இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றினார் : “புவி அரசியல் காரணமாக நிகழும் மோதல்கள், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்க உயர்வு, பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகளால் ஏற்பட்டுள்ள கடினமான நிதிநிலை ஆகியவை காரணமாக வளர்ச்சியில் பின்தங்குவதற்கான சவாலை சர்வதேச பொருளாதாரம் எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2022ல் 3.4 சதவீதமாக இருந்த உலகின் பொருளாதார வளர்ச்சி 2023ல் 2.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
2024-ல் இது 3 சதவீதமாக சற்று உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதிலும், 2023-ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஆசியா-பசுபிக் நாடுகள் 70 சதவீத பங்கினை வகிக்கும் என்றும், உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15 சதவீத பங்களிப்பை வழங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. எதிர்கால பொருளாதாரக் கொள்கை நிச்சயமற்றதாக உள்ள போதிலும், சர்வதேச வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை எளிதாக்கவும், எரிபொருள் மற்றும் உணவு சந்தைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும், உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், சீன பொருளாதாரத்திற்கு பதிலளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக உள்ளது. வலுவான மூலதனம், வலுவான பணப்புழக்க நிலை, பாதுகாப்பான கடன் அளிக்கும் நடைமுறை, மேம்பட்ட லாபம் ஆகியவற்றுடன் இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக உள்ளது. 2023-24ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என நாங்கள் கூறி இருக்கிறோம். இந்த நிதியாண்டில் விவசாய உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்றும், பருவமழை வழக்கம்போல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
சேவைத் துறையும் வழக்கம்போல் சிறப்பாக செயல்படும். 2022-23 நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகள் இம்மாத இறுதியில் வரும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்தைக் கடந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை என சக்திகாந்த தாஸ் கூறினார்.