தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாஜக அதிமுக இடையே மாநில தேசிய அளவில் கூட்டணி இருந்தது. இந்த கூட்டணியில் அதிமுகவின் சுமூகமான மாநில அரசு நிர்வாகம் தமிழகத்தின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழக பாஜகவும் தேசிய பாஜகவும் முழுமையாக துணை நின்றது. மத்தியில் ஆளும் மோடி அரசு பல வருடங்களாக மிக மோசமான நிதி நிலை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டுக் கொண்டு வரவும் தமிழகத்தின் நலன் வளர்ச்சியை உறுதி செய்யவும் பல்வேறு வகைகளில் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்தது. கட்சி அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் கடந்து அதிமுக என்ற கட்சி பலமாக இயங்கவும் அதன் ஆட்சி தமிழகத்தில் முழுமையாக தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யவும் தமிழக பாஜகவும் தேசிய பாஜகவும் நல்லெண்ண அடிப்படையில் முழு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் கொடுத்து வந்தது. ஆனால் ஜெயலலிதாவின் இறுதி காலத்திலேயே அவரது சுகவீனம் மன உளைச்சல் காரணமாக பல்வேறு விஷயங்களில் கடுமையும் கண்காணிப்பும் தர முடியாத அவரின் பலவீனத்தை சாதகமாக்கிக் கொண்டு திமுகவின் கைகள் பல வழியிலும் அதிமுகவில் ஓங்கி வந்தது. அதிமுகவில் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி சசிகலா அணி தினகரன் அணி என்று இருந்தது போல முழுமையான திமுக ஆதரவு அணி என்று ஒன்றும் உருவானது. சப்தமின்றி அதிமுகவை கபளீகரம் செய்வதற்கு திமுக தீட்டிய எல்லா வியூகங்களும் இவர்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது.
இவர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் அதிமுக பாஜக இடையே பிளவுகளை ஏற்படுத்தி வந்தது. அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் அது அதிமுகவின் வெற்றியாக நிலை நிறுத்தப்பட்டது. தோல்விகள் எல்லாம் பாஜகவின் மேல் பழி சுமத்தப்பட்டது. இதனால் பாஜகவின் கடைகோடி தொண்டர்களும் களப்பணியாளர்களும் மன ரீதியாக பெரும் பின்னடைவில் இருந்தார்கள். இதை முழுமையாக உணர்ந்து கொண்ட தற்போதைய தமிழக பாஜக தலைவர் தொண்டர்களின் என்ன ஓட்டம் தேசிய தலைமையின் வியூகங்கள் இதையெல்லாம் வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழக பாஜகவை அசுர வளர்ச்சியில் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் தமிழக அரசியலில் பாஜகவை தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக கட்டமைக்க வேண்டும் எனில் எந்தவிதமான பின்னடைவுகளும் இல்லாமல் தமிழக பாஜகவை முன்னோக்கி நேர்மறை பாதையில் செலுத்த வேண்டும். இளைஞர்கள் படித்தவர்கள் தேசியவாதிகளை ஒருங்கிணைத்து கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக பாஜகவை அனைவருக்கும்மான கட்சியாக நிலை நிறுத்துவதன் மூலம் மட்டுமே பாஜகவை சிறுபான்மையினர்களுக்கு எதிரான கட்சி என்ற திமுகவின் பிம்பத்தை உடைக்க முடியும் என்ற முனைப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழக பாஜகவை நகர்த்தி போனார்.
அதன் அடிப்படையில் இலவசம் வாக்களிக்க பணம் பரிசுப் பொருட்கள் என்று தேர்தலில் மக்களிடம் இருந்து பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வைத்திருந்த திராவிட அரசியலை முழுமையாக உடைத்தெறிந்து நேர்மையான அரசியல் நேர்மையான வாக்காளர்கள் அதன் மூலம் அப்பழுக்கில்லாத ஆட்சியாளர்கள் லஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத அரசு எந்திரம் என்ற உன்னதமான இலக்கை நோக்கி தமிழக அரசியலை வழி நடத்துகிறார். இதற்கு தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகள் இந்து அமைப்புகள் கடந்து சாமானிய மக்கள் தேசிய வாதிகள் படித்த நேர்மையான மக்கள் என்று அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து ஆதரவளிக்க தொடங்கினார்கள். இதன் காரணமாக திரும்பிய பக்கமெல்லாம் தேசிய அளவில் மோடிக்கு ஆதரவாகவும் மாநில அளவில் தமிழக பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாகவும் பெரும் அலை எழத் தொடங்கியது.
