பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தங்களின் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் என்று யாரையும் நம்பி தனியாக விட்டுச் செல்வதில்லை. அப்படி விட்டுச் செல்ல நிர்பந்தம் வரும்போதும் அதை அவர்கள் முழு மனதோடு செய்வதில்லை. ஆனால் எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தைகளை முழுமனதோடு நம்பி ஒப்படைக்கும் ஒரு இடம் என்றால் அது கல்விக்கூடங்கள் மட்டுமே. அந்தக் கல்விக் கூடங்களில் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்க வேண்டிய ஆசிரியர் சமூகம் தங்களின் பொறுப்பையும் கடமையும் மறந்து சீரழிவில் இருப்பது அடுத்த தலைமுறைகளின் பாதுகாப்பை கண்ணியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் அரசுப் பணி அல்ல .அது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் அலுவலக பணியும் அல்ல .எதிர்கால சந்ததிகளை செதுக்கி எடுக்கும் சிற்ப கலைக்கூடம் என்ற உணர்வு மேலோங்கி இருந்தவரையில் ஆசிரியர் சமூகம் சிறப்பாக இருந்தது. அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த மாணவர் சமூகமும் சிறப்பாக இருந்தது. கல்வி திறமைகளில் வேறுபாடுகள் இருக்கலாம் .ஆனால் தனிமனித ஒழுக்கமும் சமூக அக்கறையும் கண்ணியமும் இருந்த தலைமுறைகள் இந்த தேசத்திற்கு கல்விக்கூடங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
ஆனால் அந்த ஆசிரியர் பணி வெறும் உச்சபட்ச சம்பளம் தரும் அரசு பணியாகவும் அதிகபட்ச விடுமுறைகள் அரசின் கூடுதல் சலுகைகள் தேர்தல் நேரத்தில் அரசாங்கத்திற்கு பெரும் பணியாற்றும் முக்கிய துறை என்பதால் அரசு இயந்திரத்தில் சிறப்பு கவனமும் கூடுதல் போஷிப்பு தரும் ஒரு துறை என்ற அளவில் ஆசிரியர் சமூகம் மாறத் தொடங்கிய போது தான் சமூகத்தில் சீரழிவுகள் பரவலாக தொடங்கியது.
கல்வித் தகுதி என்பதை கடந்து தனிமனித ஒழுக்கம் கண்ணியம் மாணவர்களை நேர்மறை எண்ணங்களில் வழிநடத்தும் மனோநிலை குழந்தைகளை பக்குவமாக கையாளும் நேர்மறை சிந்தனை கொண்ட உளவியல் என்று பல்வேறு சிறப்பு தகுதிகள் இருக்க வேண்டிய ஆசிரியர் பணிகளை சாதிய இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் லட்சங்களில் விற்கப்படும் பணியிடமாகவும் ஆட்சியாளர்கள் மாற்றத் தொடங்கியதுதான் ஆசிரியர் சமூகத்தின் சீரழிவிற்கு காரணம்.
அதன் வெளிப்பாடு தான் தாங்கள் வகிக்கும் ஆசிரியர் பணி என்பதன் கௌரவம் கண்ணியம் உணராமல் பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகளை வழிநடத்தும் சீரிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச பொறுப்பு கூட இல்லாமல் ஆசிரியர்கள் தனி மனித ஒழுக்கம் இன்றி கலாச்சார சீரழிவில் வாழும் மனநிலை பள்ளி வகுப்பறையிலேயே மது அருந்துதல் புகைப்பிடித்தல் மாணவர்களிடம் அத்துமீறுதல் என்ற கலாச்சார சீரழிவு. பள்ளி வளாகங்களிலேயே ஆசிரியர் இடையே நடக்கும் காதல் லீலைகள் – சண்டை சச்சரவுகள் – குழு அளவிலான அரசியல் – சாதி ரீதியான மோதல்கள் என்று தலைவிரித்தாடும் அவலங்கள் எல்லாம் அதை கண்முன்னே பார்த்து வளரும் மாணவர் சமூகத்தையும் பெருமளவில் சீரழிக்கிறது.
