சமீபமாக தமிழகத்தில் கள்ளத்தோணி கலாச்சாரம் தலை தூக்குவதும் கடல் வழி ஊடுருவல் காரர்களின் வருகை தமிழகத்தில் அதிகரிப்பதும் தினசரி செய்தியாகிறது. குறிப்பாக தென் தமிழக கடலோர பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல்களும் கடத்தலும் அதிகரிப்பதும் ஆங்காங்கே தங்கம் – போதை – வஸ்துக்கள் ஆயுதங்கள் பிடிப்படுவதும் சமீப காலமாக தொடர் செய்தியாகிறது. இந்தக் கள்ளத் தோணி வரலாறு காரணமாக கடந்த காலங்களில் தேசம் கடந்து வந்த இழப்புக்களை மனதில் வைத்து மீண்டும் விபரீதம் நிகழ்வு முன் இவற்றிற்கெல்லாம் நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த ஊடுருவல் விவகாரம் வெறும் தமிழகம் என்ற மாநில எல்லைக்குள்ளான சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. சர்வதேச அளவிலான சதிகாரர்களின் மையமாக பிரிவினைவாதிகளின் கூடாரமாக தமிழகத்தை மாற்றி வரும் கூட்டு சதிகாரர்களின் திட்டமிட்ட வியூகம் என்பதை உணர்ந்து விபரீதம் நிகழும் முன் மத்திய அரசு களம் இறங்குவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
அண்டை நாடான இலங்கையில் இன ரீதியிலான பிரிவினையும் உள்நாட்டு குழப்பமும் தொடங்கிய காலம் முதல் அங்குள்ள மக்கள் அபயம் கேட்டு அகதிகளாக இந்திய எல்லைக்கு வருவது அரை நூற்றாண்டு கால தொடர் நிகழ்வு. இலங்கை வேறு நாடாக இருந்த போதிலும் பண்பாடு – கலாச்சார ரீதியாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. பிரிட்டிஷாரின் பிரிவினையால் மட்டுமே அது துண்டாடப்பட்டது என்ற காரணத்தால் இந்தியா – இலங்கை இடையே மாறுபாடு இல்லாத உறவு பிணைப்பு எப்போதும் இருந்தது. அந்த அடிப்படையில் அங்கிருந்து அகதிகளாக வருபவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை இந்தியாவிடம் இருந்தது. ஆனால் அங்குள்ள உள்நாட்டு குழப்பமும் அதை மையமாக வைத்த தமிழகத்தில் வளர்ந்த தமிழ்த் தேசிய அரசியலும் தென்னிந்தியாவையும் இலங்கையும் முன்வைத்து சர்வதேச அளவில் நடந்து வந்த பிரிவினை சதிகளும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியதன் விளைவு தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்களை உருவாக்கியது.
இலங்கையில் சிங்களர் – தமிழர் என்ற ரீதியிலான இனப் பிரிவினை காரணமாக அங்குள்ள தமிழர்கள் பெருவாரியாக இங்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுக்கு அருகில் இருக்கும் தேசம் மொழி – இனம் என்று அனைத்து வகையிலும் உடன்படும் ஒரு மாநிலம் . அதோடு இந்தியா எப்போதும் நல்லெண்ண நட்புறவு கொண்ட நாடு என்பதால் தங்களை நிச்சயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் அவர்கள் அகதிகளாக இந்தியா வந்தார்கள். இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதால் இந்திய அரசும் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மக்களை அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது தனது தார்மீக கடமையாக எண்ணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்தது.
இதற்கிடையே இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் அங்கிருந்த போராட்டக் குழுக்களுக்கும் இடையே நடந்த சிக்கல்கள் எல்லாம் பெரும் கலவரமாக வெடித்த போது அதனால் சமூகப் பிளவு உருவானது . ஒரு புறம் இலங்கை ராணுவம் – போராட்டக் குழுக்கள் இடையேயான யுத்தம். மறுபுறம் போராட்டக் குழுக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான கலவரம் என்று இடையே அகப்பட்ட மக்கள் பெருவாரியாக அகதிகளாக இந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள்.
