அடித்துக் கொண்டு புரள தி.மு.க. மேடை அல்ல… கனிமொழிக்கு அண்ணாமலை சவுக்கடி பதில்!

அடித்துக் கொண்டு புரள தி.மு.க. மேடை அல்ல… கனிமொழிக்கு அண்ணாமலை சவுக்கடி பதில்!

Share it if you like it

கர்நாடகாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு, அடித்துக்கொண்டு புரள இது ஒன்றும் தி.மு.க. மேடை அல்ல என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, பா.ஜ.க.வும் காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கன்னட வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க. கட்சியினரை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ட்வீட் செய்திருக்கும் அண்ணாமலை, “அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்களின் ஒரே பணி என்று” தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it