முதல்வர் ஸ்டாலினின் பூர்விக கிராமமும், கருணாநிதி பிறந்த ஊருமான திருக்குவளையில் மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், வயல் காட்டுக்குள் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலநிலை நீடிப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது திருக்குவளை கிராமம். இக்கிராமம்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்த ஊராகும். இதன் அருகே முத்தரசபுரம் என்கிற கிராமம் அமைந்திருக்கிறது. இக்கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு நிரந்தரக் கட்டடம் இல்லை. அதேபோல, சுடுகாட்டிற்குச் செல்வதற்கு சாலை வசதியும் இல்லை. இதனால், நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கும் வயல் காட்டுக்கு வழியாக சுமார் 2 கி.மீ. தூரம் உடலை சுமந்து கொம்டு சுடுகாட்டிற்குச் செல்ல வேண்டிய அவலநிலை இருக்கிறது. மேலும், வயல்காடு வழியாகச் செல்வதால், விவசாயிகள் பயிரிட்டிருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்து இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல, சுடுகாட்டில் நிரந்தர கட்டடம் இல்லாததால், தற்காலிகமாக கீத்து கொட்டகை அமைத்துத்தான் உடலை எரியூட்ட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் சடலம் முழுவதுமாக எரியாமல் பாதியிலேயே நின்று விடும். இதனால், அச்சடலங்களை நாயும், நரியும் இழுத்துச் சென்று தின்றுவிட்டு மீதியை வயல் காட்டுக்குள் போட்டு விட்டுச் செல்லும் அவலநிலை நிலவுகிறது. ஆகவே, தங்களது சுடுகாட்டில் உடலை எரியூட்ட நிரந்தர மயானக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும், மயானத்துக்குச் செல்ல ஏதுவாக சாலை அமைத்துத் தரவேண்டும் என்வும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக நாகை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில்தான், முத்தரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உடல்நிலை குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய வழக்கம்போல், சுமார் 2 கி.மீ. தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பான செய்தியும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊரிலேயே இந்த அவலம் நீடிக்கிறது. அதை தீர்க்க வழியில்லை. அப்படி இருக்க, தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் என்ன செய்துவிடப் போகிறார் என்று கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.