அவர்களில் வெளிப்படையாக அகதிகளாக வந்தடைந்து உரிய பதிவு ஆவணங்களோடு முகாம்களில் தங்கி இருந்து இந்திய அரசின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் இலங்கையின் போராட்டக் குழுவை சார்ந்தவர்கள் இலங்கையின் குடிமக்களாக இருந்த போதிலும் மதரீதியாக உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இலங்கையில் உள்நாட்டில் பெரும் குற்றங்களை இழைத்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்காக புகலிடம் தேடி எல்லை தாண்டுபவர்கள் என்று பலரும் இந்த அகதிகள் போர்வையில் வரத் தொடங்கியதும் பல நேரங்களில் அவர்கள் இந்திய அரசுக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக கரையேர தொடங்கியது. தான் தான் தமிழகத்தின் பாதுகாப்பிற்கும் அதன் மூலம் இந்திய இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறத் தொடங்கியது.
இந்திய அரசுக்கும் இலங்கையில் உள்ள போராட்டக் குழுக்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படும் போது இந்த இரண்டு தரப்பையும் எதிரியாக நினைக்கும் இலங்கை அரசு இந்த அகதிகள் போர்வையில் உளவாளிகளை அனுப்பத் தொடங்கியது. இந்திய அரசுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே சிக்கல் எழுந்த காலத்தில் இந்தியாவை தங்களது பிடியில் நிறுத்த வேண்டும் அல்லது அதை மையமாக வைத்து தமிழகத்தில் தங்களுக்கான பிடிமானத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் போராட்டக் குழுக்கள் தங்களுக்கான உளவாளிகளை அனுப்பத் தொடங்கியது. இந்த இரண்டின் போர்வையிலும் சில அந்நிய உளவாளிகளும் பன்னாட்டு உளவாளிகளும் ஊடுருவ தொடங்கியதன் பலன் 80 களின் இறுதியில் தமிழகம் பாதுகாப்பாற்ற ஒரு சூழலில் அச்சத்தோடு வாழும் நிலை உருவானது.
தமிழ் – தமிழர் என்ற பெயரில் தமிழகத்தில் நடக்கும் அரசியல் கட்சிகள் – அமைப்புகள் இலங்கையின் உள்நாட்டு போராட்டக் குழுக்களை வெளிப்படையாக ஆதரித்து அவர்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் திரட்டும் களமாக தமிழகத்தை மாற்றி வைத்தார்கள். இலங்கை அரசை தன் வசம் நிறுத்த வேண்டும் அங்கு தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலங்களில் இந்திய அரசும் இந்த விஷயத்தில் தடுமாற நினைத்ததன் பலன் கடந்த காலங்களில் இவற்றையெல்லாம் மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்தது.
இதன் விளைவாக ஒரு புறம் உள்நாட்டு யுத்தத்தால் இலங்கை அரசின் பொருளாதார தடைக்கு உட்பட்ட இலங்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழகத்தில் இருந்து கடல் வழியே இலங்கைக்கு கடத்தப்பட்டது. இதற்கு இந்திய மீனவர்கள் பெருமளவில் உதவி செய்வதாக கருதி இலங்கை ராணுவம் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் கொன்று குவிக்க தொடங்கியது. அதன் காரணமாக இந்திய தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இங்கு பெருமளவில் உயிர் சேதமும் அதை முன்வைத்து பெரும் அரசியலும் நிகழ்ந்தது.
மறுபுறம் இலங்கையில் உள்ள போராட்டக் குழுக்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி குவிப்பதற்கு கடத்தல் சந்தை மூலம் பொருளாதாரம் திரட்டப்பட்டது. அதற்கு தேவையான தங்கம் – போதை – ஆயுதம் என்று அனைத்துக் கடத்தலுக்குமான போக்குவரத்து முனைமமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை பயன்படுத்தியதும் அதற்கு தமிழகம் முழுவதும் இருந்த சமூக விரோதிகளும் கடத்தல் காரர்களும் தமிழ் – தமிழர் என்ற அரசியல் செய்த பெரும் கட்சிகள் அமைப்புகளும் முழு ஆதரவு அளித்ததும் சாதாரண சிக்கல்களை எல்லாம் தேசத்தின் இறையாண்மையை அசைத்துப் பார்க்கும் இடியாப்ப சிக்கலாக மாற்றியது.
