பி.பி.சி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம், “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்கிற தலைப்பில் சமீபத்தில் 2 ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உள்விவகாரத்தில் இங்கிலாந்து எப்படி தலையிடலாம் என்று ஏராளமானோர் கேள்வி எழுப்பினர். அதேபோல, குஜராத் கலவரத்துக்கும் பாரத் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்து விட்டது. அப்படி இருக்க, மோடியை குற்றவாளியைப் போல சித்தரித்து பி.பி.சி. எப்படி ஆவணப்படத்தை வெளியிடலாம் என்று இந்திய மக்கள் தங்களது கடும் கண்டனத்தை பி.பி.சி.க்கு தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், பி.பி.சி.யின் மீது பல்வேறு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் தான், பி.பி.சி.யின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் அமலாக்கத்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதில், வெளிநாட்டு நிதியை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததில் விதிமீறல்கள் செய்து இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பி.பி.சி.யின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.