முஸ்லீம் பெண்ணுடன் நட்பில் இருந்ததற்காக, ஹிந்து இளைஞரை சரமாரியாகத் தாக்கிய 6 முஸ்லீம் இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். 19 வயதான இவருக்கும், பழைய நகரில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த 5 மாதங்களாக பழகி வந்திருக்கிறார்கள். இந்த சூழலில், கார்த்திக் கடந்த 11-ம் தேதி தனது காதலியை சந்திப்பதற்காக யாகுத்புராவில் உள்ள எஸ்.ஆர்.டி. காலனிக்கு வந்திருக்கிறார். பின்னர், அங்கிருந்த ஒரு நகை அடகுக்கடை உரிமையாளரின் செல்போனை பயன்படுத்தி, காதலியை அடகுக் கடை அருகே வருமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அப்பெண்ணும் அங்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், ஹிந்து பையனுடன் முஸ்லீம் பெண் இருப்பதைக் கண்ட அப்பகுதி முஸ்லீம் இளைஞர்கள் சிலர், இருவரிடமும் தகராறு செய்திருக்கிறார்கள். பின்னர், முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கார்த்திக்கை கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் கட்டையால் தாக்கி இருக்கிறார்கள். இதில் கார்த்திக் படுகாயமடைந்த நிலையில், அவரது தந்தை நரசிம்ம கவுடாவிற்கு போன் போட்டு 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். இதன் பிறகு, கார்த்திக்கை வேறொரு இடத்திற்கு கடத்திச் சென்றனர். ஆனால், கார்த்திக் அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்து விட்டார்.
இதையடுத்து, இதுகுறித்து தனது தந்தையுடன் சேர்ந்து ரெயின் பஜார் போலீஸில் புகார் செய்தார் கார்த்திக். இதைத் தொடர்ந்து, கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய இக்ராம், முகமது, நயீம், சோஹைல் மற்றும் 2 பேர் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், “குற்றவாளிகள் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.