தமிழ் – தமிழர் என்ற பெயரில் இங்கிருக்கும் வாக்கு வங்கி அரசியல் அதை முன்வைத்து மத்திய அரசிடம் தங்களுக்கான செல்வாக்கை நிலை நிறுத்த பார்த்த வியூகம் இதற்கெல்லாம் பெரிய அளவில் ஆதரவு தரக்கூடிய நிலையிலான திரையுலக – ஊடக ஆதரவு விவரம் அறியாத அரசியல் விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்களின் ஆதரவு என்று தமிழ் – தமிழர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நம்மை கேட்பார் இல்லை என்ற அசாத்தியமான துணிச்சலை இங்குள்ள அரசியல் களம் இலங்கையில் உள்ள போராட்டக்காரர்களுக்கு வர வைத்தது. இதன் காரணமாக ஒரு புறம் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கையின் போராட்டக் குழுக்கள் பயிற்சி பெற்றதும் மறுபுறம் சட்டவிரோதமாக ஆயுதங்களோடு அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி திரிந்ததும் பயிற்சியில் ஈடுபட்டதும் 80 களின் இறுதியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை வேரோடு சாய்த்தது.
சென்னையில் இந்திய அரசின் பாதுகாப்பில் தங்கி இருந்த இலங்கையின் ஒரு போராட்டக் குழு தலைவரையும் அவருடன் தங்கி இருந்த அவரது ஆதரவாளர்கள் என்று சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களை இலங்கை ஈழத் தமிழர்களின் அடையாளமாக தாங்கள் மட்டுமே நிலை பெற வேண்டும் என்று நினைத்த ஒரு பெரும் போராட்டக் குழு பட்டப்பகலில் சுட்டுக் கொன்றதும் கொடூர கொலையை நிகழ்த்திவிட்டு அவர்கள் பத்திரமாக இங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு பிரயாண பட்டதும் அதுவரையில் இங்குள்ள மாநில அரசு துரும்பை கூட கிள்ளி போடாமல் வேடிக்கை பார்த்ததும் தமிழக மக்களை அச்சத்தின் எல்லையில் நிறுத்தியது. தமிழகம் முழுவதிலும் இரவு நேரங்களில் கடற்கரை பகுதிகளில் கள்ளத் தோணிகளில் கரை ஏறுவதும் இங்கிருந்து பயணம் படுவதும் என்று கிட்டத்தட்ட தடையில்லா கள்ளத்தோணி பிரயாணம் நடந்தது. தங்கம் போதை ஆயுதம் என்று கடத்தல் பொருட்கள் பற்றிய எத்தனையோ எச்சரிக்கைகளை இந்திய உளவுத்துறை அப்போதைய தமிழக மாநில உளவுத்துறைக்கும் உள்துறைக்கும் எத்தனையோ முறை எச்சரித்தும் அவர்களின் அரசியல் அனைத்தையும் உதாசீனம் செய்தது.
கடந்த காலங்களில் சென்னை தொடங்கி ராமேஸ்வரம் வரை தமிழகம் முழுவதிலும் சோதனை சாவடிகளில் இருக்கும் தமிழக காவல்துறை சார்ந்த அதிகாரிகளை இலங்கையில் உள்ள போராட்ட குழுக்காரர்கள் ஒருமையில் பேசி அவர்களை பிடித்து தூர தள்ளிவிட்டு தங்களின் வாகனங்களில் ஆயுதங்களோடு சர்வ சாதாரணமாக சோதனை சாவடிகளை கடந்து போகும் நிலையும் அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவோ வழக்குப்பதிவு செய்யவோ அதிகாரம் இல்லாத கைகள் கட்டப்பட்ட நிலையில் தான் தமிழக காவல்துறையும் இருந்தது. தனது கடமையை செய்தே தீருவேன் என்று சோதனை சாவடியில் கடுமை காட்டிய ஒரு தமிழக காவல்துறை அதிகாரியை துப்பாக்கிச் சூடு மூலம் காயப்படுத்தி விட்டு இதே தமிழகத்தில் இலங்கையின் போராட்டக்காரர்கள் தப்பிச்சென்ற நிகழ்வையும் அது கொடுத்த எச்சரிக்கையையும் கூட தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போனது.
