அகிலம் முழுவதும் களை கட்டும் ஆடி கிருத்திகை உற்சவம்

அகிலம் முழுவதும் களை கட்டும் ஆடி கிருத்திகை உற்சவம்

Share it if you like it

ஓம் சரவண பவ

அகிலம் முழுவதும் களை கட்டும் ஆடி கிருத்திகை உற்சவம். உலகெங்கும் வாழும் இந்து உறவுகளுக்கு ஆடிக்கிருத்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

குன்றிருக்கும் இடமெல்லாம் எம் குமரனின் கோவில் இருக்கும் என்ற ஔவையின் அன்பு மொழிக்கு ஏற்ப தமிழகம் முழுவதிலும் குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் கோவில் இன்று ஆடி கிருத்திகை நாளில் விழா கோலம் காண்கிறது. பாரதம் முழுவதிலும் பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டு நின்றாளும் சுப்ரமணியன். பாரதத்திற்கு வெளியேயும் பல்வேறு தேசங்களில் கோவில் கண்டு நாடிவரும் அன்பர்களுக்கு நாளும் துணை இருக்கும் முருகப்பெருமானின் முழுமையான அருளை வாரி வழங்கும் ஆடி கிருத்திகை திருநாள் இன்று உலகம் முழுவதும் அடியார் பெருமக்களின் பால் குடம் – காவடி – என்று பக்தி கொண்டாட்டமாகிறது. கொரோனா கால முடக்கம் காரணமாக முழுமையான மூன்று ஆண்டுகள் தடையில் இருந்த இந்த ஆடி உற்சவம் புது வெள்ளம் போல பெருகும் உற்சாகத்தோடு சிறு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்த முருக பெருமானுக்கு அவனின் ஜென்ம நட்சத்திரத்தை காட்டிலும் அவனை வளர்ப்புத் தாயாக இருந்து வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களின் வடிவான கார்த்திகை நட்சத்திர நாளே மிகவும் உகந்ததாக ஆன்மீகப் புராணங்கள் குறிப்பிடுகிறது. அந்த வழியில் கிருத்திகை நட்சத்திரம் வழிபாடு முருகனுக்கு உசிதம். குறிப்பாக தக்ஷிணாயன புண்ணிய கால தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை . அவனது வளர்ப்பு தாய்களான கார்த்திகை பெண்களின் வடிவான கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை கிருத்திகை. உத்தராயண புண்ணிய காலத்தில் தை மாதத்தில் வரும் தை கிருத்திகை திருநாளும் அதி உன்னதம் வாய்ந்த நாட்களாக பூஜிக்கப்படுகிறது .

இந்த கிருத்திகை நாட்களில் விரதம் இருப்பதும் காவடி சாற்றுவதும் முருகனுக்கு வேல் அலகு குத்தி வழிபாடு செய்வதும், நேர்த்திக் கடன் முடி காணிக்கை எல்லாம் காலம் காலமாக நம் மரபு சார்ந்த வழிபாடாக இருந்து வருகிறது.

இதிகாசங்கள் – புராணங்கள் தொடர்ந்து சங்க இலக்கியங்கள் வரை முருகப்பெருமானை பாடாத இலக்கியங்களும் இல்லை. அவனைக் குறிப்பிடாத ஆன்மீகப் புராணங்களும் இல்லை. அவ்வழியில் சைவம் – வைணவம் – கௌமாரம் என்று இந்து ஆன்மீகத்தின் எவ்வழி நிற்கும் மக்களுக்கும் ஞானப் பண்டிதனாய் அழகன் குமரன் அவர்கள் வீட்டுப் பிள்ளையாய் ஒரு இஷ்ட தெய்வமாய் இருப்பவன்.

