மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏ.வுக்கு பெண் கவுன்சிலர் ஒரு மசாஜ் செய்து விட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. அஜித் மஹூம்தார். இவர், கடந்த 20-ம் தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அப்போது, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். இரவு தாமதமாகி விட்டதால், தனது தொகுதியின் தேப்னாநதபூர் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமா ராய் பால் வீட்டில் தங்கி இருக்கிறார். அப்போது, எம்.எல்.ஏ. அஜித் மஹூம்தாருக்கு கவுன்சிலர் ரூமா மசாஜ் செய்து விட்டிருக்கிறார்.
மேலும், எம்.எல்.ஏ. கால்களுக்கு மசாஜ் செய்வது போன்ற போட்டோவை ரூமா ராய் பால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, “இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என் வழிகாட்டி என்று மட்டும்தான் சொல்வேன். அவர் என் கடவுள். அவருக்கு சேவை செய்வதற்காக நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படமும், அவரது கருத்தும்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மேற்குவங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைப் பார்த்துவிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், தலைவர்களும் கட்சி உறுப்பினர்களை அடிமைகள்போல் நடத்துகிறார்கள் என்று மேற்குவங்க மாநில பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்கு பதிலளித்திருக்கும் எம்.எல்.ஏ. அஜித் மஹூம்தார், “அண்மையில் நான் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதிலிருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால்தான் ரூமா உதவி செய்தார். கட்சியினருக்கு நான் தந்தையைப் போன்றவன். அப்படி இருக்கையில், கட்சியினர் என்னை கவனித்துக் கொண்டால் என்ன தவறு. அந்த வகையில், என்னை ஒரு மூத்த சகோதரனை பார்த்துக் கொண்டதுபோல தான் ரூமா என்னிடம் நடந்து கொண்டார். இதில் ஏதும் தவறில்லை” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.