கணவரின் ஆயுள் விருத்திக்கான காரடையான் நோன்பு!

கணவரின் ஆயுள் விருத்திக்கான காரடையான் நோன்பு!

Share it if you like it

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு வாய்ந்த காரடையான் நோன்பு அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளை வேண்டியும் இளம் பெண்கள் சிறந்த வாழ்க்கை துணை வேண்டியும் வருங்கால கணவரின் நல்வாழ்வுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தமிழ் மாதத்தில் மாசி முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் போது காரடையான் நோம்பு கொண்டாடப்படுகிறது. இந்த காரடையான் நோன்பு பத்தினி தெய்வமான சாவித்திரியின் வரலாற்றுடன் தொடர்புடையது. தன் கணவர் சத்தியவான் அதிக நாள் உயிர் வாழமாட்டார் என தெரிந்தும் அவரை மனதார விரும்பி திருமணம் செய்துக்கொள்கிறார் சாவித்திரி. தன் கணவரின் ஆயுள் விருத்திக்காக தேவி அம்பிகைக்கு தொடர்ந்து விரதம் மேற்கொள்கிறார். அப்படி இருந்தும் ஒருநாள் சத்தியவான் மரணமடைகிறார். தன் கணவரின் உயிரை பறித்து சென்ற எமதர்மராஜனை தன் நோன்பின் சக்தியால் சாவித்திரி பின் தொடர்ந்து செல்கிறார்.

ஒரு மானுட பெண் தன்னை பின் தொடர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த எமன் சாவித்திரியை தடுக்கிறார். ஆனால் சாவித்திரியோ தன் கணவரின் உயிரை திருப்பி அளிக்கும்படி எமனுடன் வாதாடுகிறார். இறுதியில் சாவித்திரி தன் மதிநுட்பத்தால் எமனை வென்று தன் கணவரின் உயிரை மீட்டு கொண்டு வருகிறார். பங்குனி மாதம் தொடங்கிய நாளில் தான் சாவித்திரி தனது கணவர் சத்தியவானின் உயிரை எமனிடம் இருந்து மீட்டெடுத்ததாக நம்பப்படுகிறது. அதனால் தான் பெண்கள் அந்த நாளில் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.

மேலும் கணவனின் உயிரை மீட்டெடுத்த சாவித்திரி, தேவி அம்பிகைக்கு நன்றி செலுத்தும் விதமாக 3 நாட்களுக்கு நோன்பிருந்து அடைகள் செய்து படைத்து வழிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காரடையான் நோன்பின் போது பங்குனி மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பெண்கள் கழுத்தில் நோன்பு சரடு என்றழைக்கப்படும் மஞ்சள் நூலைக் கட்டிக் கொள்வர். சுமங்கலி பெண்கள் அல்லது திருமண வயதில் உள்ள பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி காமாட்சி அம்மனுக்கு அல்லது ஏதேனும் ஒரு அம்மன் படத்திற்கு பூமாலை சூட்டி வழிப்பட்டு தங்கள் விரதத்தை துவங்குவார்கள்.

காரடையான் நோம்புக்கான விரத நேரம் காலை 06:31 முதல் 06:47 வரை, தோராயமாக 15 நிமிடங்கள் நீடிக்கும், மஞ்சள் சரடுக்கான முகூர்த்த நேரம் காலை 06:47 மணி வரை இருக்கும். உண்ணாவிரதத்தின் காலம் உள்ளூர் சூரிய உதயம் மற்றும் சங்கரமண தருணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் அது இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த நன்னாளில் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் சாகும் வரை தீர்க்க சுமங்கலியாகவே இருக்க பெண்கள் மனதார பிரார்த்தனை செய்வார்கள். விரதம் இருக்கும் பெண்கள், காரடையான் நோம்புக்கான நைவேத்தியமான காரடை தயாரித்து, வெண்ணெய் கட்டியுடன் வைத்து பூஜைகள் செய்து கடவுளுக்குப் படைப்பார்கள்.

காரடை இரண்டு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவை அடிப்படை மூலப்பொருளாக கொண்டு கருப்பட்டி வெல்லம், தேங்காய் சேர்த்து இனிப்பு அடையும் மற்றும் உப்பு சேர்த்து உப்பு அடையும் தயாரிக்கப்படுகின்றன. நைவேத்தியத்துடன் இரண்டு வெற்றிலை, குங்குமம், பூக்கள், மஞ்சள், தேங்காய், வாழைப்பழம் மற்றும் சில நாணயங்கள் அடங்கிய தாம்பூலம் தட்டும் பரிமாறப்படுகிறது. சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் பெண்கள் நைவேத்தியமாக படைக்கப்பட்ட காரடையை சாப்பிடுவார்கள். இந்த நோன்பிற்கு சாவித்திரி விரதம், கெளரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு போன்ற பல பெயர்கள் உண்டு. ஆனால் பரவலாக காரடையான் நோன்பு என குறிப்பிடப்படுகிறது.


Share it if you like it