பனிமலை வாழும் சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்தவன். கார்த்திகை பெண்களின் மகனாக வளர்ந்தவன். மண்ணளந்த நாயகியின் மகனாக மலைமகளின் வேலைக் கொண்டு வெற்றியை நிலை நிறுத்தி தர்மத்தை ஸ்தாபித்தவன். விண்ணளந்த நாராயணனின் மருமகன். தேவர்கள் துயர் துடைத்து அவர்கள் சேனாதிபதியானவன். தேவ குலதெய்வமாகி தேவ கண்ணிகையும் வேடுவர் குல மங்கையளையும் தன் மங்கையர்களாக்கி குன்றதோரும் குடியிருந்து அபயம் என்று தாள் பணியும் அன்பர்களை அரவணைக்கும் அழகன் அவன்.

சரவணப் பொய்கையில் தாமரையில் பிறந்தவன். ஆயக்கலைகள் 64 ல் சிறந்து வளர்ந்தவன். ஏற்ற கடமைக்கு உரிய பொறுப்போடு இருக்க வேண்டியதன் அவசியத்தை நான்முகனுக்கு புகழுக்கு உணர்த்தியவன். கடமை தவறினால் தண்டனைகள் கடுமையாகும் என்பதை திருவிளையாடலில் நிகழ்த்தி காட்டியவன். தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமியவன் . ஔவையின் அன்பிற்கும் அருணகிரிநாதரின் பக்திக்கும் மெச்சி இறங்கி வந்தவன். அழகு தமிழிலும் அன்பர்கள் மனதிலும் நின்றாளும் அழகு குமரன் அவனுக்கு ஆடி கிருத்திகை நாளில் அகிலம் முழுவதிலும் திருநாள் கொண்டாட்டங்கள் உற்சாகத்தோடு தொடங்குகிறது.

ஞானத்தின் வடிவாக குமரன் போற்றப்படுவதாலேயே ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் தாய் மொழியின் வடிவாக குமரன் வணங்கப்படுகிறான். அவ்வழியில் தான் தமிழர்கள் முருகனை தங்கள் மொழியின் உருவமாக தமிழ் மொழியை முருகனின் அழகாக மெச்சி அதன் பலனாக தமிழ் கடவுள் முருகன் என்று வழங்கும் பக்தி மார்க்கம் உருவானது. ஈரேழு உலகத்திற்கும் பொதுவான அவனை ஒரு மொழியின் வட்டத்திற்குள்ளோ ஒரு எல்லையின் குறுகிய வட்டத்திற்குள் எவராலும் அடைக்க முடியாது.

குன்று தோறும் வீற்றிருந்து மலைவாழ் மக்களின் குறைதீர்க்கும் குல தெய்வமானவன். அடர்ந்த வனங்களுக்குள் எழுந்தருளி வேடுவர் குலமும் வணங்கும் பெருமை மிக்கவன். சமவெளியில் கோவில் கொண்டு குடியானவர்களை வழி நடத்தியவன். கடற்கரையிலும் பாலையிலும் கூட மக்களின் அன்பிற்கும் பக்திக்கும் எழுந்தருளி அருள்பாலித்தவன். கடலுக்கு வெளியே திரை கடலோடி திரவியும் தேடச் சென்ற சம்சாரிகளுக்கும் வழி துணையாய் போனவன்.
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா வடிவேலன் துணையின்றி பிழைக்கவில்லை முருகா என்று பிழைப்பு தேடி போன இடங்களில் கூட மக்கள் தனக்கென்று வீடு இல்லாவிட்டாலும் கூட தன் குமரனுக்கு என்று ஒரு கோவில் இருக்க வேண்டும் என்று மனம் உருகி வழிபடும் அளவில் மக்கள் மத்தியில் பக்தியில் நீங்கா இடம் பிடித்த நித்திலம் அவன்.