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. அதிலும் கள்ளத்தனமாக ஊடுருவும் அண்டை நாட்டு போராட்டக்காரர்கள் சொந்த நாட்டின் காவல்துறையில் இருக்கும் ஒரு இந்தியனை தாக்குதல் நடத்தி விட்டு தப்பி போவார்கள் எனில் இங்கு பொது மக்களின் நிலை என்னவாக இருக்கும் ? என்ற கேள்வி பல மட்டத்தில் எழுந்த போதிலும் அப்போதைய மாநில அரசு அதற்கு பதில் தரவும் அது போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களை தேடிப் பிடித்து தண்டிக்கவும் அல்லது அதற்கு காரணமானவர்களை கண்டித்து எச்சரிக்கை செய்யவும் தயாராக இல்லை. ஆனால் பாவப்பட்ட தொப்புள் கொடி உறவுகள் என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் மலிவான மனநிலையில் தான் இருந்தது.
எந்தவித ஆவணமும் இன்றி திறந்தவெளி மைதானத்தை போல தமிழகத்தின் கடற்பரப்புகளை அந்நியர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததும் அவர்களின் கள்ளத்தோணி ஊடுருவல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டதும் போதை ஆயுதம் என்று கடத்தலை மறைமுகமாக ஆதரித்ததும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான போதிலும் மௌனமாக கடந்து போனதும் ஒரு கட்டத்தில் தமிழகம் இந்தியாவில் இருக்கிறதா ? அல்லது இலங்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டதா? என்ற கேள்வி எழுப்பும் நிலையில் கொண்டு நிறுத்தியது . அப்போதும் மாநில அரசு அசைந்து கொடுக்கவில்லை. மத்திய அரசும் விழிப்புடன் களமிறங்கவில்லை.
எத்தனையோ எச்சரிக்கைகள் அபாய சமிக்ஞைகள் தெரிந்த போதிலும் அனைத்தையும் உள்நோக்கத்துடன் கடந்து போனதன் விளைவு 90களில் முன்னாள் பிரதமர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் உளவுத்துறை மற்றும் மற்றும் போராட்ட குழுவால் தொடர் உயிர் ஆபத்து எழுந்தது. அதற்குரிய எந்த முன்னெச்சரிக்கையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 91 மே மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தவர் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10 மணி அளவில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதல் அதிலும் ஒரு பெண் போராளியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளானது. அந்நிகழ்வில் ஒரு முன்னாள் பிரதமர் தன் பாதுகாப்பு சகாக்கள் – பொதுமக்கள் – காவல்துறை சார்ந்தவர்கள் – கட்சிக்காரர்கள் என்று கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் சேர்த்துக் கொல்லப்பட்டு அவரின் சடலத்தை கூட மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் கண்டு பொட்டலம் கட்டி கொண்டு போகும் துரதிஷ்ட நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு ஓரளவு தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் இன்றளவிலும் இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக தமிழகத்திற்கு வருவதும் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக கிளம்பி போவதுமான செயல்பாடுகள் நின்ற பாடு இல்லை. இதற்கு தமிழக அரசு பணிகளிலும் இந்திய அரசு பணிகளிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் – தமிழர் அரசியல் சித்தாந்தவாதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா வகையிலும் கொடுக்கும் ஆதரவும் முக்கிய காரணம் என்று பலமான குற்றச்சாட்டு எழுந்த போதிலும் அதற்கு எதிர் நடவடிக்கைகள் என்று இன்றுவரை ஏதுமில்லை.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலத்தில் இலங்கையின் போராட்டக் குழுக்களை சார்ந்த முக்கிய நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் என்று பலரும் கள்ளத் தோணியில் தமிழக கடலோரம் வழியாக நுழைந்ததும் இங்குள்ள விமான நிலையங்கள் மூலமாக அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பத்திரமாக போய் சேர்ந்ததும் பின் நாளில் தெரிய வந்த போது தேசம் அதிர்ந்தது. அதில் சிலர் இந்திய பாஸ்போர்ட் அடையாளத்தோடு தப்பி போனதும் அவர்களில் சிலர் கருப்பு வரிசை என்னும் தடை செய்யப்பட்ட குடி புகல் அட்டவணையில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தபோது இந்தியாவில் விமான நிலையங்களும் குடி புகல் நடவடிக்கைகளும் எவ்வளவு பாதுகாப்பு குறைபாடுகளோடு இருந்திருக்கிறது ? என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலும் அதன் பின்னணியில் இருந்த சர்வதேச பயங்கரவாத சதியும் அதில் தென்னிந்திய அளவில் பலரும் ஆதரவாளர்களாக சதியில் தொடர்புடையவர்களாக இருந்ததும் இலங்கை வழியிலான ஊடுருவலுக்கும் பயங்கரவாதத்திற்கும் இன்னமும் இந்தியா பாதுகாப்பான இடமாகத்தான் இருந்து வருகிறது என்ற கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால் இதையெல்லாம் பேச வேண்டிய ஊடகங்கள் தமிழ் – தமிழர் என்ற போர்வையில் மக்களை மழுங்கடிக்க செய்து சொந்த தேசத்திற்கு எதிராக மடைமாற்றும் விஷம பிரச்சாரத்தையே தொடர்ச்சியாக செய்கிறது. இங்குள்ள கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் தமிழ் – தமிழர் என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல் செய்து அதன் மூலம் அதிகார பதவியை கைப்பற்றுவது ஒன்றையே குறியாக வைத்திருக்கிறது.
