கோவை குண்டுவெடிப்பு நினைவுத்தினம்

கோவை குண்டுவெடிப்பு நினைவுத்தினம்

Share it if you like it

கோவை குண்டுவெடிப்பு நினைவுத்தினம்


தமிழக மக்களுக்கு குறிப்பாக கோவை மக்களுக்கு பிப்ரவரி 14ம் தேதி ஒரு கருப்பு தினம். 1998ம் ஆண்டு இதே தினத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தமிழகத்தையே புரட்டி போட்டது.
கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அத்வானி பேச இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு அருகே 100 மீ தூரத்தில் வைக்கப்பட்டிருந்த முதல் குண்டு மிகச் சரியாக மாலை 3.50 மணிக்கு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக திருவனந்தபுரத்தில் இருந்து வரவேண்டிய விமானம், தாமதமானதால் அன்று அத்வானி உயிர் தப்பினார்.
முதல் குண்டு வெடித்து 40 நிமிடங்கள் கழித்து உக்கடம் பகுதியில் இரண்டாவது குண்டு வெடித்தது. அங்கிருந்த ஜவுளிக்கடையில் துணியெடுப்பதற்காக வந்த மூன்று பேர், கையோடு எடுத்து வந்திருந்த சூட்கேஸை வைத்துவிட்டு வெளியேறிய ஐந்து நிமிடங்களில் இந்த குண்டு வெடித்தது.
அதன்பின் கோவையின் காந்திபுரம் பஸ் நிலையம், கோவை ரயில்நிலையத்தின் பார்க்கிங் பகுதி, பா.ஜ.க. நிர்வாகி நடத்தி வந்த ஒரு டிராவல் ஏஜென்ஸி அலுவலகம், ஒப்பனக்கார வீதியில் இருந்த ஒரு நகைக்கடை, ரத்தினபுரியில் இருந்த பா.ஜ.கவின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஒரு குண்டு வெடித்து பல நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பால் கோவை நகரமே கதிகலங்கி போனது. மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன. கோவையில் அறக்கட்டளை நடத்திக் கொண்டிருந்த நிறுவனங்களும், தனியார் கல்லூரிகளும் தங்களுடைய வளாகத்தைக் காயமடைந்தவர்கள் தங்கிக் கொள்ள அனுமதித்தார்கள்.
சரியாக 4.15 மணிக்குக் கோவைக்கு வந்து சேர்ந்த அத்வானி குண்டுவெடிப்பு பற்றி அறிந்தவுடன் பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து திருச்சிக்குக் கிளம்பிச் சென்றார்.
இந்த கொடூர சம்பவம் அன்றைய தினத்துடன் நிற்கவில்லை. அடுத்து வந்த மூன்று நாட்களும் அடுத்தடுத்து 11 குண்டுகள் வெடித்தன. பெரும்பாலான வெடிகுண்டுகள் ஆர். எஸ். புரம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளிலும் அங்கிருந்து பா.ஜ.க. தொண்டர்கள் வெளியேறும் இடங்களிலும் வைக்கப்பட்டிருந்ததால் குண்டுவெடிப்பின் இலக்கு யாரென்று தெளிவாகத் தெரிந்தது.
இந்த தொடர் குண்டுவெடிப்பில் மொத்தம் பெண்கள், குழந்தைகள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. குண்டுவெடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய இயக்கங்களான அல் உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இன்னும் வேறு எங்காவது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தனவா என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கோவையின் கோட்டை மேடு பகுதியில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டீன் குச்சிகளும், டைம் பாம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. அவசர அவசரமாக வெடி மருந்துகளை இன்னொரு இடத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த ஆறு அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தார்கள். அதற்குள் வெடி மருந்து வெடித்து, ஆறு பேரும் அங்கேயே பலியானார்கள். காவல்துறையினருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
கோவை மாநகரம் முழுவதும் கார், மோட்டார் சைக்கிள் எனப் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருந்ததால் அவற்றை அகற்ற ராணுவத்தின் உதவி நாடப்பட்டது. தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களோடு, தமிழ்நாடு கமாண்டோ படையும் களத்தில் இறங்கி, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள்.
திருமால் தெருவில் இருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் தண்ணீர் டிரம்மில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. அதே தெருவில் இருந்த தர்காவில் இன்னொரு வெடிகுண்டு இருந்தது. 70 கிலோ வெடி மருந்து நிரப்பப்பட்ட கார் ஒன்றும் அதே பகுதியில் இருந்த லோகமான்யா தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி, வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய நான்கு நாட்கள் தேவைப்பட்டன.