உலகெங்கும் வியாபித்திருந்த சனாதனத்தின் அடையாளமான அந்த குமரனின் திருமேனிகளையும் கோவில்களையும் இன்றளவும் உலகெங்கிலும் அகழ்வாய்வு பணிகள் வெளிக்கொண்டு வருகிறது. இந்தோனேசிய காடுகள் தொடங்கி அமேசான் மழைக்காடுகள் வரையிலும் இந்து ஆலயத்தின் சாட்சியங்களில் அவனது அடையாளமும் நிச்சயம் இருக்கிறது.
காந்தார குகைகள் முதல் இந்தோனேஷியா காடுகள் வரையிலும் அவனது ஆலயங்கள் சிதிலமடைந்த நிலையில் கூட இன்னமும் வரலாற்று சாட்சியங்களாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா கனடா என்று மாற்று மதம் ஆளும் நாடுகளில் கூட குமரனுக்கு என்று தனி கோவில்கள் உண்டு. அவனுக்கென்று ஆண்டு உற்சவங்கள் கொடை விழாக்கள் உண்டு. அவை அனைத்திற்கும் அந்நாட்டு அரசு மக்களின் முழு மரியாதையும் உண்டு. அங்கெல்லாம் அறநிலைத்துறை என்ற அபகரிப்பு இல்லை. அரசின் அராஜகம் இல்லை. அம்மக்களும் ஏமாளிகள் இல்லை.

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் முருகனின் கோவில்களை காணலாம். அறுபடை வீடுகள் கடந்து ஊர் தோறும் ஆலயமும் குன்று தோறும் குடியும் கொண்டவனை இனம் என்ற வட்டத்திற்குள் அடைக்க நினைப்பது எவ்வளவு பெரிய மடமை? அதை செய்பவர்கள் நிச்சயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடியாது.

தமிழகத்திற்கு வெளியே தென்னிந்தியா முழுவதிலும்பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களை காண முடியும் வட இந்தியர்களிலும் குமரனை வழிபடும் வழக்கம் உண்டு. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் குஹே சுப்ரமண்யா கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் ஆன்மீகவாதிகள் அதிகம்.

வாழ்வில் வளம் தேடி போன இடத்தில் நம் மக்கள் கட்டி ஆளும் குஜராத்தில் இருக்கும் சுப்பிரமணிய ஆலயம் ஆகம விதியின் படி அத்தனை விழாவும் உற்சவம் காண்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. உலகின் குருவாக வலம் வரும் மூன்று முறை குஜராத் மாநில முதல்வராக இரண்டு முறை இந்திய பிரதமராக இருக்கும் மோடி என்னும் அந்த ராஜரிஷியின் தனி விருப்ப கோவில் அதுதான் என்பதும் ஒவ்வொரு முறை தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போதும் அவர் அந்த ஆலயத்தில் வழிபாடு செய்த பிறகுதான் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அளவு குமரக் கடவுள் வட இந்திய மோடியின் பிரதான கடவுள் என்பது முருகனின் உன்னதத்திற்கும் இந்திய மக்களின் ஒருமித்த பக்திக்கும் உதாரணம். இதை உணராத அறிவிலிகள் வட இந்தியாவில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு பிள்ளையோடு குடும்ப கட்டுப்பாடு நடந்து விட்டதா? என்று கேட்பது அவர்கள் அழிவின் ஆரம்பம் அன்றி வேறென்ன. ?

இலங்கையில் முருக கடவுளுக்கு என்று விசேஷித்த இடம் உண்டு. நல்லூர் முருகன் கோவில் என்றால் இலங்கையின் வரலாற்றிலும் அரசியலிலும் ஒரு பெரும் திருப்புமுனையின் அடையாளம் என்றே பொருள். சிங்கப்பூரின் வீதிகளில் இன்றைய தினம் முருகக் கடவுளுக்கு பூஜை பொருள் ஏந்தி செல்லும் இந்தியர் அல்லாத சீன மலேயய மக்களை நீங்கள் பார்க்க முடியும்.