தமிழ் – தமிழர் என்ற போர்வையில் பிரிவினைவாதம் பேசுவதும் உலகெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் கொழிக்கும் வருமானத்தை தக்க வைத்துக் கொள்வதுமாக தகிக்கும் அரசியல் களத்தை இன்றளவும் கொண்டுள்ள தமிழ் இன அரசியல் அதன் லாபத்தை அறுவடை செய்யும் தமிழகத்தின் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் தேவை. அதற்காக அவர்கள் மாநிலத்தின் பாதுகாப்பையும் தேசத்தின் பாதுகாப்பையும் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள் என்பதே எதார்த்த உண்மை. தங்களின் ஆதாயத்திற்காகவும் பதவி அதிகாரத்திற்காகவும் எதையும் செய்ய தயாராக இருக்கும் அந்த போலி தமிழ் ஆர்வலர்களும் அரசியல் வியாபாரிகளும் கட்சி அரசியல் – அமைப்புகள் என்று பல்வேறு பெயர்களில் பிரிந்து இருந்தாலும் இந்து – இந்திய விரோதம் என்ற ஒற்றைப்புள்ளியில் அவர்கள் அனைவரும் இணைகிறார்கள் என்பதே உண்மை. காஷ்மீரின் பிரிவினைவாதி யாசின் மாலிக் தமிழக நாம் தமிழர் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக வந்ததும் இங்குள்ள தமிழ் – தமிழர் அரசியல் வியாபாரிகள் எல்லாம் ஒருமித்த குரலில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்ததும் இதற்கான சாட்சியங்கள்.
அந்த ஒற்றுமை தான் இன்று வரை இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிறுபான்மை தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் இந்திய அரசு கொடுக்க முனையும் சலுகையை கூட அங்குள்ள மற்ற மதத்தவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையோடு அவர்கள் செய்யும் பயங்கரவாத அரசியல். இங்குள்ள அகதிகள் முகாம்களில் இருப்பவர்களை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்று கேட்பவர்கள் யாரும் அதே அகதிகள் போர்வையில் இங்கு ஊடுருவும் கடத்தல்காரர்கள் பயங்கரவாதிகள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு கடந்த காலங்களில் இந்திய அரசு செய்த உதவிகளை முன்வைத்து இந்திய அரசுக்கு பழியும் அவமானமும் தேடித்தரும் எந்த ஒரு அரசியல்வாதியும் அதே இலங்கையில் உள்ள போராட்டக் குழுக்களால் தமிழ் மண்ணில் நிகழ்ந்த கொடூரங்களையும் இந்திய தேசம் எதிர்கொண்ட இழப்புகளையும் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.
