இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தற்போதைய தலைவியின் மகனுமான அலெக்ஸ், லஞ்சம் வாங்கியதாக, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது முன்னிலைக்கோட்டை ஊராட்சி. இதன் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அலெக்ஸ். கடந்த தேர்தலில் இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், அவரது தாயார் அந்தோணியம்மாளை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். எனினும், அந்தோணியம்மாள் பெயரளவிற்குத்தான் தலைவர். மற்றபடி, ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் அனைத்து பணிகளையும் முன்னாள் தலைவர் அலெக்ஸ்தான் கவனித்து வருகிறார்.
இந்த சூழலில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், தனது தாயார் அந்தோணியம்மாளுடன் தி.மு.க.வில் இணைந்து விட்டார். இதனிடையே, முன்னிலைக்கோட்டை கிராமத்திற்குட்பட்ட ஆலவந்தான் ஓடைப் பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை, வீடு இல்லாத ஏழைகள் 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, முன்னிலைக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர்களிடம் தலா 10,000 முதல் 20,000 ரூபாய்வரை அலெக்ஸ் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சின்னாளபட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களிடம், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதையடுத்து, கைத்தறி நெசவாளர்களும் முன்னிலைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த பணம் கொடுத்திருக்கிறார்கள். இந்த காட்சிகளை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார்கள். தற்போது, கைத்தறி நெசவாளர்களிடம் 5,000 ரூபாய் வீதம் லஞ்சம் வாங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து, திட்ட அதிகாரி திலகவதி தலைமையிலான குழுவினர் ஊராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அலெக்ஸ், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு விட்டது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு, அப்பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டி, பாதைகள் இல்லாமல் இருந்தது. ஆகவே, அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக பணம் கொடுத்தார்கள். மற்றபடி, நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, லஞ்சம் கொடுத்தவர்களையும் அலெக்ஸ் மிரட்டி, இதேபோல சொல்ல வேண்டும் என்று கூறியதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அதன்படியே, அவர்களும் அலெக்ஸ் சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதை வசைபாடி வருகிறார்கள்.