சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்காக கழிவறை உள்ளது. மேலும் தண்ணீர் குடிப்பதற்கு குடிநீர் தொட்டியும் உள்ளது.
இந்நிலையில் பள்ளி கழிவறை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், குடிநீர் தொட்டியானது சரியாக மூடப்படாமல் குப்பை கூழமாக புழுக்கள் உள்ளதாகவும் பள்ளி மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியையோ இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்த மாணவிகளை கண்டித்ததுடன் முட்டி போட வைத்துள்ளார். இதனை வீடியோ எடுத்து மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் பள்ளி வகுப்பறையை புறக்கணித்துவிட்டு பள்ளி வளாகத்தில் அமர்ந்து, தங்களுக்கு சுத்தமான கழிவறையும், சுகாதாரமான குடிநீர் தொட்டியும் அமைத்து தர வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் கூறியவுடன் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். பள்ளி மாணவிகளின் இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.