தமிழகத்தில் அரசு பள்ளிகள் – அலுவலகங்கள் அரசு சார்புள்ள இடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களும் சாதியம் சார்ந்த அடையாளங்களும் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையை முன்வைத்து அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பறையில் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிந்திருந்த மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளில் இருந்த வண்ணக் கயிறுகளை கத்தரிக்கோலால் வெட்டி எறிந்து விட்டதாக பெருமிதம் பேசுகிறார். பள்ளிகளில் சாதிய அடையாளம் கூடாது என்பது சரி என்றால் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தும் இந்த வண்ணக் கயிறுகளை நான் வெட்டி எறிந்ததும் சரிதானே என்று பொதுவெளியில் பதிவிட்டு இருக்கிறார்.
பள்ளிகளில் சாதி – மத அடையாளம் கூடாது என்று மாணவர்களின் கைகளில் இருந்த வண்ணக் கயிறுகளை வெட்டி எறிந்ததாக பெருமிதமாக தெரிவிக்கும் அந்தப் பெண் ஆசிரியை அவரின் நெற்றியில் இருந்த திலகம் கழுத்தில் அணிந்திருக்கும் திருமாங்கல்யம் கைகளில் இருக்கும் வளையல் – கால்களில் அணிந்திருக்கும் மெட்டி – கொலுசு உள்ளிட்டவை எந்த மதம் சார்ந்த அடையாளங்கள்? அல்லது எந்த சாதியம் சார்ந்த அடையாளங்கள் என்பதை குறிப்பிடவில்லை. அவற்றையெல்லாம் அவர் ஏற்கனவே அகற்றி விட்டாரா ? அல்லது இனிமேல் தான் அகற்றப் போகிறாரா ?என்பது பற்றியும் அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
அப்படியானால் அரசு பள்ளிகளில் சாதி – மத அடையாளங்கள் கூடாது என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று ஏதேனும் அரசு சார்பில் சுற்றறிக்கை இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் வேண்டும். இந்த சாதி மத அடையாளம் அகற்றம் என்பது இந்து சாதிய அடையாளம் குறிப்பிட்ட மத அடையாளம் கொண்ட மாணவர்களுக்கு மட்டும் தானா ? அல்லது எல்லோருக்கும் பொருந்துமா? என்பது பற்றியும் அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதற்கும் மாநில அரசு உரிய விளக்கம் தர வேண்டும்.
மாணவர்களின் கைகளில் இருந்த வண்ணக் கயிறுகள் சாதிய அடையாளம் என்று அவர்களை வரிசையில் நிற்க வைத்து வலுக்கட்டாயமாக அகற்றியதை பெருமிதமாக குறிப்பிடும் அந்த பெண் ஆசிரியை அதே வகுப்பறையில் இதர மத அடையாளங்களோடு இருந்த மாணவர்கள் பற்றியோ அவர்களின் அடையாளம் அகற்றம் பற்றியோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அந்தப் பள்ளியில் இதர வகுப்பறைகள் தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களின் அறிவுரை வழிகாட்டல் பற்றியோ இந்த விஷயத்தில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
பொதுவாக மாநில அரசின் சுற்றறிக்கை படி நான் எனது வகுப்பறையில் இருந்த மாணவர்களின் சாதிய அடையாள கயிறுகளை அப்புறப்படுத்தினேன் என்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை சுய வாக்குமூலமாக பொது வெளியில் ஆவணப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் இந்த மாணவர்கள் ஆண்டுதோறும் அவரவர் வழக்கப்படி ஆலய வழிபாடு மண்டல பூஜை என்று வழிபாடு காலங்களில் அணியும் பக்தி அடையாளங்களும் இந்த சாதிய மத அடையாளங்களுக்குள் வருமா? அவற்றிற்கு அனுமதி உண்டா ? இல்லையா ? என்பது பற்றியும் அவர் எந்த குறிப்பும் கொடுக்கவில்லை. அது பற்றிய அரசின் வழிகாட்டல் பற்றியும் அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
பொதுவான இந்த விளக்கம் ஒரு குறிப்பிட்ட சாரார் தங்களின் அடையாளங்களோடு வலம் வருவதும் அது அரசின் கண்களை உறுத்தி அரசு இயந்திரத்தின் துணையோடு அவற்றை அப்புறப்படுத்தவும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருப்பதை அதை அரசின் நாடி உணர்ந்து ஒரு பெண் ஆசிரியர் வலுக்கட்டாயமாக நிறைவேற்றி இருப்பதும் தமிழக அரசின் மதசார்பற்ற நிலைப்பாடும் சாதிய பேதம் அகற்றும் நிலைப்பாடும் ஒரு குறிப்பிட்ட சார்புள்ள மக்களை வஞ்சிப்பதும் அவர்களின் அடையாளங்களை அகற்றுவதும் என்று பாரபட்சம் காட்டுவதை வெளிப்படையாக நிரூபிக்கிறது.
பள்ளிகளில் அரசு அலுவலக வளாகங்களில் சாதி – மத அடையாளங்கள் கூடாது என்ற அரசின் நிலைப்பாடு சரி என்றால் அது அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக பாரபட்சம் இன்றி கடைப்பிடிக்கப்படுவதே உண்மையான மதசார்பின்மையாக இருக்க முடியும்.
