கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தற்போது நடை பெற்று வருகிறது. தேர்தல் சமயத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி தெளித்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவாதத்தை சுட்டிக்காட்டி, பல இடங்களில் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குகனபள்ளி கிராமத்தில் மின் கட்டணம் வசூலிக்க மின்வாரிய ஊழியர் மஞ்சுநாத் சென்று இருக்கிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹிரேமட் என்பவர் அரசு ஊழியரிடம் மின் கட்டணத்தை செலுத்த முடியாது என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில், கடும் கோவமடைந்த ஹிரேமட் அரசு ஊழியரின் கன்னத்தில் மாறி மாறி அடித்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் சிலர், பயணச்சீட்டை பணம் கொடுத்து வாங்க மறுத்து நடத்துநருடன் சண்டையிடும் காணொளிகளும் தற்போது வைரலாகி வருகிறது.