இதுவரையில் அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தது. அந்த வகையில் இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இங்கு எந்த ஒரு மூன்றாவது கட்சியோ அல்லது காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த ஒரு தேசிய கட்சியும் தலைதூக்காமல் சாதுர்யமாக அரசியல் களத்தை நகர்த்தி வந்தது . ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டி தமிழகத்தை மீண்டும் தேசிய பாதையில் திருப்புவது. குறிப்பாக தமிழகத்தின் ஆன்மீக மாண்புகள் தேசிய இறையாண்மையை எல்லாம் மீண்டும் மீட்டெடுப்பது என்ற தமிழக பாஜகவின் இலக்குகள் இவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதன் விளைவாக தமிழக பாஜக தலைவரின் செயல்பாடுகள் அவரின் ஒவ்வொரு அசைவுகள் விமர்சனமானது. அவற்றை எதிர்மறையாக கட்டமைத்து அவரின் செயல்பாடுகளை முடக்கி அதன் மூலம் தமிழக பாஜகவின் வளர்ச்சியை நிரந்தரமாக முடக்குவதற்கு பல்வேறு தரப்பிலும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது இதில் அதிமுக திமுக இரு தரப்பும் சம பங்காளிகள். இவர்களுக்கு பின்புலமாக பல்வேறு அமைப்புகள் ஊடக வாதிகள் போராளிகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் திரும்பிய பக்கம் எல்லாம் கிளைகள் ஏராளமாக இருக்கிறது.
மறுபக்கம் இவர்களின் உண்மை முகம் உணர்ந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் துணிச்சலாக கழகங்கள் இல்லாத அரசியல். குறிப்பாக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து களம் காண வேண்டும் . வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு சித்தாந்த ரீதியான ஒரு பெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் . ஊழல் கறைப்படைந்த கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டே ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது நகைக்குரியது என்று தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் பயணம் செய்யலானார். இதை காரணமாக முன்வைத்து தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் பட்சத்தில் தமிழக பாஜகவோடு கூட்டணி சாத்தியமில்லை என்று அதிமுகவின் பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி கண்காணித்து கூட்டணி தர்மம் காத்து சுமூகமான அரசியலுக்கு வழிகாட்ட வேண்டிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இவற்றையெல்லாம் உரம் போட்டு வளர்த்து வந்தார்.
எந்த கொங்கு மண்டலத்தை தன்னுடைய கோட்டையாக எடப்பாடி பழனிச்சாமி கருதினாரோ ? அதே கொங்கு மண்டலம் முழுமையான தேசிய மனப்பான்மை காரணமாக வெளிப்படையான ஆதரவை தமிழக பாஜக தலைவருக்கும் தேசிய பாஜகவிற்கும் வழங்க தொடங்கியது எடப்பாடிக்கு அதிர்ச்சியானது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக கட்சியின் தலைவராகவும் அரசியல் களத்தில் அவர் ஒரு ஆளுமையாக நீடிக்கும் வரையில் தனது அரசியல் வளர்ச்சியும் செல்வாக்கும் சாத்தியமில்லை. அதிமுகவை மீண்டும் ஆளும் கட்சி என்ற அந்தஸ்துக்கு கொண்டு வர வேண்டும் எனில் தமிழக அரசியலில் இருந்து அண்ணாமலை என்பவர் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக வும் அவர்கள் ஆதரவாளர்களும் வெளிப்படையாக செயல்பட தொடங்கினார்கள். இதற்கு உரிய பதிலடி தமிழக பாஜக தரப்பில் இருந்தும் அவ்வப்போது தரப்பட்டு வந்தது.
இறுதியில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி சாத்தியமில்லை என்ற அதிமுக தலைவர்களின் ஒருமித்த கருத்தோடு தேசிய பாஜகவை சந்தித்து பேசினார்கள். ஆனால் தேசிய பாஜக இதை நிராகரித்தது. தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். கூட்டணியில் இருப்பதும் விலகுவதும் உங்களின் விருப்பம் என்று தேசிய பாஜக கறார் ர் காட்டியது. இதையே காரணமாக வைத்து அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி முடிவுக்கு வந்ததாக அறிவித்தது. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது கட்சி தலைவர்களின் முடிவு இரண்டாம் கட்ட தலைவர்களின் முடிவல்ல . அது அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனின் முடிவு. ஏகோபித்த தொண்டர்களின் முடிவைத்தான் கட்சி தலைமையாக நாங்கள் பிரதிபலித்தோம் என்று வெளிப்படையாக அதிமுகவின் தலைவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதை ஆங்காங்கே தீர்மானம் ஆகவும் அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் அதிமுகவின் தலைமையின் முடிவும் தொண்டர்களின் மன ஓட்டமும் ஒரு சேர இருப்பதாக அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.