தங்களின் சொந்த வாழ்வில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களுக்கு கூட பெற்றோரிடம் சொல்ல பயந்து ஆசிரியர்களிடம் முறையிட்டு அதற்கு தீர்வும் கண்டு நிம்மதி கண்ட தலைமுறைகள் இன்றளவும் இங்கு உண்டு. ஆனால் அவர்களின் கண்முன்னே கல்விக்கூடங்களில் வகுப்பறைகளிலேயே பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் அரங்கேறுவதும் அது மாணவர்கள் கடந்து ஆசிரியர்கள் மூலமும் நடைபெறும் அவலமும் பெற்றோரையும் சமூகத்தையும் அதிர்ச்சியின் விளிம்பில் நிற்க வைக்கிறது.
ஆபாச உடைகள் – போதைப் பழக்கம் என்று பள்ளிக் கல்வி வளாகங்களிலேயே வரம்பு மீறும் சில சொற்ப ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் தலைக்குனிய நேரிடுகிறது. ஆசிரியர் சமூகத்தில் ஆண் பெண் பேதமின்றி கண்ணியமான ஆடைகள் கட்டுப்பாடான பழக்க வழக்கங்கள் மது போதை புகை உள்ளிட்டவைகளுக்கு கல்வி நிறுவனங்கள் வளாகங்களுக்குள் இடமில்லை என்ற நிலையை மாநில பள்ளி கல்வித்துறை நிலை நிறுத்தவேண்டும் . சில பொறுப்பற்ற ஆசிரியர்கள் செய்கையை கண்டு கொள்ளாததன் விளைவு எதிர்காலத்தில் ஆசிரியர் சமூகத்தை தலை குனிய வைப்பதோடு மாணவர் சமூகத்தையும் சீரழித்து விடும் என்பதை மாநில பள்ளி கல்வித்துறை உணர வேண்டும்.
சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பும் குழந்தைகளையும் வளர்த்தெடுக்கும் ஒரு பொதுவான இடம் கல்விக்கூடம் என்ற பொறுப்புணர்வை ஆசிரியர் சமூகமும் மாநில பள்ளி துறையும் உணர வேண்டும். தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து அடுத்த தலைமுறைகளை வளர்த்தெடுக்கும் பெரும் கடமை நம்முன் இருப்பதை உணர்ந்து அதற்குரிய வகையில் கண்ணியமாக நடத்தையை ஆசிரியர் பெருமக்கள் முன்னெடுக்க வேண்டும். தங்களின் கடமையும் பொறுப்பும் உணர்ந்து கண்ணியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறும் ஆசிரியர் பெருமக்களை பாரபட்சம் இன்றி பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முன் வர வேண்டும். ஆண் பெண் வயது வித்தியாசம் இன்றி தனிமனித ஒழுக்கமும் சமூகப் பொறுப்புணர்வும் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை மாநில பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சமூகத்திற்கு மாணவர்களுக்கு ஒரு சேர உணர்த்த வேண்டும் .அதற்கு முதலில் ஆசிரியர் பணி என்ற பொறுப்பும் கண்ணியமும் உணர்ந்து கடமையாற்ற தயார் இல்லாத பணியாளர்களை பள்ளிக் கல்வித் தரையை விட்டு நிரந்தரமாக விலக்க வேண்டும்.
ஆசிரியர் பணிக்கு வெறும் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலும் தரவரிசை பட்டியலும் மட்டும் போதாது .அதை கடந்து இந்த தேசத்தின் எதிர்கால தலைமுறையை வளர்க்கும் கடமையை சிறப்பாக நிறைவேற்றும் அத்தனை தகுதிகளும் நிரம்ப பெற்ற குரு ஸ்தானம் என்ற உயரிய பொறுப்பிற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கும் ஒரு பான குடிமக்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு அமர்த்த முடியும் என்ற கட்டாயம் வந்தால் மட்டுமே ஆசிரியர் சமூகம் மேம்படும். அதன் மூலம் மாணவர் சமூகம் மேம்படும். எதிர்காலத்தில் இந்த தேசம் பலப்படும்.