மலேசியாவில் மலையாளும் பத்து மலை முருகனின் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனோடு வரும் மலேசிய மக்களும் உண்டு. மலேசியா வாழ் இந்தியர்களும் உண்டு. இவர்களை எல்லாம் கடந்து மலேயாவை பூர்வீகமாகக் கொண்ட சீன – இஸ்லாமிய மக்களும் அதில் அடக்கம் . அரபு நாடுகளில் சாலை முழுவதும் உள்ள அலறி பூக்கள் எல்லாம் அரசாணை ஏதுமின்றி இன்று அங்குள்ள இந்து மக்களின் வீடுகளில் ஆடி கிருத்திகை பூஜை பொருளாக ஆலயத்தில் மாலையாக மாறி இருக்கும்.

அமீரக ஆலயத்திலும் பஹ்ரைன் கோவிலிலும் இன்றைய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ய தேவையான மண் பாண்டம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் எல்லாம் பத்து நாட்கள் முன்பிருந்தே இந்தியாவில் இருந்து விமானத்தில் போயிருக்கும்.

சிங்கப்பூர் ஆலயத்தில் அவனது திருமேனி சாற்றும் சந்தனத்திற்கு உபயதாரர் ஒரு இலங்கை பூர்வ குடி இந்துவும் இந்திய பூர்வ குடி இந்துவும் சேர்ந்த பங்களிப்பாக இருக்கும். அவனது சந்தன பிரசாதம் வேண்டி காத்திருக்கும் கூட்டத்தில் இந்து இந்தியர் அல்லாத சர்வதேச சமூகம் தான் அதிகம் இருக்கும்.

இத்தனை மகத்தான முருகனை இங்கு முருகனை முப்பாட்டன் என்று பித்தலாட்டம் பேசி முருகன் கடவுள் இல்லை நம்மை போல் ஒரு மனிதன் தான் என்று நிறுவ நினைக்கும் மிஷனரிகளின் கைக்கூலிகள் எந்த மண்ணிலும் வாழ அருகதை அற்றவர்கள்.

மொரிசியஸ் தோட்டங்களில் விளையும் கரும்பின் முதல் சாரும் முருகனுக்கே அர்ப்பணம் ஆகும். உருவாகும் வெல்லக் கட்டிகளிலும் முருகனின் நைவேத்தியத்திற்கென்று ஒரு பங்கு ஆலயம் தேடிப் போகும். தென்னாப்பிரிக்க காடுகளில் விளையும் கரும்பிலும் கனியிலும் முருகனுக்கும் ஒரு பங்கு உண்டு. அதுவே அவனது சக்திக்கும் மக்களின் மனம் அறிந்த பக்திக்கும் இன்றளவும் பாலமாக தொடர்கிறது.

ஹிந்து சனாதன தர்மத்தின் அடையாளம் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் முருகனுக்கும் ஒரு இடம் உண்டு. சைவம் வைணவம் என்ற பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு முருகனை தன் செல்ல குழந்தையாக குமரனாக குழந்தையின் வடிவாக பாவித்து வணங்கும் வழக்கம் உலகெங்கும் உண்டு. பிள்ளை பேரு இல்லாத துரதிர்ஷ்டசாலிகளுக்கு அவன் மகனாவான். சோதரன் இல்லா மக்களுக்கு அவன் சகோதரன் ஆவான். கல்வியில் பின் தங்கிய குழந்தைகளுக்கு அவன் சிறப்பு ஆசிரியன் ஆவான். எப்படி பார்த்தாலும் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கல்வி கேள்வி ஞானம் வித்தை என்று வாழ்வை மேம்படச் செய்யும் தகு நிலைகளின் வடிவாக சரஸ்வதியை போலவே முருகனும் வணங்கப்படுகிறான் என்பதை உண்மை.