மறுபக்கம் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததை தமிழகத்தில் உள்ள கடைக்கோடி பாஜக தொண்டர்கள் தமிழக பாஜகவின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். இதற்காகவே பல ஆண்டுகள் காத்திருந்த தங்களின் கனவு நிறைவேறியதை எண்ணி மகிழ்கிறார்கள். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தங்களின் முயற்சியும் உழைப்பும் இனி வீணாகாது . அவை தங்களின் கட்சியின் வளர்ச்சிக்கும் தங்களின் தலைவரின் வியூகங்களின் வெற்றிக்கும் முழுமையாக பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு அவர்களிடம் வெளிப்படுகிறது . அந்த வகையில் தமிழக பாஜக தலைவரின் எண்ண ஓட்டமும் பாஜகவின் களப்பணியாளர்கள் கடை கோடி தொண்டர்களின் எண்ண ஓட்டமும் தேசிய பாஜகவின் யூகமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது . ஆனால் தமிழக பாஜகவின் மேல் மட்டத்திலும் தமிழக பாஜகவின் ஆதரவு அமைப்புகள் அல்லது ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலரும் அதிமுக பாஜக கூட்டணி முறிவு தமிழக பாஜக தலைவரின் எண்ணம் முடிவு செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக வன்மமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்றும் இது முழுக்க முழுக்க திமுகவிற்கே சாதகமாக மாறிவிடும் என்பது அவர்கள் வாதம். மேலும் திமுக என்னும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு அதிமுக பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் பாஜகவிற்கு அறிவுறுத்துகிறார்கள். இதற்காக கூட்டணி தர்மம் என்ற வகையில் சில விட்டுக் கொடுப்புகள் சில அனுசரிப்புகள் தேவை என்ற வகையில் தமிழக பாஜகவின் தலைவருக்கு தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். ஆனால் இந்த அறிவுரைகள் விமர்சனங்கள் எதையும் இதுவரையில் அவர்கள் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிய அதிமுகவை நோக்கி முன் வைக்கவில்லை.
திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் எங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை சகோதர சண்டை பங்காளி சண்டை அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் மூன்றாவதாக பாஜக உள்ளே வர அனுமதி இல்லை. தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் சிறுபான்மை வாக்குகளை இழந்து விட்டோம். சிறுபான்மை மக்களின் நம்பிக்கைகளை இழந்து விட்டோம் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக பாஜகவையும் அதன் தலைமையையும் தேசிய பாஜகவையும் அவமதிக்கும் வகையில் விஷமமான கருத்துக்களை பேசிய அதிமுகவின் தலைவர்களின் பேச்சுக்கள் அவர்களின் செயல்பாடுகள் நடவடிக்கைகளை யாரும் இவர்கள் இதுவரையில் கண்டிக்கவும் எதிர்க்கவோ இல்லை. ஆனால் தன்மானம் சுய கவுரவம் கட்சியின் நலன் கட்சி தொண்டர்களின் எண்ண ஓட்டம் உணர்ந்து திமுக அதிமுக இல்லாமல் பாஜக தனித்து களம் காலும் என்ற தமிழக பாஜக தலைவரை நிலைப்பாட்டை மட்டும் இவர்கள் தொடர்ந்து குறை சொல்வார்களேயானால் இவர்கள் யார்? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன. ? .
தேசிய அளவில் மோடிக்கு ஆதரவு என்று தங்களை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். அதே மோடியின் வியூகங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக மோடியின் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரியவராக களம் காணும் தமிழக பாஜக தலைவரை துவேஷிப்பது ஏன்? அவரின் நேர்மையான கட்சியின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்காக எதற்காக எதிர்க்க வேண்டும். ? இன்று கூட்டணி தர்மம் பற்றி தமிழக பாஜக தலைவருக்கும் பாஜகவிற்கும் பாடம் நடத்தும் யாரும் சட்டமன்றத் தேர்தலின் தோல்விக்கு பாஜக தலைமையிலான கூட்டணியை காரணம் என்று வெளிப்படையாக பேசிய அதிமுக தலைவர்களை பார்த்து எந்த கேள்வியும் விமர்சனமும் வைக்காமல் அமைதியாக கடந்து போனது ஏன்? அப்படி எனில் திமுகவின் வெற்றியின் இவர்களுக்கும் உள்ளூற மகிழ்ச்சி இருந்ததா ?. பாஜக அதிமுக தோல்வியிலும் அந்த தோல்விக்கு பாஜக பலிகடா ஆக்கப்படுவதிலும் இவர்களுக்கு முழுமையாக உடன்பாடு இருந்ததா?
