மணிப்பூர் மகள்களுக்கு நேர்ந்த துயரத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மெயிட்டி சமூகத்துக்கும், பழங்குடியினரான குக்கி உட்பட பிற சமூகத்துக்கும் இடையே இடு ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. தற்போது இது பெரும் கலவரமாக வெடித்திருக்கும் நிலையில், இதுவரை உயிரிழப்புகள், வீடுகள், கடைகள் எரிந்து நாசம் என்றே செய்திகள் வெளியாகி வந்தது. இந் நிலையில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை இளைஞர்கள் சிலர் சாலையில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பான விசாரணையில், இச்சம்பவம் கடந்த மே 4-ம் தேதி நடந்தது என்றும், அந்த 2 பெண்களும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே போலீஸார் வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால், இதுவரை இது தொடர்பாக யாரையும் போலீஸார் கைதுசெய்யவில்லை. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிடம் இது பற்றி பேசியதாகக் கூறியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, இன்று பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆகவே, இக்கூட்டத் தொடரில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடும். இந்த சூழலில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “மணிப்பூர் சம்பவம் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதில் எந்தக் குற்றவாளியும் தப்ப மாட்டார்கள் என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். சட்டம் தன் முழு வலிமையுடன் முடிவெடுக்கும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். மேலும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.