ஒரு ஏழை கூலி தன் மகனின் கல்விக்காக ஊரின் அருகில் உள்ள மலைவாரத்தில் இருக்கும் முருகனிடம் வேண்டுதல் வைத்து பாதயாத்திரையாக பயணம் செய்வான். எனில். எனில் நாடாளும் அரசன் தன் மகனின் வளர்ச்சிக்காக பத்து மலை முருகனிடம் கோரிக்கை வைத்து நேர்திக் கடனோடு விமானத்தில் பயணிப்பான். வித்தியாசம் இதில் மட்டும் தான் இருக்குமே ஒழிய பேதமின்றி அனைத்து மக்களின் அன்பிற்கும் பக்திக்கும் பாத்திரம் ஆனவன் முருகப்பெருமான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பழனி மலையில் இருக்கும் நவபாஷாண முருகன் சிலை ஆயினாலும் சரி. கொல்லிமலையில் வடித்து வைத்த சாதாரண கருங்கல் சிலையானாலும் சரி. ஸ்ரீசைலம் மலைமீது வழி துணையாக வரும் முருகன் அரூபமானாலும் சரி. உருவங்கள் மாறலாம். ஊர் பெயர் மாறலாம். ஆனால் அத்தனைக்குள்ளும் ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளாய் இருந்து உள்ளுவோர் உள்ளமும் வேண்டுகோரின் உணர்விலும் உதிரம் போல ஓடி ஆன்மீகத்தில் திளைத்து பக்திக்கு மெச்சி பண்பிற்கு இறங்கி வந்து வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்பியவர்களை அரவணைத்து அருள் பாலிக்கும் அழகு குமரன் அவன் ஒருவனே என்பது ஆன்மீகத்தின் தார்ப்பரியும் உணர்ந்த மேன் மக்களுக்கு மட்டுமே புரியும்.

கண்ணுக்குத் தெரிந்த குறைகளுக்கும் சிக்கலுக்கு மட்டுமே முருகப்பெருமான் தீர்வு அல்ல. நம் கண்ணுக்குத் தெரியாத பில்லி சூனியம் மாயம் உள்ளிட்ட சிக்கலுக்கும் அவனே பொறுப்பு. நம் உடலில் உள்ளே மறைந்திருக்கும் உள்ளுறுப்புகளுக்கும் கூட அந்த குமரன் அவனே காப்பு. யாமிருக்க பயமேன் என்னும் அழகன் அவன் இருக்க கவலைகள் நமக்கு எதற்கு ? என்று பாமரனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று உடலின் அங்கங்களை அணு அணுவாய் குறிப்பிட்டு கவலைகளை விட்டு விடு காப்பது முருகன் பொறுப்பு என்று வழிகாட்டும் வழிபாட்டுப் பாடல்களில் கூட ஆபாசத்தையும் அநாகரிக்கத்தையும் தேடிப்பிடித்து அனர்த்தம் கற்பித்து சுய இன்பம் காணும் இழி பிறவிகளுக்கு உலகாளும் உமையவளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவளின் வடிவான வேலையே கைகளில் தாங்கி நிற்கும் மாட்சிமை பொருந்திய மால் முருகன் வடிவேலனவன் மகத்துவம் புரிய வாய்ப்பில்லை.

அறுசுவை உணவுகளும் அபூர்வ மூலிகைகளும் அன்றலர்ந்த வாசனை மலர்களும் அரிதிலும் அரிதான நறுமணப் பொருட்களுக்கும் உரித்தானவன். அபிஷேக பிரியன். அலங்கார ரூபன் . ஆடை ஆபரண மோகன் என்று ராஜா அலங்கார காரகனாக நின்றாளும் முருகனும் அவனே. ஒற்றைக்கோவனத்தோடு ஆண்டியின் கோலமாக விபூதி அலங்காரத்தில் குன்றாளும் குமரனும் அவனே.