அதிமுக பாஜக தோல்விக்கு பாஜகவை பலிகடா ஆக்கிய அதிமுக நிர்வாகிகளின் விமர்சனங்களை இவர்கள் கண்டிக்காமல் அமைதி காத்ததன் காரணம் என்ன? அவர்களின் கருத்துக்களில் இவர்கள் உடன்படவில்லை எனில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோல் பேசுவது கண்ணாடி வீட்டில் இருந்து கல்லறிவது போல என்ற தமிழக பாஜக தலைவருக்கு இன்று முன்வைக்கும் அறிவுரையை விமர்சனத்தை இவர்கள் ஏன் அதிமுக தலைவர்களுக்கு முன் வைக்கவில்லை. ? அன்று அமைதியாக மௌனம் காத்தவர்கள் எல்லா இடங்களிலும் தமிழக பாஜக தலைவரும் தமிழக பாஜகவும் அவமதிக்கப்பட்ட போது அமைதியாக வேடிக்கை பார்த்தவர்கள். இன்று தொடர்ச்சியான அவமதிப்புகளை முன்வைத்து தமிழக பாஜக தனியாக களம் காண தயாராகும்போது அதை ஏன் தடுக்க நினைக்கிறார்கள்? எப்பாடு பட்டாவது பாஜகவை அதிமுகவோடு கூட்டணியில் நிறுத்த வேண்டும் என்று பிரயத்தனம் செய்வது ஏன்? . உண்மையில் இவர்களின் நோக்கம் திமுக என்ற பொது எதிரி தான் என்றால் அந்த பொது எதிரியான திமுகவை தங்களின் சகோதரர்கள் பங்காளிகள் என்று அதிமுகவினர் பேசும்போது இவர்கள் மௌனம் காத்த காரணம் என்ன. ?
தேசிய அளவில் பாஜக வேண்டும் . மோடி அரசு வேண்டும் என்று கேட்பவர்கள். அதே தேசிய பாஜகவின் முகமாக இருக்கும் தமிழக பாஜகவை மோடியின் வியூகங்களை செயல்படுத்தும் தமிழக பாஜகவின் தலைவரை மட்டும் எதற்காக முடக்க நினைக்க வேண்டும் ?. பாஜக அதிமுக கூட்டணி முடிவுக்கு வந்தால் பாஜகவிற்கு களப்பணி செய்ய ஆளில்லை என்று பேசுபவர்கள் பாஜக அதிமுக கூட்டணி முடிவுக்கு வந்தால் அதன் மூலம் அதிமுகவுக்கு வரப் போகும் இழப்புக்கள் பற்றியோ அல்லது அவர்களுக்கு வரக்கூடிய உள் கட்சி நெருக்கடிகள் பற்றியோ இதுவரை பேசவில்லை. ஏன் ? அதிமுக சொல்வது போல பாஜக பெரிய பலமான கட்சியோ வாக்கு வங்கி உள்ள கட்சியோ இல்லை . அதன் வெற்றியும் வளர்ச்சியும் அதிமுகவை சார்ந்து தான் இருக்கிறது என்பதை இவர்கள் வழிமொழிகிறார்களா? அப்படி பட்ட வளமான வாக்கு வங்கியோ பூத் கமிட்டி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்போ இல்லாத தமிழக பாஜக தனித்து களம் காண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அதிமுக விற்கு இது முழுமையான இலாபம் தானே? இதை அதிமுக தொண்டர்கள் மனவோட்டம் கட்சியின் ஏகோபித்த முடிவு என்று பேசுபவர்கள். பாஜகவின் தனித்த போட்டி என்ற முடிவுக்கு ஏன் பதட்டப்பட வேண்டும்? .