மாநில அரசு இந்த சுற்றறிக்கையை கோடிட்டு காட்டி அந்த அடிப்படையில் தான் வண்ணக் கயிறுகளை அகற்றினேன். நான் செய்தது சரிதானே? என்று பெருமிதம் பூரிக்கும் அந்தப் பெண் ஆசிரியையின் செய்கை அந்த குறிப்பிட்ட மாணவர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய மன உளைச்சலை அவர்கள் குடும்பத்தார் மத்தியில் எவ்வளவு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும்? என்பதை அவர் ஏன் யோசிக்கவில்லை. அதை சுமூகமாக கையாள அவர் என்ன மாதிரியான முன் முயற்சிகள் எடுத்தார் ? என்பதை பற்றியும் அவர் எந்த குறிப்புகளும் கொடுக்கவில்லை. அதன் அடிப்படையில் அவர் அரசின் உத்தரவின் பெயரில் தான்தோன்றித்தனமாக இதை செயல்படுத்தி இருப்பது ஒரு ஆசிரியைக்கு அழகா ? என்பதை அந்த ஆசிரியர் சமூகமும் தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளும் தாமாக முன்வந்து விளக்கம் தரட்டும்.
மாணவர்கள் மத்தியில் சாதிய வேறுபாடுகள் – மத ரீதியான பிளவுகள் – வன்மம் துவேசங்கள் இருக்கக் கூடாது . வர்க்க பேதங்கள் அதன் அடிப்படையிலான பாகுபாடுகளை வளர்க்கும் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பள்ளி மாணவர்கள் மத்தியில் சுய ஒழுக்கம் – பண்பாடு – சகோதரத்துவம் – சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டியதே கல்வி வளாகங்களில் முதல் கடமை என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் சாதிய அடையாளங்களை அகற்றுகிறேன். மத அடையாளங்களை அகற்றுகிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் தொடர்ந்து அவமதிப்பதும் அவர்களின் அடையாளங்களையும் நம்பிக்கைகளை மட்டும் தொடர்ந்து அவமதித்து வலுக்கட்டாயமாக அகற்றுவதும் அவர்களின் கண்முன்னே இதர சார்பானவர்களை அவர்களின் சுதந்திரப் போக்கில் இயங்க அனுமதிப்பதும் அரசாங்கத்தின் பார்வையில் ஒரு குறிப்பிட்ட சாரார் தொடர்ச்சியாக வன்மத்தோடு அவமதிக்கப்படுவதையே வெளிக்காட்டும். இந்த பாரப்பட்சம் முழு சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் மத்தியில் ஒரு அகம்பாவ போக்கையும் பாதிக்கப்படும் மாணவர்கள் மத்தியில் பெரும் மன வலியையும் ஏற்படுத்தும் . இந்த பாகுபாடுகளும் – பாரபட்சங்களும் தான் மாணவர்கள் மத்தியில் பெரும் வன்மத்தையும் துவேசத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை ஆசிரியர் சமூகமும் அரசும் உணர வேண்டும். இந்த பாகுபாடுகளும் துவேசங்களும் தான் சமீபத்தில் பெரும் வன்மமாக வெளிப்பட்டு உயிர் ஆபத்தை உருவாக்கும் தாக்குதல்களாக அரங்கேறி வருகிறது என்பதையும் பள்ளிக் கல்வித் துறையும் அரசும் உணர வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் அகற்றப்பட வேண்டியது சாதி மத துவேஷங்களும் பாகுபாடுகளும் அதன் அடிப்படையில் வரும் பிளவுகளும் இடைவெளிகளும் தானே தவிர அவர்களின் சாதிய மத அடையாளங்களை இல்லை என்பதை முதலில் மாநில அரசும் பள்ளிக் கல்வித் துறையும் உணர வேண்டும் . இதை அவர்கள் உணர்ந்து எந்த ஒரு விதியும் கட்டுப்பாடும் அனைத்து சாராருக்கும் பொதுவானது என்று பாரபட்சம் இன்றி செயல்பட்டாலே மாணவர்கள் மத்தியில் சாதி மத பேதங்களும் பிளவுகளும் தானாக மறையும் .உண்மையான சமத்துவம் பிறக்கும். அப்படி அல்லாமல் ஒரு குறிப்பிட்ட சாராரை மகிழ்விக்கவோ அல்லது தங்களின் அரசியல் ஆதாயம் வேண்டியும் இப்படி தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சார்புள்ளவர்களின் சாதி மத அடையாளங்கள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்பட்டாலும் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதும் மாநில அரசும் அரசு எந்திரமும் ஒரு குறிப்பிட்ட சார்பில் இயங்குவதும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு எதிராக இயங்குவதையுமே வெளிப்படுத்தும் . அது மாணவர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் மேலும் பிளவையும் பாகுபாட்டையும் அதிகரித்து சாதி மத அளவிலான பிளவுகளுக்கும் சிக்கல்களுக்குமே வழிகாட்டும் என்பதை மாநில அரசு உணர்ந்து உண்மையான மத சார்பற்ற அரசாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.