இதன் பொருள் அவனது கோலமும் காட்சியும் மாறலாம். ஆனால் அவனது பக்தியும் சக்தியும் மாறாது. அவனது பூஜையும் வழிபாடும் வேறுபடலாம். ஆனால் பக்தர்களின் அன்பும் ஆன்மீகமும் குறைபடாது என்ற அப்பழுக்கற்ற முருக பக்தி. சமர்ப்பணத்துடன் கூடிய ஆன்மீகத் தேடலுக்கு நான் எப்போதும் கைவரும் நம்பிக்கையாளன் என்னும் தத்துவத்தை விளங்கச் செய்யும் தவக்கோலம் தான் முருகனவன் வேறுபட்ட உருவமும் மாறுபட்ட வழிபாடும்.

ஆனால் ஆன்மீகத்தின் அடிப்படையும் பக்தியின் அரிச்சுவடி கூட அறியாத தனிமனித ஒழுக்கமும் சுய அறிவும் கூட இல்லாத மனித வடிவிலான மிருகங்கள் அவனது தத்துவத்தையும் உணராது ஆன்மீக அடியார்களின் பக்தியையும் மதிக்காது முருகனை தனிநாடு தனி கட்சி தனிக்கொடி என்ற பிரிவினையின் அடையாளமாக முன்னிறுத்துவதும் நிறுவ பார்ப்பதும் எல்லாம் கலியுக அசுரத்தனத்தின் எச்சமின்றி வேறல்ல.

ஆன்மீக பக்தியின் அடையாளமாக அவனை தகப்பனாகவும் பாவிக்கலாம். குழந்தையாகவும் கொஞ்சி மகிழலாம். ஆசானாக வணங்கலாம். குருவாகவும் ஏற்கலாம். அனைத்தும் அவனே என்று சரணடைந்து மோட்சமும் வேண்டலாம். அது அனைத்துமே பக்தியின் உச்சம் . ஆனால் அவனை முப்பாட்டன் என்று மனிதனாக நிறுவ பார்ப்பது நாளை அவனே எனது பங்காளி சம்பந்தி என்று உறவுமுறை கொண்டாடுவது பின்னாளில் முருகன் என்பவன் கடவுள் அல்ல அவனும் நம்மை போல் மனிதனே என்று நிறுவ பார்க்கும் சூழ்ச்சியன்றி வேறல்ல. படிப்படியாக முருகனின் உறவினர்களையும் இறைவன் வழியல்ல. நம்மைப் போல் மனிதர்கள் என்று நிறுவ பார்த்து ஒட்டுமொத்த சனாதனத்தின் ஆணிவேரை அறுத்து அந்நிய மதங்களுக்கு தரகு வேலை பார்க்கும் சதி தான் என்பதை ஆன்மீகவாதிகள் நன்கு அறிவோம்.

ஆனாலும் வரம் கொடுத்த சிவனுக்கே சவால் விடுத்து அகம்பாவத்தின் வழியில் ஆணவத்தின் பிடியில் ஆடித்தீர்த்த சூரபத்மனையே இரண்டாகப் பிளந்து தன் அடையாளமாக மாற்றிக்கொண்ட குமரனுக்கு கலியுகத்தில் கர்ம வினையின் பயனால் இறை துவேஷம் பேசும் இந்த அற்பங்கள் எல்லாம் எம்மாத்திரம் ? ஆடும் வரை ஆடுங்கள் அவன் ஆடத் தொடங்கும் போது உங்களின் ஆட்டம் முடிந்துவிடும் என்று அமைதியாக கடந்து போகிறோம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் எங்கள் குமரனின் கோவில் இருக்கும் . தமிழின் வாசம் இருக்கும் இடமெல்லாம் எங்கள் அழகு குமரனின் சுவாசமும் இருக்கும். சனாதன பக்தியின் வேர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் வேலவனின் வேல்விழி கருணையும் நிறைந்திருக்கும். ஆம் அவன் அருளாலே அவனை உணர்ந்து அவள் தான் பணியும் எங்களுக்கு வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயம் இல்லை . குமரன் இருக்க எமக்கு குறைகள் ஏதுமில்லை. அதுவே முருகனின் சக்திக்கும் அடியார்கள் பக்திக்கும் சாட்சியம்.


Share it if you like it