பாஜக கட்சி பலம் பற்றி அதிமுக நிர்வாகிகளின் மன ஓட்டம் தான் இங்குள்ள தேசியவாதிகள் ஊடகவாதிகளின் கருத்தாகவும் இருக்கும் எனில் அப்படிப்பட்ட ஒரு பலவீனமான கட்சி வளம் இல்லாத வாக்கு வங்கி இல்லாத ஒரு கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகிப் போவது அதிமுகவிற்கு எல்லா வகையிலும் நன்மையே தரும். அதனால் அதிமுக பாஜக கூட்டணி தேவையற்றது . அதிமுக தனியே களம் கண்டு தனது கட்சியை பலப்படுத்தலாம் எதிர்காலத்தில் வெற்றியை நிலை நிறுத்தலாம் என்று இவர்களின் அதிமுகவை வெளிப்படையாக ஆதரித்து அதன் மூலம் திமுகவை வீழ்த்தலாமே? அதே நேரத்தில் பாஜகவின் குறைவான பலம் வாக்கு வாங்கி அரசியல் இல்லாத சூழல் இவற்றையெல்லாம் இவர்கள் வெளிப்படையாக பேசலாம். அது ஜனநாயகம் கருத்து சுதந்திரம் அடிப்படையிலான கருத்து. அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் ஒரு புறம் அதிமுகவை பலமான கட்சி பாஜகவை பலவீனமான கட்சி என்று தொடர்ச்சியாக பேசுபவரை மௌனமாக கடந்து போவதும் மறுபுறம் அதே பலவீனமான பாஜக எங்களுக்கு எந்த கூட்டணியும் வேண்டாம் லாபமோ நஷ்டமோ நாங்கள் தனியே களம் காண தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் போது பதறுவது ஏன்? அந்த பலவீனமான பாஜகவையும் வாக்கு வங்கி அரசியல் இல்லாத பெரும் பின்னடைவுகளை எல்லாம் வைத்திருக்கும் பாஜகவையும் எதற்காக இனியும் அதிமுக தூக்கி சுமக்க வேண்டும்? அதை ஏன் இவர்கள் ஆதரிக்க வேண்டும்?
வெளிப்படையாக அதிமுகவை பார்த்து நீங்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானது. பாஜக என்னும் தேவையற்ற பளுவை இனியும் தமிழக அதிமுக சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை தான் எடுத்திருக்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் இனி சுதந்திரமாக கட்சியில் அரசியலில் களம் காணலாம். உங்களின் கட்சியை பலப்படுத்த தேவையான முயற்சிகளை முன்னெடுங்கள் என்று முழுமையான ஆதரவும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கலாம் . தவறில்லை. இல்லை இவர்கள் உண்மையில் தமிழக பாஜகவின் ஆதரவாளர்கள் தான். தமிழகத்தில் பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி வளர வேண்டும் என்று நினைப்பார்கள் தான் எனில் இத்தனை காலமும் அதிமுகவும் திமுகவும் தமிழகத்தில் பாஜகவின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தியதற்கு உரிய பதிலடியாக திமுக எதிர்ப்பு என்ற பாஜக தலைவரை நிலைப்பாட்டை நேரடியாக ஆதரிக்க வேண்டும். றுபுறம் தொடர்ச்சியாக அதிமுகவின் தலைவர்கள் தமிழக பாஜக மற்றும் பாஜக தலைவரின் முன்வைக்கும் மலிவான அரசியல் விமர்சனங்களை எதிர்க்க வேண்டும். இதையெல்லாம் முன்வைத்து தமிழக பாஜக எடுக்கும் தனியாக களம் காணும் அரசியல் நிலைப்பாட்டை முழுமனதாக வரவேற்க வேண்டும். அந்த நிலைப்பாட்டில் இருந்து இந்த அதிமுக பாஜக கூட்டணி முடிவு வெற்றி திருவிழாவாக கொண்டாடும் மகிழும் தொண்டர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து இதே உத்வேகத்துடன் முழு களப்பணியாற்றி எதிர்காலத்தில் பாஜகவின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும் என்ற அறிவுரைகளை ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
தமிழகம் தேசிய பாதைக்கு திரும்ப வேண்டும். தேசிய பாஜகவின் முழுமையான நலத்திட்டங்கள் வளர்ச்சிப் பணிகள் தமிழகத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மோடியின் தளபதியாக தமிழகத்தில் இருந்து கட்சியை வளர்க்கவும் தமிழக அரசியலில் தூய்மைப்படுத்தவும் தமிழக பாஜக தலைவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இவர்கள் வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும். அவருக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல்களை வழங்கலாம். நண்பர்களாக நல்லெண்ணவாதிகளாக தமிழக பாஜக தொண்டர்களை ஒருங்கிணைத்து கோஷிப் பூச்சல் உட்கட்சி பிரிவினை ஏதுமின்றி வளர்ச்சி பாதையில் தமிழக பாஜகவை நடைபெறுவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை ஒருங்கிணைப்புகளை இவர்கள் வழங்கலாம். அதுதான் இவர்களின் உண்மையான தேசிய நிலைப்பாட்டிற்கும் வலதுசாரி ஆதரவு சிந்தனை நிலைபாட்டிற்கும் கௌரவமாக இருக்கும்.