இங்குள்ள இந்திய ராணுவம் நல்லெண்ண நடவடிக்கையாக அமைதியை நிலைநாட்டப் போனதை ஆக்கிரமிப்பு என்று அவமதிப்பவர்கள். அங்கு அவர்கள் ஒரு புறம் இலங்கையின் உள்நாட்டு போராட்டக் குழுக்கள் மறுபுறம் இலங்கை ராணுவம் என்று இரண்டிற்கும் இடையில் அகப்பட்டு சிதைந்த சவமாக வந்ததை பற்றி இதுவரை பேசியதில்லை. ஆனால் சொந்த மண்ணில் இந்திய ராணுவத்தை உளவுத்துறையை இழித்தும் பழித்தும் இன்று வரை சர்வசாதாரணமாக பொது மேடைகளில் பேசி வருகிறார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்திய ஆலயங்களில் வந்து வழிபடுவதை எதிர்ப்பவர்கள் யாரும் அகதிகள் என்ற பெயரில் இங்கு வந்து சமூக விரோத தேசவிரோத செய்திகளில் செய்பவர்களை ஒரு நாளும் கண்டித்தது இல்லை. இலங்கை மக்களை வாடிக்கையாளர்களாக வரவேற்று வர்த்தகம் செய்யும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களால் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தியர்களுக்கு ஆதரவாக ஒரு நாளும் குரல் கொடுத்ததில்லை.
இங்கு முகாம்களின் அகதிகளாக இருப்பவர்களுக்கு இந்திய அரசு ரேஷன் அரசு பள்ளி கல்லூரிகளில் சேர்க்கை – தனியார் தொழில் வேலை கல்வி வாய்ப்புகள் என்று அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கு எத்தனையோ வழிகளை செய்து தருவதை பற்றி பேச ஆளில்லை. இன்றைய இந்திய அரசு இலங்கையின் தமிழர்களுக்கு முன் எடுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு பற்றி அக்கறை ஒத்துழைப்பு இல்லை. இங்குள்ள அகதிகளை கண்காணிப்பில்லாமல் சுதந்திரமாக உலக விட வேண்டும் என்று பேசுபவர்கள் யாரும் அதே முகாம்களில் இருந்து குற்றப் பின்னணி கொண்டவர்கள் பற்றியோ அல்லது அவர்கள் மீதான வழக்குகள் – விசாரணை – தண்டனைகள் பற்றியோ எந்த கேள்வியும் எழுப்புவது இல்லை. கேள்வி எடுப்பவர்களை எல்லாம் தமிழர் விரோதிகள் – தமிழின துரோகிகள் என்று மலிவான அரசியல் தான் செய்கிறார்கள்.
இதன் மூலம் இவர்கள் இந்த நிறுவ பார்ப்பதெல்லாம் தமிழன் என்ற பெயரில் அடையாளத்தில் எந்த கொடுங் குற்றத்தையும் செய்யலாம். தமிழ் தமிழர் என்ற பெயரில் அரசியல் செய்து எதையும் சாதித்துக் கொள்ளலாம். தமிழ் அரசியல் என்ற பெயரால் ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துக் கொண்டால் அதை வைத்து இந்திய இறையாண்மையை கூட அசைத்துப் பார்க்கலாம் என்ற திட்டமிட்ட தேச விரோத செயல்கள் மட்டுமே. இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு எந்திரங்கள் மூலம் ஊடுருவல் காரர்களை தடுக்க முடியும் என்றும் இங்குள்ள குடியேறிகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று இனியும் மத்திய உள்துறை அமைச்சகம் நினைக்குமானால் அதற்காக இந்திய அரசு தரப்போகும் விலை பெரும் இழப்பாக இருக்கும் என்பதே கடந்த கால வரலாறுகள் சொல்லும் பாடம்.
மாநில உளவுத்துறையும் காவல்துறையும் மாநிலத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களிலும் தேச பாதுகாப்பு சார்ந்த விஷயங்களிலும் கூட வாக்கு வாங்கி அரசியலை மட்டுமே செய்கிறது என்பதற்கு கோவை சம்பவமும் அதன் பின்னணியில் இருந்த ஒத்துழையாமை தன்மையும் சாட்சியம். அப்படிப்பட்டவர்கள் காலம் காலமாக தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் அதிகார கொள்ளையில் கோடிகளை குவிப்பதற்கும் பேருதவியாக இருக்கும் தமிழ் – தமிழர் என்ற அரசியலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் இது போன்ற ஊடுருவல்களையும் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களையும் தேசவிரோதிகளையும் பயங்கரவாதிகளையும் கண்காணிப்பார்கள் என்றோ அல்லது தங்களின் கை மீறி போன பட்சத்தில் உரிய தகவல் பரிமாற்றத்தை மத்திய அரசுக்கு கொடுப்பார்கள் என்றோ இனியும் மத்திய அரசு நம்பி இருக்குமானால் அது தேசத்திற்கு பெரும் பாதுகாப்பு குந்தகத்தை ஏற்படுத்தும் .
