நவம்பர் 3, 1947 இல், மேஜர் சோம்நாத் சர்மாவின் படைப்பிரிவினர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பத்காம் கிராமத்தை பாதுகாக்கும்படி உத்தரவிடப்பட்டது.
அந்த சமயம் 700 பேர் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் பழங்குடியினர் குல்மார்க்கின் திசையில் இருந்து பத்காம் கிராமத்தை நெருங்கினர். சோம்நாத் சர்மாவின் படையினர் விரைவில் மூன்று பக்கங்களிலிருந்தும் எதிரிகளால் சூழப்பட்டனர். அடுத்தடுத்த மோட்டார் குண்டுவீச்சினால் அவரது படை பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்தது.
பத்காம் கிராமத்தை இழந்தால் ஸ்ரீநகர் மற்றும் அதன் விமான நிலையம் ஆபத்துக்குள்ளாகும் என்பதை அறிந்து கொண்ட சோம்நாத் சர்மா தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். எதிரிகள் அதிகளவில் இருந்த போதும் தன் வீரர்களை துணிச்சலுடன் போராடுமாறு ஊக்கமளித்தார். பலமுறை கடும் ஆபத்துக்கு மத்தியில் தன் வீரர்களை உற்சாகப்படுத்தியப்படி வீரத்துடன் போரிட்டார்.
அவர் எதிரியுடன் சண்டையிடுவதில் மும்முரமாக இருந்தபோது, அவர் அருகே இருந்த வெடிமருந்துகளில் இருந்த ஒரு மோட்டார் ஷெல் வெடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். சோம்நாத் சர்மா தான் உயிரிழப்பதற்கு சில நிமிடங்கள் முன் தலைமையகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பினார். அவர் அனுப்பிய கடைசி செய்தியில் “எதிரிகள் எங்களிடமிருந்து 50 கெஜம் தூரத்தில் மட்டுமே உள்ளனர். நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம். நாங்கள் பேரழிவு தரும் தாக்குதலுக்கு மத்தியில் இருக்கிறோம். ஆனால் நான் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டேன். எங்களில் கடைசி வீரர் உயிருடன் இருக்கும் வரை போராடுவோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
சோம்நாத் சர்மாவின் தலைமைத்துவம், துணிச்சல் மற்றும் உறுதியான போர் திறன் ஆகியவை அவரது மரணத்திற்கு பின்பும் அவரது படையினரை ஆறு மணி நேரத்துக்கு எதிரிகளுடன் போராட தூண்டியது. இதனால் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் கைகளில் சிக்காமல் தப்பியது.
மேஜர் சோம்நாத் சர்மாவின் வீரம் மற்றும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கி பாரத தேசம் தன் மரியாதை செலுத்தி கவுரவித்தது. மேஜர் சோம்நாத் சர்மாவுக்கு என்றென்றும் நம் வீர வணக்கங்களை செலுத்துவோம்.


Share it if you like it