ஆனால் இது எதையுமே செய்யாமல் தேசியவாதிகள் என்ற போர்வையில் மோடி ஆதரவாளர்களாக தேசிய பாஜகவின் ஆதரவாளர்களாக அப்பழுக்கில்லாத தேசியவாதிகளாக தங்களை நிலை நிறுத்திக் கொள்பவர்கள். எல்லோரும் சொல்லி வைத்தார் போல அதே தேசிய பாஜகவின் ஒரு முகமாக தமிழகத்தில் வளம் வரும் தமிழக பாஜக தலைவரை பின்னோக்கி இழுப்பது எப்படிப்பட்ட தேசியவாதம்.? மோடியின் தளபதியாக தமிழகத்தில் இருந்து அவரின் வியூகங்களை எல்லாம் வெற்றிகரமாக முன்னெடுப்பவரை எந்நேரமும் துவேஷிப்பதும் அவரின் முயற்சிகள் யூகங்களை எல்லாம் எப்படி தகர்ப்பது? என்று வன்மத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதும் எப்படிப்பட்ட தேச சிந்தனை ? எப்படிப்பட்ட தேசியவாத அரசியல்? .
தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் தமிழக பாஜகவின் தலைவருக்கும் சரி தமிழக பாஜகவிற்கும் சரி இழப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அடைவதற்கு அகிலமே இருக்கிறது. தமிழக பாஜக தலைவருக்கு தமிழகத்தில் இருக்கும் கடை கோடி தொண்டர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் தேசியவாதிகளின் முழுமையான ஆதரவு ஒத்துழைப்பு இருக்கிறது .மறுப்பக்கம் தேசிய பாஜக தலைமையின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் அழகாக பயன்படுத்தி தமிழக பாஜகவின் வெற்றியையும் வெற்றி வளர்ச்சியையும் நிலை நிறுத்துவதற்கு தேவையான அத்தனை பண்புகளும் தமிழக பாஜக தலைவர் இடத்தில் நிறைந்து இருக்கிறது. அந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் தேசிய பாஜகவும் தமிழகத்தில் இருக்கும் கடைக்கோடி தொண்டனும் முழுமையான நம்பிக்கையில் தமிழக பாஜக தலைவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தமிழக பாஜகவின் தலைவர் தமிழக பாஜக அதன் கடை கோடி தொண்டன் முழுமையான உழைப்பு அர்ப்பணிப்பை வழங்க வேண்டும் .அதன் பலனை ஏதோ ஒரு திராவிட கட்சி அறுவடை செய்து கொள்ளும். ஆனால் அவர்களின் தோல்விகள் பின்னடைவுகள் அனைத்திற்கும் தமிழக பாஜகவும் அதன் தலைவர்களும் திட்டமிட்டு பலிக்கடா ஆக்கப்படுவார்கள். இதை பொறுமையாக சகித்துக் கொண்டு அமைதி காப்பது தான் கூட்டணி தர்மம் என்றால் அப்படிப்பட்ட கூட்டணி தர்மம் தமிழக பாஜகவிற்கும் அதன் தலைவருக்கும் தேவையில்லை என்பதே இங்குள்ள ஒவ்வொரு தேசாபிமானியின் வேண்டுகோள். அதை உள்வாங்கிக் கொண்டுதான் தமிழக பாஜக தலைமையும் தேசிய பாஜக தலைமையும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து களம் காண்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உங்களுக்கு வலியும் வேதனையும் இருக்கும் எனில் நீங்கள் நிச்சயம் பாஜகவின் அபிமானிகளாக இருக்க முடியாது. தமிழகத்தில் பாஜக கட்சி வேரூன்றி வளர வேண்டும் .அதன் மூலம் தமிழகத்தில் ஆன்மீகமும் தேசியவாதமும் செழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொள்வதும் நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவின் அடக்குமுறைக்கு சற்றும் குறையாத அடக்குமுறைகளை இங்குள்ள தமிழகத்தின் இந்து அமைப்புகளும் நிர்வாகிகளும் எதிர் கொண்டார்கள். தமிழகத்தின் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கூட கைதாகி சிறைப் போனார்கள். ஆனால் அப்போதெல்லாம் கூட்டணி தர்மம் என்றால் என்ன? குறைந்த பட்சம் ஜனநாயகம் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது என்றால் என்ன? என்பது பற்றி அதிமுகவிற்கு இங்கு உள்ள யாரும் பாடம் நடத்தவில்லை. குறைந்தபட்ச நினைவூட்டல் கூட செய்யவில்லை. ஆனால் கடந்த கால கசப்புணர்வுகளை எல்லாம் மனதில் வைத்து இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறான முடிவுகளை நாம் எடுக்கக் கூடாது. எந்த நிலையிலும் தன் கட்சித் தொண்டர்களை மனமுடைய விடக்கூடாது. அவர்களின் நம்பிக்கை உழைப்பு வீணாகிப் போக கூடாது. அவற்றையெல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு களம் காணும் தமிழக பாஜக தலைவரை வசைப்பாடாதீர்கள்.