கட்சி – அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு மாபெரும் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் அவரை கொன்ற கொலையாளிகள் என்று ஒட்டுமொத்த தேசமும் அவர்களை குற்றவாளிகளாக கொலையாளிகளாக பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தின் கட்சிகள் – அமைப்புகள் – அரசியல்வாதிகள் அவர்களை அப்பாவிகளாக சித்தரித்ததும் அவர்களின் விடுதலைக்காக எந்த பிரயத்தனத்தையும் செய்ய தயாரானதும் சட்டசபையிலேயே அதற்கான தீர்மானங்களை முன்மொழிந்ததையும் சீர்தூக்கிப் பார்த்தாலே இங்கு எந்த அளவுக்கு தமிழ் – தமிழர் அரசியல் போர்வையில் பிரிவினை வாதமும் தேச விரோதமும் தலை விரித்து ஆடுகிறது என்பதை தெளிவாக உணர முடியும்.
தமிழன் என்ற அடையாளம் இருந்தால் போதும் அவன் எந்த அயோக்கியத்தனத்தையும் செய்யலாம். தமிழர் என்ற அரசியல் வட்டத்திற்குள் வந்துவிட்டால் போதும் அவர்கள் செய்யும் எந்த பிரிவினைவாத – பயங்கரவாத – தேச விரோத செயலுக்கும் சட்ட பாதுகாப்பு – சமூக பாதுகாப்பும் கிடைத்துவிடும் என்ற ஒரு தவறான பாதுகாப்பு வளையத்தையும் முன் உதாரணத்தையும் நிலை நிறுத்தி இருக்கும் அபாயமான அரசியல் களத்தில் மாநிலத்தின் பாதுகாப்பு பலப்படும் என்று நம்புவதற்கில்லை.
இதற்கெல்லாம் தடையாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பிற்கு வரும் உளவுத்துறை சார்ந்த நபரையே விரோதியாக பாவித்து அவரை எப்படியாவது இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இவர்கள் செய்யும் நாலாந்தர அரசியலை பார்த்தாலே இவர்களின் எண்ணமும் செயலும் தெளிவாக விளங்கும். சமீபமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கும் மர்மமான படகுகளும் அந்த படகுகளில் பல நேரங்களில் நம் பகைநாட்டை சேர்ந்தவர்களும் வந்ததும் அவர்களை கைது செய்ததும் சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல.
மும்பை தாக்குதல் சமயத்தின் போதே அரபிக் கடல் கடலோர பாதுகாப்பு பற்றிய தகவல்கள் இலங்கை வழியே பகைநாட்டிற்கு போயிருக்க கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது .தமிழகம் வழியாக இந்தியாவின் பாதுகாப்பு தகவல்கள் வெளியேறுகிறது என்று இலங்கை உளவுத்துறை வழியாக தகவல்கள் வந்ததும் நமக்கு உணர்த்துவது ஒன்றே தமிழகத்தை மையமாக வைத்து பெரும் இந்திய விரோதமும் அந்நிய சதிகளும் அரங்கேறுகிறது என்பதும் அவர்களுக்கெல்லாம் இங்கு முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருவது கசப்பான உண்மை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உளவுத்துறையின் தகவல்கள் தேசிய பாதுகாப்பு முகமையின் சோதனைகள் – விசாரணைகள் – கைதுகள் மயிரிழையில் தகர்க்கப்பட்ட பல்வேறு சதிகள் என்று அனைத்தும் தமிழகத்தின் ஏதோ ஒரு அரசியல் நூலிலே ஒன்றிணைவது கண்கூடாக பார்க்க முடியும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பிடிபடும் போதைப் பொருட்களும் – ஆயுதங்களும் கைது செய்யப்படும் நபர்களும் விசாரணையில் சொல்லும் விஷயங்கள் இலங்கையில் இருந்தும் இலங்கை வழியாக இதர நாடுகளில் இருந்தும் வரும் கடத்தல் பொருட்களும் பத்திரமாக கரையேறுவது தமிழகம் வழியாக இந்தியாவில் தான் என்பதும் தமிழகத்தில் இருந்து தான் அவை இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்படுவதும் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகிறது.
