புரட்சி வீரர் சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத் என்று பிரபலமாக அறியப்பட்ட சந்திரசேகர் திவாரி ஒரு பாரத புரட்சித் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் 1906ம் ஆண்டு ஜூலை23ம் தேதி சீதாராம் திவாரி, ஜாக்ராணி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரின் இயற்பெயர் சந்திர சேகர் திவாரி. தனது ஆரம்பக் கல்வியை பவ்ராவில் படித்த சந்திரசேகர ஆசாத் பின்னர் உயர்கல்விக்காக பனாரஸ் காசி வித்யாபீடத்திற்குச் சென்றார்.
இளம் வயதிலேயே சந்திரசேகர் ஆசாத் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1921ல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 15 வயதில் ஆங்கிலேயர்களால் முதன்முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு தண்டனையாக 15 கசையடிகள் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் திவாரி என்ற தன் குடும்ப பெயரை நீக்கிவிட்டு விடுதலை என்ற பொருள்படும் ஆசாத் என்ற பெயரை இணைத்து சந்திரசேகர் ஆசாத் ஆக மாறினார்.
இந்த சூழ்நிலையில் சௌரி-சௌரா வன்முறை சம்பவம் காரணமாக மகாத்மா காந்தி பிப்ரவரி 1922 இல் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார். இது சந்திரசேகர் ஆசாத்தின் தீவிர தேசியவாத உணர்வுகளுக்கு பெரிய அடியாக இருந்தது.
தனது இலக்கை அடைய ஒரு பெரியளவிலான அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சந்திரசேகர் ஆசாத் தீர்மானித்தார். இந்தச் சமயத்தில் இந்தியாவின் இளம் புரட்சித் தலைவர்கள் பலரைச் சந்தித்தார்.அதில் ஒருவர் மன்மத் நாத் குப்தா. இவர் தான் 1923ல் துவங்கப்பட்ட புரட்சிக்கர இயக்கமான இந்துஸ்தான் குடியரசு கழகத்தின் நிறுவனரான ராம் பிரசாத் பிஸ்மில்லை சந்திரசேகர் ஆசாத்துக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
இதை தொடர்ந்து சந்திரசேகர் ஆசாத் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தில் உறுப்பினராகி அதற்கான நிதியை திரட்டத் தொடங்கினார். மீதி பணத்தை வசூலிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சொத்துகளை கொள்ளையடித்து பயன்படுத்தினார்.
சந்திரசேகர் ஆசாத் 1925 இல் நடந்த ககோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். இந்த ரயில் கொள்ளையைத் தொடர்ந்து புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆங்கிலேயர்கள் ஈடுபட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக அஷ்பகுல்லா கான், ராஜேந்திர நாத் லஹிரி மற்றும் தாக்கூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்காமல் சந்திரசேகர் ஆசாத், கேசப் சக்ரவர்த்தி மற்றும் முராரி சர்மா ஆகியோர் தப்பினர்.
அதன்பிறகு ஷியோ வர்மா மற்றும் மகாவீர் சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களின் உதவியுடன், சந்திர சேகர் ஆசாத் இந்துஸ்தான் குடியரசு கழகத்தை மறுசீரமைத்தார்.
பின்னர் 1928ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சந்திரசேகர் ஆசாத், பகத் சிங் மற்றும் பிற புரட்சியாளர்களுடன் இணைந்து இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை (HRA) ரகசியமாக மறுசீரமைத்து, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகம் (HSRA) என்று மறுபெயரிட்டார்.
ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்காமல் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1928 ஆம் ஆண்டில், லாகூரில் லாலா லஜபதி ராயின் கொலைக்குப் பழிவாங்க ஆங்கிலேய அதிகாரி ஜே.பி. சாண்டர்ஸை சுட்டுக் கொன்றார். மேலும், சந்திரசேகர் ஆசாத் 1929 இல் இந்தியாவின் வைஸ்ராய் ரயிலை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயன்றார்.
சிறிது காலம், ஆசாத் ஜான்சியை தனது அமைப்பின் தலைமையகமாக மாற்றினார். அவர் ஜான்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர்ச்சா காட்டில் துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை மேற்கொண்டார். அதில் நிபுணத்துவம் பெற்றவுடன் அங்கிருந்த பழங்குடியினத்தவருக்கும் அதை கற்றுக்கொடுத்தார்.
