செஞ்சிலுவைச் சங்க ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக, தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய கிளைகளில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய கிளைகளில் ஊழல் நடந்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கக் கிளையின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்படி விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த 2020 ஜூலை மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரணையில், தலைவர் ஹரிஷ் எல் மேத்தா, நிர்வாகிகள் எம்.எஸ்.எம்.நஸ்ருதீன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் ஐ.ஆர்.சி.எஸ்., டி.என்.பி.யின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. ஆகவே, கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவுப்படி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, கேரளாவில் தலைவர் மற்றும் துணைத் தலைவரால் 2019-ல் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. எனவே, நிர்வாகக் குழுவை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் கிளையின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் முறைகேடாக நீண்ட நாட்களாக பதவியில் தொடர்ந்து வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தவிர, அஸ்ஸாமிலும் மாநில நிர்வாகக் குழுத் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, தற்போது புதிய மாநில நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநிலக் கிளையின் முன்னாள் தலைவர் செஞ்சிலுவைச் சங்கம் என்ற பெயரில் அறக்கட்டளை பதிவு செய்ததால், அறக்கட்டளை கலைக்கப்பட்டதோடு, அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த விசாரணையைத்தான் தற்போது சி.பி.ஐ. துரிதப்படுத்தி இருக்கிறது.