கோவை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. கீழக்கரை, மேலப்பாளையம், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேவக்கோட்டை, தஞ்சாவூர், நாகர்கோயில், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் நடந்த சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கோவையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. கோவையில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடைகள், இருப்பிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த அல் உம்மா தலைவர் எஸ்.ஏ பாட்ஷா, கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் வீட்டிலிருந்தும் ஏராளமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக கொடுங்கையூரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டீன் குச்சிகள், பைப் வெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
அல் உம்மா தவிர ஜிகாத் கமிட்டியைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
அதேசமயம் மத கலவரத்தை தடுக்க வேண்டும் என காரணம் காட்டி இந்து முன்னணி நிர்வாகிகளும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்த தொடர் குண்டுவெடிப்பால் கோவை மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். யாராவது பெரிய சூட்கேஸ் அல்லது லக்கேஜ் உடன் பயணித்தால் அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்குமளவுக்கு கோவைவாசிகள் பீதியில் இருந்தார்கள்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே அந்த நகரில் மத ரீதியான மோதல்கள் இருந்தன. பழனி பாபா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் 6 பேர் பழிவாங்கும் விதமாக கொல்லப்பட்டார்கள். அதேபோல் காவலர் செல்வராஜ் என்பவர் கொலையான பின்னர் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களின் தொடர்ச்சி தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் என நம்பப்பட்டது.
கோவையில் நடந்த மத மோதல்கள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் குண்டுவெடிப்புச் சம்பவத்தையும் சேர்த்து விசாரித்தது. விசாரணையின் முடிவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் கோவை மாநகரத்தில் வளர்ச்சி பெற்றிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வெடிகுண்டு சம்பவங்களின் சூத்திரதாரி எனக்கருதப்படும் அல் உம்மா அமைப்பை சேர்ந்த எஸ். ஏ. பாஷா உட்பட 35 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கோவை குண்டுவெடிப்பு விசாராணையில் 2007ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்ட 35 நபர்களில் 21 பேரை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. முக்கிய குற்றவாளியான அல் உம்மாவைச் சேர்ந்த எஸ் ஏ. பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் 17 நவம்பர் 2009 அன்று, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்த 9 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது.
மேலும் கடந்த 2018ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 ஆண்டுகள் தேடப்பட்டு வந்த என்.பி.நூஹு என்கிற மங்காவு ரஷீத் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அன்றைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு வழக்கம் போல் அரசியல் சாயம் பூசியது. இது தேர்தலைத் தடுத்து நிறுத்த செய்யப்பட்ட சதி என்றும் சதியின் கரங்கள், மாநில எல்லையைத் தாண்டி நீண்டிருப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டார்.
ஆனால் கோவையில் நடந்த மத கலவரங்களை தடுக்கவோ சிறுபான்மை வாக்குக்காக அங்கு வளர்ந்து வந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யவோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
கோவை குண்டுவெடிப்பு, தமிழக அரசின் உளவுத்துறையின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. கருணாநிதி அரசின் மெத்தனத்தால் இந்த விவகாரம் முளையிலேயே கிள்ளி எறியப்படாமல் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் வரை அலட்சியம் காட்டியதால் பேரிழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பல விமர்சனங்களை திமுக அரசு சந்தித்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்த பின்பும் திமுக அரசின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. வாக்குவங்கி அரசியலுக்காக இங்கு நடக்கும் பயங்கரவாத செயல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவமே சாட்சி. தெய்வாதீனமாக அன்று பொதுமக்கள் யாரும் அதில் சிக்கவில்லை.
தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகள் வளர்ந்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. மக்கள் நலனையும் தேசத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இனியாவது இந்த விஷயத்தில் ஆளும் அரசு கவனம் செலுத்துமா ?


Share it if you like it