ராம நவமி சிறப்பு பூஜைக்காக வந்த பக்தர்கள் 35 பேர் கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் அமைந்திருக்கும் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயிலில், நேற்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கோயிலில் கான்கிரீட் சிலாப் கொண்டு மூடப்பட்டிருந்த சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணற்றின் மீது அதிக பக்தர்கள் ஏறி நின்றனர். அப்போது, பாரம் தாங்காமல் திடீரென கிணற்றின் சிலாப் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்ள். மாயமான ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். விபத்து குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். நிலைமையை அவ்வப்போது கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ராம நவமி தினத்தன்று நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.