அவர் நீண்ட காலமாக, பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் சதார் நதிக்கரையில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு அருகில் ஒரு குடிசையில் வசித்து வந்தார்.
அருகில் உள்ள தரம்பூரா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுத்தார். இதனால் உள்ளூர்வாசிகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார்.
இதற்கிடையில் ஜான்சியில் வசிக்கும் போது சதர் பஜாரில் உள்ள புந்தேல்கண்ட் மோட்டார் கேரேஜில் கார் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.
இந்த சமயத்தில் சதாசிவ்ராவ் மல்காபுர்கர், விஸ்வநாத் வைசம்பாயன், மற்றும் பகவான் தாஸ் மஹூர் ஆகியோர் அவருடன் நெருங்கிய நண்பர்களாகி அவரது புரட்சிகர கட்சியில் சேர்ந்தனர்.
அப்போதைய காங்கிரஸ் தலைவர்களான ரகுநாத் விநாயக் துலேகர் மற்றும் சீதாராம் பாஸ்கர் பகவத் ஆகியோருக்கும் ஆசாத் விசுவாசமாக இருந்தார்.
புந்தேல்கண்ட் சுதந்திர இயக்கத்தின் தந்தையான திவான் கேஸ்ரி சத்ருகன் சிங், ஆசாத்துக்கு நிதி உதவியும், ஆயுதம் மற்றும் போராளிகளை வழங்கி உதவினார்.
ஆசாத்தின் புரட்சிகர செயல்பாடுகள் அவரது நண்பரும் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் சக உறுப்பினருமான மன்மத் நாத் குப்தாவால் விவரிக்கப்பட்டுள்ளன. குப்தா தனது “இந்திய புரட்சிகர இயக்கத்தின் வரலாறு’’ என்ற புத்தகத்தில் ஆசாத்தின் செயல்பாடுகளை விவரிக்க ஒரு பகுதியை அர்ப்பணித்துள்ளார். இந்தப் பகுதிக்கு “சந்திரசேகர் ஆசாத்” என்று பெயரிட்டுள்ளார்.
சந்திரசேகர் ஆசாத்தின் மரணம்:
சந்திரசேகர் ஆசாத்தின் புரட்சிக்கர நடவடிக்கைகளால் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் அவரது பழைய நண்பர்களில் ஒருவரான வீரபத்ரா திவாரி என்பவர் துரோகியாக மாறி காவல்துறையினருக்கு சந்திரசேகர் ஆசாத் குறித்து துப்பு கொடுத்தார்.
அதன் காரணமாக 1931ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில் காவல்துறையினர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது நண்பர் சுக்தேவ் இருவரையும் சுற்றி வளைத்தனர். போலீசாருடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. ஆசாத்தின் நண்பர் சுக்தேவ் மூன்று போலீசாரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றார். ஆனால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்ததால் தப்பி செல்ல முடியாத சந்திரசேகர் ஆசாத் துப்பாக்கி குண்டுகள் தீர்ந்து போன நிலையில் தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உடனே பூங்காவில் திரண்ட பொதுமக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோஷமிட துவங்கினர். சந்திரசேகர் ஆசாத்துக்கு நன்றி தெரிவித்து முழக்கமிட்டனர்.
இறுதியில் காவல்துறையினர் பொதுமக்களிடம் கூறாமல், சந்திரசேகர் ஆசாத்தின் உடலை தகனம் செய்வதற்காக ரசூலாபாத் காட் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
புரட்சி வீரர் சந்திரசேகர் ஆசாத்தின் நினைவாக நம் பாரதத்தில் உள்ள பல பள்ளிகள், சாலைகள், கல்லூரிகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.
அவர் மரணமடைந்த ஆல்பிரட் பூங்கா அவரது நினைவாக ஆசாத் பூங்கா என அழைக்கப்படுகிறது.
பாரதத்தின் சுதந்திரத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சந்திரசேகர் ஆசாத் புரட்சி வீரர் பகத்சிங் போன்ற பலருக்கு வழிக்காட்டியாக விளங்கினார். பாரதத்தின் சுதந்திர போராட்ட வரலாற்றில் அவருக்கு என்றும் நிலையான இடம் உண்டு. சந்திரசேகர் ஆசாத்தின் நினைவுநாளான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.