கவர்னரை பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, நெறியாளர் கிடுக்கிப்பிடி போடவே, தான் அப்படி பேசவே இல்லை என்று தி.மு.க. பேச்சாளர் மெல்டிங் சரவணன் அந்தர்பல்டி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு வாய் உண்டு, காது இல்லை என்று கிண்டலாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மசோதாவை ஏன் கவர்னர் திருப்பி அனுப்பினார் என்கிற காரணத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழக வழக்கறிஞரும், பேச்சாளருமான சரவணன் அண்ணாதுரையும், நேர்காணல் நடத்தியது ஒரு தனியார் தொலைக்காட்சி. 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தி.மு.க. அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏராளமான பொருட்கள் தரமற்றதாக இருந்தன. குறிப்பாக, வெல்லம் கிரீஸ் போல உருகிப் போய் இருந்தது. அப்போது, வெல்லம் உருகியது ஏன் என்பது குறித்து புதிய விளக்கம் கொடுத்தவர்தான் இந்த சரவணன். இதன் பிறகு மெல்டிங் சரவணன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் பேசிய சரவணன் அண்ணாதுரை, “ஆளுநர் ஒரு மட்டரகமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கி சாப்பிட்டு விட்டு, மக்களுக்கு நல்லது செய்யவில்லை” என்று கூறுகிறார். அப்போது இடைமறித்த நெறியாளர் வேங்கடப்பிரகாஷ், “அரசாலேயே ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர் கவர்னர். அப்படிப்பட்டவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது இந்த அமர்வுக்கு கண்ணியக்குறைவாக இருக்கிறது” என்று சொல்கிறார். அதற்கு சரவணனோ, தான் அப்படிச் சொல்லவே இல்லை என்றும், நான் சொல்லாத ஒன்றை எப்படி சொன்னதாகச் சொல்லலாம் என்றும் பதட்டத்தோடு கேட்கிறார். கவர்னரைப் பற்றி மரியாதைக் குறைவாக பேசியதால் எங்கே தான் மாட்டிக் கொள்ளோமோ என்கிற பயம் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கவர்னரின் உணவு பற்றி சரவணன் பேசியது அப்பட்டமாகத் தெரிகிறது. இதோ அந்த வீடியோ…