திமுக ஆதரவு நிலைப்பாடு .அதிமுக ஆதரவு நிலைப்பாடு. பாஜக காங்கிரஸ் என்று ஏதோ ஒரு கட்சியின் நிலைப்பாடு என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம் . சந்தர்ப்பம் சூழ்நிலை பொருத்து இவர்களை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவ்வப்போது முடிவுகள் மாறுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் யாருக்கும் எந்தவிதமான திணிப்பும் இருக்க வேண்டாம் .ஆனால் தமிழக பாஜகவை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே தமிழக பாஜகவின் கடைக்கோடி தொண்டர்களின் மன ஓட்டத்தை புண்படுத்தாதீர்கள். தமிழக பாஜகவின் வளர்ச்சிக்காக தான் அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் தமிழக பாஜகவின் தன்மானத்தை சுய கௌரவத்தை குழி தோண்டி புதைக்க நினைக்காதீர்கள். இத்தனை காலமும் தங்களின் உழைப்பும் களப்பணியும் விழலுக்கு இறைத்த நீராக போனதில் விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஒவ்வொரு பாஜக தொண்டன். இந்து அமைப்புகள் சார்ந்தவன். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியவாதியின் மனவோட்டத்தை உணர்ந்து திராவிட கட்சிகள் இல்லாத தனித்தே களம் என்ற தமிழக பாஜக தலைவரின் முடிவை சிதைக்க நினைக்காதீர்கள்.
இங்குள்ள கடைக்கோடி தொண்டனும் தேசிய பாஜக தலைமையும் தமிழக பாஜகவும் தெளிவாக புரிந்துணர்வோடு நடை போடுகிறது. அவர்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இங்கு வெறும் தேர்தல் வெற்றியும் அல்லது சில சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றதோ இலக்கு அல்ல . அவர்கள் தமிழகத்தை முழுமையான தேசிய பாதையில் திருப்ப வேண்டும் .தமிழகத்தில் பாஜகவை அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி என்ற முழுமையான புரிதலோடு கடை கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் தான் களம் காண்கிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி தாமதமான வளர்ச்சியாக இருந்தாலும் அது நிலையான நீடித்த சித்தாந்த ரீதியான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஒரே ஒரு சதம் வாக்கு வாங்கி பாஜகவிற்கு வந்தாலும் அந்த ஒரு சத வாக்கு வங்கி முழுமையான தமிழக பாஜகவின் வெற்றியாக இருக்க வேண்டும் . அதை சொந்தம் கொண்டாடுவதற்கு வேறு ஒரு கட்சிக்கு இடம் தரக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது அவர்களின் தன்மானம் சுய கௌரவத்தின் வெளிப்பாடு. அவர்களின் தன்மானம் சுய கௌரவத்தோடு விளையாடும் அல்லது அதை அவமதிக்கும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை.
தமிழக பாஜகவின் தலைவருக்கும் அவரின் வியூகங்களுக்கும் தவறான அர்த்தங்களையும் எதிர்மறை விமர்சனங்களை முன்வைக்கும் யாரும் உங்களைப் பார்த்து ஒரு முறை நீங்களே நேருக்கு நேர் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களின் தேசிய சிந்தனை தேசிய அளவில் பாஜக ஆதரவு தமிழக அளவில் பாஜக ஆதரவு மோடி ஆதரவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மோடி என்னும் மகான் கண்டெடுத்த அமித்ஷா என்னும் சாணக்கியன் வழிகாட்டுதலில் நடை போடும் அண்ணாமலைக்கு அவரின் தலைமையிலான தமிழக பாஜகவின் செயல்பாடுகளுக்கு மனசாட்சிப்படி உங்களின் முழுமையான ஆதரவு ஒத்துழைப்புகளை வழங்குங்கள். இல்லை உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் உங்களுக்கு விருப்பமான கட்சிகள் தலைவர்கள் அவர்களின் வெற்றி வியூகங்களுக்கு உங்களின் முழுமையான ஆதரவுகளை பங்களிப்புகளை வழங்குங்கள்.