ஒரு சிறு எண்ணிக்கையிலான கும்பல் தமிழ் – தமிழர் என்ற அரசியல் வியாபாரிகளை தங்களின் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தையே தங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான களமாக மாற்றுவதும் அதன் மூலம் ஒரு தேசத்தின் பாதுகாப்பு இறையாண்மையை அச்சுறுத்த பார்ப்பதும் சர்வதேச அளவில் நம் தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாகவே கருத வேண்டும். உலக அரங்கில் பொருளாதார – அரசியல் ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தில் இருந்து வரும் பாரதம் போன்ற நட்புறவும் நல்லெண்ணமும் வேண்டும் ஒரு நாட்டிற்கு இது போன்ற ஒரு இழிவும் அவ சொல்லும் தேவையற்றது. அதிலும் இந்த அவமதிப்பு அந்நிய சதிகாரர்களாலும் உள்நாட்டு துரோகிகளாலும் வரக்கூடும் என்றால் மத்திய அரசு தயவு தாட்சண்யம் இன்றி அந்த அவப்பெயரை துடைக்கவும் அதற்கு காரணமானவர்களை கடும் நடவடிக்கையின் மூலம் அடக்கி வைப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.
தமிழகத்தில் நிலவும் மர்மமான நடவடிக்கைகளையும் அதன் மூலம் எழும் பாதுகாப்பு சிக்கல்களையும் அதற்கு காரணமான சந்தேகத்திற்கு இடமான நபர்கள் – அமைப்புகள் – கட்சிகள் உள்ளிட்ட அனைவரது பின்னணியையும் முழுமையாக ஆராய்ந்து தேசவிரோத செயல்களுக்கு துணை நின்றவர்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு – சமூக அமைதி – பொது பாதுகாப்பு என்பது சாத்தியமாகும் . தமிழகம் என்ற மாநிலத்தின் பாதுகாப்பில் ஏற்படும் குளறுபடிகள் மாநிலத்தின் குளறுபடிகள் என்பதை கடந்து தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்க கூடியவை. அதையும் கடந்து சர்வதேச அளவில் பயங்கரவாத புகலிடம் என்ற அவமதிப்பை நமக்குப் பெற்றுத் தர கூடும் என்பதால் மத்திய அரசு உடனடியாக களம் இறங்க வேண்டும்.
தமிழகத்தில் தொப்புள் கொடி பெயரில் ஊடுருவும் அந்நியர்களையும் அவர்களை ஆதரித்து ஆதாயம் தேடும் இங்குள்ள தேச விரோதிகளையும் இவற்றிற்கெல்லாம் காரணமான பிரிவினைவாத சித்தாந்தம் கொண்ட கட்சிகள் – அமைப்புகளை நிரந்தர தடை விதித்தும் அரசியல்வாதிகளையும் கடும் நடவடிக்கைகளின் மூலம் அடக்கி வைத்தால் மட்டுமே இந்த ஊடுருவல்களும் அதனால் ஏற்படும் அபாயங்களும் முடிவுக்கு வரும். கடந்த கால பேரிழப்புகளையும் அதன் தொடர்ச்சியான குழப்பங்கள் – அரசியல் சிக்கல்களையும் மனதில் வைத்து இந்திய அரசு கவனமுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் கடந்த காலங்களைப் போல வெறும் தற்காப்பு நடவடிக்கைகளாக மட்டும் இல்லாமல் இனி எக்காலத்திலும் தமிழகத்தில் அந்நியர்களால் ஊடுருவல் – கடத்தல் – பிரிவினைவாதம் – பயங்கரவாதம் நுழையாத வண்ணம் தடுக்க வேண்டும். இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக தமிழ் – தமிழர் என்ற பிரிவினை அரசியலை முன்னெடுப்பதை நிரந்தரமாக தடை செய்து தேசிய இறையாண்மையை பாதுகாக்கும் கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.