மதுரை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு, அதே கட்சியைச் சேர்ந்த மண்டலத் தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை காஜிமார் தெரு 54-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த நூர்ஜஹான். இவர், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் இருக்கிறார். இந்த சூழலில், மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண் கவுன்சிலரான நூர்ஜஹானும் பங்கேற்றார். அப்போது, வார்டு தேவைகள் குறித்து பேசிய நூர்ஜஹான், அதற்கான நிதியை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறார்.
அதற்கு, அங்கிருந்த மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர் மிசா பாண்டியன், “நன்றி சொல்வதற்காக மட்டுமே கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு வேறு பிரச்னைகளை பேசக்கூடாது” என்று கூறியதோடு, நூர்ஜஹானை தகாத வார்த்தைகளாலும், மத ரீதியாகவும் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார் நூர்ஜஹான்.
மேலும், மண்டலத் தலைவருக்கு பதிலாக, அவரது கணவர் மிசா பாண்டியன் ஆக்டிங் தலைவராக செயல்படுவது குறித்தும், அதிகாரிகள் முன்னிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும், கவுன்சிலர் நூர்ஜஹான் நகரச் செயலாளர் தளபதி, தொகுதியின் அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார். மதுரை மாநகராட்சியில் தி.மு.க.வினரிடையே அதிகார போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக மாநகராட்சி கூட்டம் முதல் மண்டலக் கூட்டம் வரை ரகளையிலேயே முடிகிறது. இது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், உள்ளாட்சி அதிகாரங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.