ஆனால் உங்களுக்கு விருப்பமான யாரோ ஒருவரின் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் தமிழக பாஜகவை பலி கொடுத்து தமிழக பாஜக தலைவரை பலிக்கடாவாக மாற்ற முயல வேண்டாம். அதன் மூலம் ஏதோ ஒரு கட்சி சுயலாபம் அடைவதற்கு நேரடியாக மறைமுகமாக கருத்தியலை உருவாக்கும் துரோகத்தை மட்டும் செய்யாதீர்கள். ஊடகம் என்பது ஜனநாயக தூண் என்ற வகையில் இந்த தேசத்திற்கு இதுவரையில் வழங்கிய பங்களிப்புகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு மாறாத ரணமாக இருக்க கூடும். அதை பல இடங்களில் நீங்களே குறிப்பிடுகிறீர்கள். என்று தமிழக பாஜகவிற்கும் அதன் தலைமைக்கும் கூட நீங்களும் இதையேதான் செய்வீர்கள் எனில் நீங்கள் குறிப்பிடும் அந்த ஊடக தர்மத்திற்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இன்னமும் கூட தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் உங்களின் தேசியவாதம் தேசிய சார்புள்ள உங்களின் கருத்துக்கள் விமர்சனங்கள் மீது கணிசமான மரியாதை இருக்கிறது .ஏதோ ஒரு கட்சியின் லாபத்திற்காகவும் யாரோ ஒரு தனிமனிதரின் சுய லாபத்திற்காகவும் இதை எல்லாம் நீங்கள் இழந்து விடக்கூடாது.
கட்சி அரசியல் சார்பு ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடு . சித்தாந்த ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடு கட்சித் தலைவர்கள் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடு என்பதெல்லாம் முழுக்க முழுக்க அவரவர் தனிமனித சுதந்திரம். அவரவரின் விருப்பங்கள் பேரில் எந்த ஒரு முடிவையும் யாரும் எடுக்க முடியும். அதை நடைமுறைப்படுத்தவும் முடியும் . இந்த விஷயத்தில் யாரும் யாரையும் வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவும் முடியாது. ஆனால் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் உங்களுக்கு எவரின் மீது உண்மையான பற்றுதலும் எவருடைய வெற்றிக்காக நீங்கள் உழைக்க வேண்டும் வியூகங்கள் வகுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அதை 100% அரசியல் வியூகங்களாக நீங்கள் செயல்படுத்துங்கள். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க போவதில்லை.
ஆனால் தேசியவாதிகளாக அடையாளம் காட்டிக் கொண்டு ஊடகவாதிகளாக நிலை நிறுத்திக் கொண்டு பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறோம். பாஜகவின் நன்மைக்காக தான் பேசுகிறோம் என்ற போர்வையிலேயே தமிழக பாஜக தலைவரின் செயல்பாடுகளையும் தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கும் ஊரு விளைவிக்காதீர்கள் . திமுக அதிமுக இடையே குறைந்த பட்ச வித்தியாசம் கூட இல்லை. பாஜக எதிர்ப்பு அண்ணாமலை எதிர்ப்பு என்ற பெயரில் இங்கு திமுக அதிமுக முன் எடுக்கும் சூழ்ச்சிக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. இது இங்குள்ள ஊடகவாதிகள் தேசியவாதிகள் என்ற கருத்தியலில் இயங்கும் யாவரும் அறிந்ததே. இதை எல்லாம் கண்கூடாக பார்த்த பிறகும் அதிமுக பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜக நலன் விரும்பிகளாக இருக்க முடியாது. இவ்வளவையும் பார்த்த பிறகும் துணை போகாதீர்கள். தமிழக பாஜக வளர்ச்சியை ஆதரிக்கா விட்டாலும் பரவாயில்லை. தமிழக பாஜக தலைவரின் உழைப்பு முயற்சிகளை சிதைக்கும் படியாக வேரில் வெந்நீர் ஊற்றாதீர்கள் என்பதே வேண்டுகோள்.